நன்மைகளை வாரி வழங்கும் கால பைரவர் வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நன்மைகளை வாரி வழங்கும் கால பைரவர் வழிபாடு பற்றிய பதிவுகள் :

பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் விளங்குகிறது.

சக்தி புராணத்தில் கால பைரவர்

புராண காலத்தில் ஈசனின் மனைவியான தாட்சாயிணி தேவியை அவளின் தந்தை தட்சன் அவமானப் படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டாள். இதனால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்த சிவ பெருமான். தாட்சாயிணியின் உடலை கையில் ஏந்தியவாறு கோபமாக திரிந்தார். இதனால் சிவபெருமானை சாந்தபடுத்த திருமால் தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை பல துண்டுகளாக வெட்டி பாரத தேசமெங்கும் தேவியின் உடல் துண்டுகளை விழச் செய்தார். அந்த இடங்கள் இப்போது சக்தி பீட கோவில்களாக உள்ளன.

இப்போது அம்மனின் சக்தி பீடங்களாக இருக்கும் அந்த புண்ணிய தளங்களை, சிவ பெருமானே பைரவர் வடிவம் தரித்து காவல் புரிவதாக கருதப்படுகிறது. நவகிரகங்களின் பிராணனாக பைரவர் இருப்பதால், நவ கிரகங்களில் எந்த ஒரு கிரக பெயர்ச்சிகளால் தீய பலன்கள் வந்தாலும் பைரவரை வழிபடலாம். நிச்சயம் நற்பலன் கிடைக்கப்பெறும். மேலும், கால பைரவரை பக்தியுடன் வழிபடுவதால் வழக்குகள் கூட சாதகம் ஆகும். முக்கியமாக செய்வினை கோளாறுகள் அகலும். எதிரிகள் பணிவார்கள்.

பைரவர்களில் கால பைரவர் ஏன் சிறந்தவர்?

காசி நகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு பூஜைகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வழிபட்டு இறுதியாக கால பைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது ஐதீகமாகும்.

கால பைரவர் சில சிவன் கோவில்களில் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருவார், ஆடைகள் ஏதுமின்றி 12 கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண கோலத்தில் காட்சி தருவார்.

கால பைரவர், சனி பகவானின் குரு ஆவார். அந்த வகையில் இவரை சனிக் கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சனி தோஷம் தீரும். அதிலும், கால பைரவர் காலத்தை கட்டுப்படுத்தும் பைரவர் ஆவார்.

கால பைரவர் வழிபாடு

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாகும். பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

அபிஷேகப்பிரியரான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். இந்தக் கால பைரவ விரதம் என்பது அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு வாய்ந்ததாகும். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து 21 முறை இருப்பது சிறப்பாகும். அந்த சமயத்தில், கால பைரவரின் மந்திரத்தை ஜபித்தால் என்பது பல மடங்கு நன்மையை நமக்கு செய்யும்.

கால பைரவர் மந்திரம் :

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

"ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்"

மாலை வேளைகளில் சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, மேற்கண்ட மந்திரத்தை 27 முறை கூறி வழிபட தீவினைகள் நீங்கும். மனதிலிருக்கும் வீண் பயங்கள் ஒழியும். குறிப்பாக மரண பயம் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top