சென்னையில் பல பகுதிகளில் வீரபத்திரர் ஆலயங்கள் சிறப்பாக உள்ளன. அவற்றில் ராயபுரம் குமாரசாமி சந்தில் இருக்கும் "அருள்மிகு பத்ரகாளி அம்மன் வீரபத்திரர் ஆலயம்" தனிச்சிறப்புகள் கொண்டது.
தற்போது இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த ஆலயத்தில் கடந்த 1995 மற்றும் 2007ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இத்தலத்தில் பத்ரகாளிக்கு தனி சன்னதி உள்ளது. வைஷ்ணவி, பிரம்மி, மகேஸ்வரி ஆகியோரது சிலைகளும் உள்ளன. தெட்சிணாமூர்த்தி, பைரவரும் இங்கு வழிபட படுகின்றனர்.
இத்தலத்து வீரபத்திரர் சுமார் 9 அடி உயரத்துக்கு கம்பீரமாக உள்ளார். இவர் இத்தலத்துக்குள் பூமிக்குள் இருந்து கிடைத்தவர் என்பது குறிப்பிடத்தக்து.
இவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபாடு செய்தால் 96 நாட்களில் நினைத்தது நிறைவேறுகிறது.
இதனால் ஏராளமான பக்தர்கள், வெகு தொலைவில் இருந்து கூட வந்து செல்கிறார்கள். ராகுவுக்கு அதிபதி துர்க்கை. துர்க்கைக்கு அதிபதி காளி. இதனால் இத்தலம் சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் திகழ்கிறது.
காளஹஸ்தி செல்ல இயலாதவர்கள் இங்கு அந்த பூஜைகளை செய்து பலன் பெறலாம். சித்ரா பவுர்ணமி தினத்தன்று இத்தலத்தில் 10 நாள் விழா நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மாலை 5 மணிக்கு வீரபத்திரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.