ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும் இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்களால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குடும்ப ஒற்றுமைக்காகவும் ஆடிப்பெருக்கு நாள் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 03 ம் தேதி வியாழக்கிழமையன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி துவிதியை திதியும், பிற்பகல் வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் வருகிறது.
வியாழக்கிழமை என்பதால் அன்று காலை 10.45 முதல் 11.45 வரை மட்டுமே நல்ல நேரம் உள்ளது. மாலையில் நல்ல நேரம் கிடையாது. காலை 6 முதல் 07.30 வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது. இதனால் காலை 07.35 மணிக்கு மேல் வழிபாட்டினை துவங்கி, பகல் 01.15 மணிக்கு முன்னதாக முடித்து விடுவது நல்லது.
ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றங்கரையோரம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகளில் கொண்டாட்டம் களைகட்டும். தாமிரபரணி, வைகை ஆற்றங்கரையோரமும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆடிப் பட்டம் தேடி விதை என்பது பழமொழி. சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் இருக்கக் கூடிய வெயில் காலம் முடிந்து ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யத்துவங்கும். விளை நிலங்கள் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் ஆறுகளில் பெருகி வரும் இந்த புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக ஆற்றங்கரையோரங்களில் கொண்டாடப்படுவதுதான் ஆடிப்பெருக்கு.
சங்க நூல்களில் ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு சிறப்பானது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது, நல்ல மணமகன் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
ஆடி பதினெட்டாம் நாள் தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள். காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நாள் ஆடிப்பெருக்கு நன்னாள். ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் காவிரி அன்னையை கர்ப்பிணியாக பாவித்து வளைகாப்பு செய்வது போல பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள்.
ஆண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். சிலரது வீடுகளில் முளைப்பாறி வளர்த்து எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள்.
ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் விரதமிருந்து வழிபட்டால் மனம் போல மாங்கல்யம் கிடைக்கும். நல்ல கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள்.
சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஆடிப்பெருக்கு நாளில் காவிரி அன்னையை வழிபடுவார்கள்.
வீட்டில் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் சமைத்து ஆற்றங்கரையோரத்திற்கு சென்று அன்னைக்கு படையல் போட்டு வழிபட்டு சொந்த பந்தங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள்.