அக்னியில் அவதரித்த ஆறுமுகம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அக்னியில் அவதரித்த ஆறுமுகம் பற்றிய பதிவுகள் :

சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்தவர் ஆறுமுகப் பெருமான். அவரது அவதார தினம் நிகழ்ந்தது வைகாசி விசாகம் நாளில்தான். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாளை தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர். 

விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும்.

தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நட்சத்திரங்களாக அழைக்கப்படுவது கிருத்திகை, பூசம், விசாகம். இந்த நட்சத்திரங்களில் பௌர்ணமி வரும் நாள் முருகனுக்கு உகந்த நாட்களாக சொல்லப்படுகிறது. அதாவது திருக்கார்த்திகை - கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமி, அதே போல் தை மாதம் பௌர்ணமி வரும் நாள் தைப்பூசம், இதே போல் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி வைகாசி விசாகம் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி விசாகம் நட்சத்திரம் வரும் ஜூன் 2 ஆம் நாள் காலை 05.55 மணிக்குத் தொடங்கி, ஜூன் 3 ஆம் நாள் காலை 05.54 வரை உள்ளது.

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.

தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான். வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. 

சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், முருகன். சரவண பொய்கையில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளாயின. அந்தக் குழந்தைகளை ஆறு கிருத்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பராசக்தி எடுத்து அணைக்க அந்த குழந்தைகளும் ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தையாக மாறின.

முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்! எனவே தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள். விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது வேலை வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். இன்றைய தினம் பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும். 

இந்த விசாகத் திருநாளில் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வரலாம். கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.

வடிவேல் முருகனின் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண்டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம். 

இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் நீங்கும். 

வைகாசி விரதம் இருப்பவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் வேண்டிய வரம் கிடைக்கும். 

வைகாசி விசாகம் நாளில் விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ, நம ஓம் முருகா என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம்.

நன்றி. ஜெயலட்சுமி 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top