வைகாசி விசாகம் சிறப்பு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வைகாசி விசாகம் பற்றிய சிறப்பு பதிவுகள் :


   
அழகன் முருகன் தோன்றிய திருநாள் வைகாசி விசாகம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும்.

உலகில் அதர்ம செயல்கள் தலைதூக்கி தர்மம் தடுமாறும் போது நல்லவர்களை காக்கவும், தீயவர்களை அழிப்பதற்காகவும் யுகங்கள் தோறும் அவதாரம் செய்வதாக பகவான் கிருஷ்ணன் கூறுகிறார்.

சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர், முருகன். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உருவாக்கி கங்கை நதியில் விட்டார். வைகாசி மாதத்து விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் இவ்வுலக மக்கள் அனைவரின் உயர்விற்காக உதித்தார்.

‘அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே ஒரு தின முருகன் வந்தாங் குதித்தனன் உலகமுய்ய’ என முருகனின் தோற்றம் பற்றி கந்தபுராணம் கூறுகிறது.

அழகு என்பதற்கு மறு பெயர் முருகு. அழகு உள்ளவன் முருகன். அழகு முருகன் தோன்றிய திருநாள் வைகாசி விசாகம். முருகனை விசாகன் என்றும் விசாகப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்.

சரவண பொய்கையில் விழுந்த அக்னி பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறி ஆறு கிருத்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பராசக்தி எடுத்து அணைக்க அந்த அவை ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளும் கொண்ட ஒரே ஒரு குழந்தையாக மாறின.

முருகன், கார்த்திகைப் பெண்களால் வளர்க்க பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்றும், பக்தர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் ‘குகன்’ ஆகவும், சரவண பொய்கையில் இருந்து வந்ததால் ‘சரவணன்’ என்றும், ஆறு முகங்களை கொண்டவராக இருப்பதால் ‘ஆறுமுகன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். 

துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.

வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தை பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் உண்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘நம ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top