திருநீறு மகத்துவம், வகைகள், அணியும் முறை

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருநீறு மகத்துவம் பற்றிய பதிவுகள் :


திருநீறின் விளக்கம் :

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான், ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது. 

சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

திருநீறு என்று அழைக்கப்படும் விபூதியானது நம் கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. இதன் மகத்துவம் என்னவென்றால், விபூதியை நாம் பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமாக, விபூதி என்பது சக்தியை வழங்குவதற்கு ஏதுவான சாதனம். அதுமட்டுமல்லாமல், நம் உடலின் சக்தி ஓட்டத்தை வழிநடத்தவும், கட்டுப்படுத்தவும் நாம் விபூதியை பயன்படுத்த முடியும்.

இது தவிர, இதை நம் உடலில் வைத்துக் கொள்வது, நம் நிலையற்ற தன்மையை நமக்கு தொடர்ந்து நினைவூட்டுவதாகவும் இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் நாம் இறக்க நேரிடும். இறந்துவிட்டால், இந்தச் சாம்பல் தான் மிஞ்சும் என்று தொடர்ந்து நம் நினைவில் இருக்கச் செய்யும்.

யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள். அப்படிப் பயன்படுத்த முடியாது என்றால், அதற்கு ஒரு மாற்றாக பசுவின் சாணத்தை உபயோகிக்கலாம். அத்துடன் வேறு சிலவற்றையும் கலந்து தான் விபூதி செய்வோம் என்றாலும், அடிப்படைப் பொருள் பசுவின் சாணம் தான். இந்த சாம்பலையும் உபயோகிக்க முடியவில்லை என்றால், அடுத்ததாக அரிசியின் உமியைக் கொண்டு தயாரித்த விபூதியை பயன்படுத்தலாம். இது, உடல் என்பது பிரதானம் அல்ல, அது வெறும் உமி என்பதை குறிக்கும்.

திருநீறு வகைகள்:

1. கல்பம்

2. அணுகல்பம்

3. உபகல்பம்

4. அகல்பம்

5. இரட்சை

6. சாரம்

7. பஸ்மம்

8. பசிதம்

9. விபூதி


1. கல்பம் :

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.

2. அணுகல்பம்

ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

3. உபகல்பம்

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

4. அகல்பம்

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

5. இரட்சை : 

சுமனை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது ஈசானிய முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது சிவப்பு நிறத்தினை உடையது. இப்பசுவின் சானத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு இரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.

6. சாரம்

சுசீலை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது தற்புருச முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு சாரம் என்று அழைக்கப்பெறுகிறது.

7. பஸ்மம்

சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது.

8. பசிதம்

பத்திரை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது வாமதேவ முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்பெறுகிறது.

9. விபூதி

தந்தை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது சத்தியோசாத முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது கபில நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது.


நாம் ஏன் விபூதி பயன்படுத்த வேண்டும்?

விபூதியை முறையாகத் தயாரித்து, அதை உடலில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால், விபூதி உங்கள் உள்வாங்கும் தன்மையை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், இதை உங்கள் உடலில் நீங்கள் எங்கு வைக்கிறீர்களோ, அவ்விடத்தின் கிரகிக்கும் திறன் அதிகரித்து, நீங்கள் உயர்ந்த பரிமாணத்தை நோக்கிச் செல்ல வழிசெய்கிறது. 

அதனால், காலையில் நீங்கள் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன், விபூதியை உங்கள் உடலின் குறிப்பிட்ட சில இடங்களில் பூசிக் கொண்டால், அது, உங்களை சுற்றி இருக்கும் தெய்வீக சக்தியை நீங்கள் உள்வாங்கக் கை கொடுக்கும் தீயவற்றை அல்ல.

விபூதியை எடுக்க உங்கள் மோதிர விரலையும் கட்டைவிரலையும் பயன்படுத்த வேண்டும். வாழ்வை நாம் ஏழு பரிமாணங்களில் உணர முடியும். இந்த ஏழு பரிமாணங்களைக் குறிக்கும் விதத்தில் நம் உடலின் சக்திநிலையில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளன. 

இந்த சக்கரங்கள், நம் சக்தி உடலின் சந்திப்பு மையங்கள். இவை மிகவும் சூட்சுமமானவை. இவை கண்களுக்கு புலப்படாது. அனுபவப்பூர்வமாக இந்தச் சக்கரங்களை நாம் உணர முடியுமே தவிர, உடலை இரண்டாக வெட்டி பார்த்தால் இவற்றைப் பார்க்க முடியாது. உங்கள் சக்தி மேன்மேலும் தீவிரமாகும் போது, இயற்கையாகவே உங்கள் சக்தி ஒரு சக்கரத்திலிருந்து அடுத்த சக்கரத்திற்கு உயரும். 

சக்தியின் தீவிரத்தைப் பொறுத்து தான் நாம் வாழ்வை உணரும் விதம் அமைகிறது. உயர்நிலை சக்கரங்கள் வழியே நாம் வாழ்வை உணர்வதற்கும், அடிநிலை சக்கரம் வழியே வாழ்வை உணர்வதற்கும், சூழ்நிலை ஒன்றாகவே இருந்தாலும், நம் அனுபவம் பெரிதும் வித்தியாசப்படும்.


திருநீறு அணியும் இடங்கள் :

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை

தலை நடுவில் (உச்சி)

நெற்றி

மார்பு

தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.

இடது தோள்

வலது தோள்

இடது கையின் நடுவில்

வலது கையின் நடுவில்

இடது மணிக்கட்டு

வலது மணிக்கட்டு

இடது இடுப்பு

வலது இடுப்பு

இடது கால் நடுவில்

வலது கால் நடுவில்

முதுகுக்குக் கீழ்

கழுத்து முழுவதும்

வலது காதில் ஒரு பொட்டு

இடது காதில் ஒரு பொட்டு


அணியும் முறை :

வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். 

கையில் எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். 

ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.

நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை உத்தூளனம் எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை திரிபுண்டரம் எனப்படும்.


இதனால் கிடைக்கும் பலன்கள்:

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளும் சாரும் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே!

திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும், திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு முறை பாவங்களை செய்த ஒருவன் இறந்துபோனான். 

அவனுடைய வாசலில் இருந்த சாம்பலில் புரண்டு எழுந்த நாயொன்று அவன் மீது நடந்து சென்றது. அப்போது அந்த நாயின் கால்களிலிருந்த சாம்பாலனது அவனுடைய உடலில் பட்டது. அவன் உடலில் திருநீறு இருப்பதை அறிந்த யமதூதர்கள் விலகினர், அவனுடைய உயிரினை சிவகணங்கள் கையிலாயத்திற்கு எடுத்து சென்றன.

இந்த கதையானது திருநீறு அணிவதால் அவனுடைய பாவங்கள் போகின்றன என்பதை மக்களுக்கு கூறுகிறதாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top