நவகிரக தோஷங்கள் நீங்கும் நவபைரவர்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவகிரக தோஷங்கள் நீங்கும் நவபைரவர் பற்றிய பதிவுகள் :

நவ பைரவ மூர்த்திகளை வழிபடுவதால் சூரியன் முதலான நவக்கோள்களின் கிரக தோஷங்கள், தடைகள் நீங்கும், ஸ்ரீ நவ பைரவருக்கு செய்யும் யாக பூஜை ஸ்ரீ நவக்கிரகங்களுக்கு சென்றடையும்.

பைரவர் சிவபெருமானின் அம்சம் ஆவார். சிவபெருமானின் 64 மூர்த்திகளிலிருந்து 64 பைரவ மூர்த்திகள் உள்ளன. 64 பைரவர்களின் அஷ்டபைரவர்கள் அஷ்டதிக்கும் எழுந்தருளி அஷ்ட ஐஸ்வர்யங்களை தருகின்றார்கள். இம் மூர்த்திகளுக்கு அப்பாற்பட்டு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மறைசக்தியாக செயல்பட்டு அருள் பாலிக்கின்றார். 

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து இறையருள் தொழில்களை தமது சிவாய நம என்ற பஞ்சாட்சர தாரக மந்திரத்தின் மூலம் நவக்கோள்களையும் காலச்சக்கரத்தின் நியதிபடி நடத்தி வருபவரே சிவபெருமானின் அம்சமான கால பைரவர் ஆவார்.

இந்த பைரவ மூர்த்தியை நவக்கிரக நாதர்கள் பூஜித்து உரிய பலன்களைப் பெற்றதாக புராணங்கள் கூறுகிறது. 

1. ஸ்ரீ கபாலபைரவர் (ஞாயிறு): 

சூரிய தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சூரியன் நீச்சம், வக்ரம் அஸ்தமன தோஷமுள்ளவர்கள், தந்தையுடன் பிரச்சினை உள்ளவர்கள், அரசு சம்மந்தப்பட்ட பணியில் பிரச்சினை உள்ளவர்கள் இந்த கபால பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும். 

2. ஸ்ரீ உருபைரவர் (திங்கள்) :

சந்திர தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சந்திரன் நீச்சம், வக்ரம், அஸ்தமனதோஷமுள்ளவர்கள், தாயின் உடல்நிலைப் பாதிப்பு, மன அமைதியின்மை போன்றவையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஸ்ரீ உரு பைரவரை வணங்க பிரச்சினைகள் தீரும்.

3. ஸ்ரீ சண்ட பைரவர் (செவ்வாய்): 

செவ்வாய் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், செவ்வாய் நீச்சம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், சகோதரர்களிடம் பிரச்சினை உள்ளவர்கள், நிலம், வீடு சொத்து பிரச்சினை உள்ளவர்கள் இந்த சண்ட பைரவரை வழிப்பட்டால் பிரச்சினைகள் தீரும். 

4. ஸ்ரீ அசிதாங்க பைரவர் (புதன்): 

புதன் தசை, புதன் புத்தி நடப்பில் உள்ளவர்கள், புதன் நீச்சம், வக்ரம் அஸ்தமன தோஷம் உள்ளவர்கள் தாய் மாமன் வகையில் பிரச்சினை உள்ளவர்கள், கல்வியில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த அசிதாங்க பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

5. ஸ்ரீ உன் மத்த பைரவர் (வியாழன்): 

குரு தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு நீச்சம், வக்ரம் ஆஸ்தமன தோஷமுள்ளவர்கள், புத்திர வகையில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த உன் மத்த பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும். 

6. ஸ்ரீ குரோதன பைரவர் (சுக்கிரன்) : 

சுக்கிரன் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சுக்கிரன், நீச்சம், வக்ரம், அஸ்தமன தோஷம் உள்ளவர்கள், திருமண தடை உள்ளவர்கள், வண்டி வாகனங் களில் பிரச்சினை உள்ளவர்கள், கணவன், மனைவியிடையே கோளாறு உள்ளவர்கள் இந்த ஸ்ரீ குரோதன பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும். 

7. ஸ்ரீ சம்ஹார பைரவர் (சனி): 

சனி தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சனி, நீச்சம் வக்ரம் அஸ்தமன தோஷம் உள்ளவர்கள், மாங்கல்ய தோஷம், அடிக்கடி ஆயுளுக்கு உரிய கண்டங்களை அனுபவிப்பவர்கள், கை, கால், பாதிப்பு உள்ளவர்கள், உடலில் அங்கஹீனம் உள்ளவர்கள், வண்டி வாகனங்களில் விபத்தை சந்திப்பவர்கள், எதிரிகளால் தொல்லை அனுபவிப்பவர்கள் இந்த சம்ஹார பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

8. ஸ்ரீ பீஷண பைரவர் (ராகு): 

ராகு தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், ராகு நீச்சம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்சினை உள்ளவர்கள், ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றில் பாதிப்பு உள்ளவர்கள், விஷத்தால் பாதித்தவர்கள் இந்த பீஷண பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும். 

9. ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் (கேது): 

கேது தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், 12-ல் கேது அமையப் பெற்றவர்கள், நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், கேது நீச்சம் ஆனவர்கள், எதிரிகளால் தொல்லையை அனுபவிப்பவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்சினை உள்ளவர்கள், ஏவல், பில்லி, சூனியம் இவற்றால் பாதிப்பு அனுபவிப்பவர்கள், இந்த ஸ்ரீ சொர்ணாகர்ஷனை பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும். ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு ஸ்ரீ கேது பகவானின் ஆதிக்கத்தில் மறைபொருளாக உள்ளன. 

மேற்கண்ட ஸ்ரீ நவ பைரவ மூர்த்திகளை வழிபடுவதால் சூரியன் முதலான நவக்கோள்களின் கிரக தோஷங்கள், தடைகள் நீங்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top