ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணம் முன்னோர் வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணம் முன்னோர் வழிபாடு பற்றிய பதிவுகள் :

அமாவாசை என்பது முக்கிய விரதநாளாகும். அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு ‘ பிதுர் கடன்’ கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் நம்பிக்கை. 

அந்த வகையில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. அதன்படி இந்த ஆடி மாதம் 2 அமாவாசை உள்ளது. அதில் ஆடி 1 அதாவது ஜூலை 17-ம் தேதி முதல் அமாவாசை வந்தது.

இந்த நிலையில் ஆடி 31-ம் தேதி அதாவது ஆகஸ்ட் 16-ம் தேதி 2-வது அமாவாசை வருகிறது. பொதுவாக ஒரு மாதத்தில், ஜென்ம நட்சத்திரம் இரண்டு தினங்கள் வந்தால், 2-வது நட்சத்திரத்தையே நாம் ஜென்ம நட்சத்திரமாக கருத வேண்டும். எனவே 2-வது வரும் அமாவாசையையே ஆடி அமாவாசையாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். 

அந்த வகையில் இந்த ஆடி, 31-ம் தேதி, அதாவது ஆகஸ்ட் 16ம் தேதி வரும் அமாவாசையை கடைபிடிக்க வேண்டும். அமாவாசை திதி ஆகஸ்ட் 15 செவ்வாய்க்கிழமை மதியம் 12.42 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த நாள் ஆகஸ்ட் 16 மதியம் 3.07 வரை அமாவாசை திதி உள்ளது. எனவே சூரிய உதயம் அடிப்படையில் ஆகஸ்ட் 16-ம் தேதி அமாவாசை கணக்கிடப்படுகிறது. 

பித்ரு தோஷ பரிகாரம் செய்ய உகந்த நேரம் : 

ஆகஸ்ட் 16ம் தேதி காலை ஸ்நானம், தானம் செய்வதற்கான நேரம் தொடங்குகிறது. காலை 5.51 முதல் 9.08 வரை நீராடி தானம் செய்யலாம். 

அதிகாலை 4.24 முதல் 5.07 வரை பிரம்ம முஹூர்த்தம் இருக்கும். காலை நீராடிவிட்டு, பூணூல் அணிந்து முன்னோர்களை வணங்கி கருப்பு எள், நீர் வைத்து வழிபட வேண்டும். ஆடி அமாவாசை தினத்தில் பிண்ட தானம், அன்னதானம், பஞ்சபலி கர்மா போன்றவை செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 

எனவே இந்த பித்ரு தோஷ பரிகாரங்களை ஆடி அமாவாசை அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செய்ய வேண்டும். 
அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்?

அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும். பித்ருக்களுக்கு பூஜை செய்து, அந்தணர்களுக்கு பூசணிக்காய், வாழைக்காய், போன்ற காய்கறிகள் தானம் கொடுக்க வேண்டும். 

பின்னர் வீட்டில் இருக்கும் முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும். அமாவாசை தினத்தன்று ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக வழங்கலாம்.

ஆடி அமாவாசை தினம் கோடி சூரிய கிரகணத்திற்கு சமம். எனவே நீர் நிலைகளுக்கு சென்று பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி, வீட்டிலோ அல்லது சிவன் கோயிலிலோ வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். வருடத்தில் வரும் மற்ற அமாவாசை தினங்களில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்து பித்ரு தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். நம் இல்லங்களில் சகல நன்மைகளும் நடக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top