வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வருகின்ற பிரதோஷ நாளில் சிவன் கோயிலுக்கு சென்று பிரதோஷ பூஜையில் தவறாமல் பங்கேற்பதால் தொழில் முடக்கம், குடும்ப பிரச்சனை போன்றவைகள் நீங்குவதுடன், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
மேலும், சிவபெருமான் அருளால் புத்தி கூர்மையும், பேச்சாற்றலும் கிடைத்து சிறப்பாக செயல்படும் ஆற்றல் கிடைக்கும்.
முருகப்பெருமானின் அவதாரம் வைகாசி விசாகத்தில் ஏற்பட்டதையடுத்து, வைகாசி மாதம் முருகனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகின்றது.
அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் முருகன் குருவாக பார்க்கப்படுகின்ற நிலையில், இன்று குருவார பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு விரதமிருந்து வணங்குகையில், முருகனின் அருளையும் சேர்த்து பெற்றிடலாம்.
எனவே, இன்று வைகாசி வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து சிவபெருமானை வணங்கி விரதமிருக்க வேண்டும்.
பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 7 மணி வரை அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதட்சணம் செய்து, பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்று 2 பிரதோஷங்கள் வருவதன் அடிப்படையில், ஒரு ஆண்டிற்கு 24 பிரதோஷங்கள் வருகின்றன. அவ்வாறு வருகின்ற 24 பிரதோஷ பூஜைகளிலும் கலந்து கொள்வது மிகவும் சிறப்பாகும்.
அதையடுத்து, சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷ பூஜைகளில் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும்.
இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு ஆண்டு பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும் என்று சிவபெருமானே கூறியுள்ளார்.
அதையடுத்து, இன்று வைகை மாத பிரதோஷ பூஜைக்கு தவறாமல் சென்று சிவபெருமானையும், நந்தி பெருமானையும் வணங்கி தரிசிக்க வேண்டும்.
மேலும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், விபூதி, வில்வம் போன்ற அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பது தலைமுறைக்கும் புண்ணியத்தை பெற்றுக்கொடுக்கும்.
பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு அபிஷேகத்தை காண்பது சிறப்பாகும், அதனால், பல தலைமுறைக்கும் புண்ணியத்தை சேர்க்கலாம்.
அதேபோல், சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் பிரகாரம் வலம் வரும்போது பஞ்ச வாத்தியங்கள் இசைப்பது, தேவார, திருவாசகங்கள் படிப்பதும் சிறந்தது.
கோயிலில் இறைவனை வழிபட்ட பின்பு, பக்தர்களுக்கு தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை வழங்குவது சிறப்பானதாகும்.
வைகாசி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவபவர்களுக்கு பிறருடன் ஏற்பட்ட பிரச்சனைகள், மனஸ்தாபங்கள் நீங்கும்.
பிரதோஷ பூஜையில் கலந்து கொள்வதால் கர்ம வினைகள் அனைத்தும் நீங்கி, கடன் பிரச்சனைகள் யாவும் தீர்ந்து விடும்.
தொழிலில் இதுவரை ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கி தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.
குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம், சண்டை சச்சரவு நீங்கும்.
உடல்நல குறைபாடுகள் நீங்கி ஆரோக்கியமாக இருப்பதுடன், நீண்ட காலமாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் விரைவில் நடைபெற தொடங்கும்.
வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ பூஜையில் கலந்து கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்பதால், நல்ல மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும் நறுமணமிக்க பூஜை பொருட்களை வாங்கி சிவ பூஜைக்கு கொடுப்பது சிறப்பாகும்.