கண்கண்ட தெய்வமான பெருமாளை வணங்கி வழிபாடு செய்தால் அனைத்து கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு ஆண்டும், சில மாதங்களில் விரத நாட்கள் வரும். ஆனால், புரட்டாசி மாதத்தில் மட்டும் மாதம் முழுவதுமே விரத நாளாக அமைகிறது.
புரட்டாசி வெள்ளி, புரட்டாசி முதல் சனி, சனி விரதம், நவராத்திரி விரதம், சித்தி விநாயக விரதம், சஷ்டி விரதம், அனந்த விரதம், அமுக்தாபரண விரதம், ஜேஷ்டா விரதம், மஹாலட்சுமி விரதம், மகாளயப் பட்சம், மகாளய அமாவாசை என்று திருவிழாவாக அமைகிறது.
சித்தி விநாயக விரதம்:
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகருக்காக இருக்கும் விரதமே இந்த சித்தி விநாயக விரதம். இந்த நாளில் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் காரியங்களில் வெற்றி உண்டாகும்.
சஷ்டி லலிதா விரதம்:
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரி அம்மனை நினைத்து கடைபிடிக்கப்படும் விரதமே இந்த சஷ்டி லலிதா விரதம். இந்த நாளில் விரதமிருந்து பரமேஸ்வரியை வழிபட்டால் சர்வ மங்களமும் கிடைக்கும்.
அனந்த விரதம்:
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி நாளில் கடைபிடிக்கப்படும். இந்த விரதத்தை கடைபிடித்தால் தீராத வினைகள் தீரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
அமுக்தாபரண விரதம்:
புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில் கடைபிடிக்க வேண்டிய விரதம் அமுக்தாபரண விரதம். இந்த நாளில் விரதமிருந்து உமா – மகேஸ்வரரை வழிபட சந்ததி செழிக்கும்.
ஜேஷ்டா விரதம்:
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி நாளில் மேற்கொள்ள வேண்டிய விரதம் ஜேஷ்டா விரதம். இந்த விரத நாளில், அருகம்புல் கொண்டு சிவன் மற்றும் விநாயகப் பெருமானை வழிபட குடும்பம் செழிக்கும்.
மகாலட்சுமி விரதம்:
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் 16 நாட்கள் லட்சுமி தேவியை வணங்கி வழிபட்டு வருவதை குறிக்கும் விரதம் தான் இந்த மகாலட்சுமி விரதம். இந்த விரதம் மேற்கொண்டு வந்தால் வறுமை நீங்கி, வாழ்க்கை வளம் பெறும்.
கபிலா சஷ்டி விரதம்:
புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில், சூரிய பகவானை நினைத்து பூஜை செய்து, பழுப்பு நிறத்தில் இருக்கும் பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் தான் இந்த கபிலா சஷ்டி விரதம். இவ்விரதம் மேற்கொண்டால் சித்திகளை தரும்.
மகாளய பட்சம்:
மகாளயப் பட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள் வரும் பிரதமை திதியில் துவங்கி புரட்டாசி மாதம் வரும் அமாவாசை வரை நீடிக்கும்.
மறைந்த நமது முன்னோர்களை அவரவர் விரும்பக் கூடிய இடங்களுக்கு சென்று வர எமதர்மராஜா அனுப்பி வைப்பாராம். அப்படி அவர்கள் செல்லும் நாள் தான் மகாளப் பட்சம் ஆரம்பிக்கும் நாள்.
அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி 13 ஆம் தேதி செப்டம்பர் 30 ஆம் தேதி சனிக்கிழமை மகாளய பட்சம் தொடங்கி, செப்டம்பர் 15 ஆம் தேதி புரட்டாசி 28 ஆம் தேதி முடிகிறது.
பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மகாளய பட்சத்தில் வீட்டிற்கு வரும் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படி செய்வதன் மூலமாக குழந்தை பாக்கியம் கிட்டும், சுப காரியத் தடை நீங்கும், தீராத நோயும் தீரும், விபத்துக்கள் தடுக்கப்படும்.
திருவோண விரதம்:
இந்த விரதம் மேற்கொள்பவர்கள் முதல் இரவிலிருந்து சாப்பிடாமல் இருக்க வேண்டும். திருவோண விரத நாளின் போது காலை எழுந்து குளித்து முடித்து பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்கி வழிபட்டு வர வேண்டும்.
காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பிற்பகலில் உணவு உப்பு சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிட வேண்டும்.