ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் தினம் தினம் திருவிழாதான். ஆடி செவ்வாய் என்பது, கோவில்களுக்கு சென்று அம்மனை முறைப்படி வழிபட வேண்டிய தினம். ஆடி வெள்ளி என்பது, நம் முன்னோர்களோடு சேர்த்து அம்மனை வழிபடவேண்டிய தினம். ஆடி ஞாயிறு என்பது, அன்னதானத்திற்கு உகந்த தினம்.
ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. 'ஆடி செவ்வாய் தேடிக் குளி - அரைத்த மஞ்சள் பூசி குளி" என்பது பழமொழி.
ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமண தடை நீங்கவும், திருமணம் ஆனவர்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தினை கடைபிடிக்கின்றனர்.
ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.
செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் துர்கை மற்றும் முருகபெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணமப் பாக்கியமும் குழந்தை பாகியமும் கிடைக்கும். ஆடிச்செவ்வாயில் மட்டுமன்றிப் பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் அம்பிகையை மட்டுமல்ல முருகப் பெருமானையும் வேண்டி விரதம் கடைப்பிடிப்பது பலன் தரக்கூடியது.
ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து மஞ்சள் பூசிக் குளித்து விரதம் அனுஷ்டித்து அம்மனயும் முருகனையும் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆடிச் செவ்வாயன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் மங்கலம் தங்கும் என்பது மரபு.
ஆடி செவ்வாயில் ஔவையார் நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள். தமிழத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஔவையார் அம்மன் கோவிலில் திருமண தடை தோஷம் நீங்கவும் குழந்தை பேரு கிடைக்கவும் விதவிதமான கொழுக்கடைகளை படைத்து வழிபடுவது வழக்கம்.
ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூரிய உதயத்திற்கு முன்னர் விநாயகரை வணங்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும். அம்மன் வழிபாடு சிறப்பானது.
ஆடி வெள்ளிக்கிழமை சர்க்கரைப் பொங்கல் செய்து துள்ளு மாவு, பானகம், இளநீர் இவைகளை, வாழை இலையில் அம்மனுக்கு நெய்வேத்தியமாக படைத்து அம்மனையும், நம்முடைய முன்னோர்களையும் சேர்த்து மனதார வழிபாடு செய்யும் பட்சத்தில் நம்முடைய வீடு சுபிட்சம் அடையும். அம்மனுக்காக படைத்திருக்கும் இந்த இளநீரை மட்டும் நாம் பருகக் கூடாது. மற்றபடி எல்லா பிரசாரங்களையும் நாம் சாப்பிடலாம். இளநீர் தண்ணீரை மரத்தின் அடியில் ஊற்றி விடலாம்.
ஆடி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ் காய்ச்சி படையலிட உகந்த நாளாகும். ஆடி ஞாயிறு, அன்னதானத்திற்கும் உரிய தினம். கூழ் மற்றும் பலகாரங்களை வீட்டில் சமைக்க வேண்டும். முருங்கைக்கீரை, காராமணி குழம்பு, வாழைக்காய், கத்திரிக்காய், இவைகளோடு சில பேர் வீடுகளில் கொழுக்கட்டையும் செய்வார்கள். இவைகளை சமைத்து ஏழை எளிய மக்களுக்கு கூழுடன் சேர்ந்த பலகாரங்களை தானமாக கொடுத்தால் பலமடங்கு புண்ணியம் கிடைக்கும்.
ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என அம்மனை விரதம் இருந்து வணங்குங்கள் செல்வமும் செல்வாக்கும் குறைவில்லாமல் அதிகரிக்கும்.