ஸ்ரீ சத்ய நாராயண பூஜை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ சத்ய நாராயண பூஜை பற்றிய பதிவுகள் :

இஷ்ட தெய்வங்களை வணங்கி பூஜித்தால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். அதை போல சத்ய நாராயண பூஜை செய்வது நம் அனைவருக்கும் நன்மையை அளிக்க கூடிய பூஜையாகும். 

மகாவிஷ்ணுவின் திருப்பெயரே ஸ்ரீ சத்ய நாராயணர் ஆகும். சத்ய நாராயண பூஜையை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும்.

ஸ்ரீ சத்ய நாராயண பூஜை :

பௌர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்கவேண்டும். மஹாவிஷ்ணுவின் ஓர் அம்சம்தான் சத்ய நாராயணர் என்பதால் அன்று மாலைப் பொழுதுவரை விஷ்ணு ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டிருக்கலாம். 

பூஜையறையிலேயே இந்த பூஜையை அனுசரித்தால் விசேஷம் அல்லது பூஜை செய்வதற்காக தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை சுத்தம் செய்து, மாவுக்கோலம் போட்டுக்கொள்ளுங்கள்.

அந்த இடத்தில் சின்னதாக மண்டபம் அமைத்து அதில் சத்ய நாராயணர் விக்ரகம் அல்லது படத்தை வைத்து பூஜை செய்யலாம். மண்டபத்துக்குச் சின்னதாக ஒரு மாவிலைத் தோரணம் கட்டிக்கொள்ளுங்கள். 

மனையில் விக்ரகம் அல்லது படத்தை வைப்பதற்கு முன்னால் அதை நன்கு துடைத்து சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். இரண்டு வாழைக் கன்று வாங்கி இருபக்கமும் சாய்த்து வையுங்கள்.

நீங்கள் பூஜையை ஆரம்பிக்கும்போது, உங்களுக்கு இடது பக்கத்தில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு சேர்த்துப் போட்டுக்கொள்ளுங்கள். அதன்மேல் அரிசியைப் பரப்பி வைத்துக்கொள்ளுங்கள். 

ஆறுமுனை உள்ள ஷட்கோணம் (நட்சத்திரம் போல) கோலத்தை அதன்மேல் விரலால் வரைந்து கொள்ளுங்கள். சுத்தமான நீர் நிரப்பிய ஒரு சொம்பை கோலத்தில் வையுங்கள். 

சொம்பில் கழுத்தைச் சுற்றி ஒரு பூச்சரத்தைக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். சொம்பிற்கு சந்தனம் குங்குமம் இடுங்கள். கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தை செருகி வையுங்கள்.

அதன் நடுவே மஞ்சள் பூசிய தேங்காயை வையுங்கள். பிறகு விநாயகரை மனதார வணங்கிவிட்டு பூஜையை ஆரம்பியுங்கள். விஷ்ணு ஸ்தோத்திரங்களைச் சொல்லுங்கள். சத்ய நாராயணர் அஷ்டோத்திரம் சொல்லிக்கொண்டே உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

பூஜை முடிந்ததும் பாயசம், வடை என்று பிரசாதங்கள் நிவேதனம் செய்யுங்கள். அடுத்து, கற்பூரம் காட்டி இந்த பூஜையை நிறைவு செய்யலாம். பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வெளியே வந்து, வானில் பூரணமாக ஒளிரும் சந்திரனைப் பார்த்து தரிசனம் செய்துவிட்டு நிவேதனப் பொருட்களை உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம்.

சத்ய நாராயண பூஜை விரதமிருப்பதாக வேண்டிக்கொண்டு எந்த கோரிக்கை நிறைவேறவேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த கோரிக்கை நிறைவேறியதும் மறந்துவிடாமல் கண்டிப்பாக சத்ய நாராயண பூஜையை அனுசரித்துவிடவேண்டும். பிறருக்கு தீங்கு விளைவிக்காத கோரிக்கை எதுவானாலும் சத்ய நாராயணர் நிறைவேற்றி வைப்பார் என்று நம்புங்கள். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.

இப்பூஜையின் போது சத்ய நாராயணரின் வரலாற்றை விவரிக்கும் கதையை, பூஜை செய்பவர்கள் அல்லது வயதான பெரியவர்கள் யாராவது கூறவேண்டும்.

சிறப்புகள் :

சத்ய நாராயண பூஜையை செய்பவர்கள் பகவானின் அருளை பூரணமாக பெறுவார்கள். ஏழ்மை விலகி செல்வம் சேரும். பயம் நீங்கும். பக்தர்கள் விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும்.

இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் புத்திர பாக்கியம், செல்வம், பதவி, திருமண யோகம், மோட்சம் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும்.

பௌர்ணமியன்று இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமை மற்றும் தீபாவளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் ஜாதகத்தில் சந்திரன் அனுகூலமாக இருக்கும் போது செய்யலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top