ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 ஆலயங்களையும் "திருப்பதி" என்றுதான் அழைக்கின்றனர். ஆனால் ஊரை சொல்லாமல் திருப்பதி என்று சொன்ன மாத்திரத்திலேயே அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய தலம் வேங்கடவன் கோவில் கொண்டுள்ள திருப்பதிதான்.
"வேங்"என்றால் பாவம்., "கடா" என்றால் தீர்த்து வைக்கும் சக்தியுள்ளவன் என்று பொருள். அதனால்தான் வேங்கடேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
கலியுக கடவுளாக பக்தர்களின் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் இஷ்ட தெய்வமாக திகழும் வேங்கடேஸ்வரரை பக்தர்கள் திருமலைவாசா, ஸ்ரீனிவாசா, ஏழுமலையான், ஏழுகொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா, மலையப்பான் என்று பலவாறு உள்ளம் உருகி அழைத்து வழிபடுகிறார்கள்.
அவரது பெயரை போல திருமலைக்கும் ஏழு பெயர்கள் உண்டு.
1. ஆதிசேஷன் உருவத்தை ஒத்திருப்பதால் சேஷாசலம்.
2. வேதங்கள் நிலை கொண்டு இருப்பதால் வேதாசலம்.
3. கருடனால் பூலோகத்தை அடைந்த காரணத்தினால் கருடாசலம்.
4. விருஷன் எனும் அரக்கன் மரணம் அடைந்து மோட்சம் பெற்றதால் விருஷபாத்திரி.
5. அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்ற காரணத்தினால் அஞ்சனாத்திரி.
6. வாயுதேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் உண்டான சண்டையால் ஆனந்தகிரி.
7. பாவங்கள் தீர்க்கும் காரணத்தினால் வேங்கடாசலம் என அழைக்கப்படுகிறது.