ஸ்ரீமந் நாராயணனே, ராம மற்றும் கிருஷ்ண அவதாரத்தின் போது பித்ரு பூஜை செய்ததாக கூறப்படுகிறது. மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தம் முன்னோர்களின் ஆன்மாவை கண்ணால் காணும் பாக்கியத்தை பெற்று இருந்தார்களாம்.
ஒருவர் மரணம் அடைந்த பிறகு, அவர் ஆத்மா என்ன ஆகிறது? எங்கு போகிறது? எப்போது மறுபிறப்பு எடுக்கிறது? இந்த கேள்விகளுக்கு உலகம் முழுவதும் மாறுபட்ட, முரண்பட்ட தகவல்களே பதில்களாக உள்ளன. ஆன்மா மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அவற்றை கண்டு கொள்வதில்லை. ஆன்மா மீது முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள், மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்று அழைத்து உரிய மரியாதை, பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
உலகில் பெரும்பாலான மக்களிடம் பித்ருக்கள் மீதான நம்பிக்கை இருக்கிறது. சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், பித்ரு வழிபாடு செய்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பித்ரு வழிபாட்டை ஆதி தமிழர்கள் இறை வழிபாட்டுக்கு நிகராக கடை பிடித்தனர்.
ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம் (15 நாட்கள்), வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என பல விதமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டு, மிக, மிக துல்லியமாக பித்ரு வழிபாடு செய்தனர். ஒவ்வொரு மாதமும் நாள், ராசி, திதி ஆகியவை ஒன்று சேருவதை கணக்கிட்டு பூஜைகள், விரதங்களை மேற்கொண்டனர். அவர்களது இத்தகைய துல்லியமான கணக்கீடுதான் அவர்களுக்கு 100 சதவீதம் முழுமையான பலன்களைப் பெற்று கொடுத்தது.
அந்த வரிசையில்தான் ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும் மாதமாகிய புரட்டாசியில் மகாளய பட்ச அமாவாசை தர்ப்பண வழிபாட்டை ஏற்படுத்தியிருந்தனர்.
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் மறைந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருவதை கணக்கிட்டு பித்ருக்கள் பசியாற தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறையை ஏற்படுத்தினார்கள். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் பித்ரு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக மகாளய பட்சத்தின் சிறப்புப் பற்றி கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி ஸ்ரீமந் நாராயணனே, ராம அவதாரத்தின் போதும், கிருஷ்ண அவதாரத்தின் போதும் பித்ரு பூஜை செய்ததாக புராணங்களில் தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் இவற்றையெல்லாம் மறந்து விட்டோம்.
முந்தைய யுகங்களில் வாழ்ந்தவர்கள், மிக சரியான முறையின் பித்ரு வழிபாடுகளை செய்ததால், மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தம் முன்னோர்களின் ஆன்மாவை கண்ணால் காணும் பாக்கியத்தை பெற்று இருந்தார்களாம். தற்போதைய கலியுகத்தில் அவை சாத்தியம் இல்லாமல் போய் விட்டது என்கிறார்கள். என்றாலும் நம் முன்னோர்கள் காட்டிய வழியில் மகாளய பட்ச பித்ரு தர்ப்பண வழிபாடுகளை செய்ய வேண்டியது நமது முக்கியமான கடமையாகும்.