பல குடும்பங்களில் உணர்வுப்பூர்வமான விழாவாக கொண்டாடப்படும் கிரகப்பிரவேச நிகழ்ச்சிகளின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்கள் பற்றி வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.
சுப தினம் :
சுப நிகழ்ச்சிகளுக்காக, குடும்ப வழக்கப்படி குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுப்பது பொதுவான முறையாகும். அதன்படி கிரகப்பிரவேசத்திற்கான நாளை தேர்ந்தெடுப்பது முதல் கட்டமாகும்.
வாஸ்து சாந்தி :
கிரகப்பிரவேசம் நடக்கும் நாளுக்கு முன் தினம் வாஸ்து சாந்தி என்ற பூஜை நடத்தப்படும். அதாவது, புது வீட்டின் எட்டு திக்குகளிலும் வாசம் செய்யும் அஷ்டதிக் பாலகர்களுக்கான பூஜைகளும், வாஸ்து ரீதியான குறைகள் அகல வேண்டும் என்ற பூஜையும் விஷேசமாக செய்யப்படும்.
பூஜைக்கான இடம் :
புது வீட்டிலுள்ள மையப்பகுதியில் பூஜை மற்றும் ஹோமம் செய்வதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்படும். அதற்கு முன்னதாக அந்த இடம் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம்.
கிழக்கு முகம் :
பூஜைக்குரிய கடவுள் படங்கள் அல்லது சிலைகளை கிழக்கு முகமாக வைக்கப்படுவது சம்பிரதாயமான முறையாகும். சற்று உயரமாக அதற்கேற்ற அமைப்புகளை செய்து கொள்ள வேண்டும்.
நுழையும் விதம் :
புது வீட்டுக்குள் நுழைய உள்ள தம்பதிகள் தங்களது வலது காலை எடுத்து வைத்து தான் உள்ளே செல்ல வேண்டும். பொதுவாகவே, புதுமனை புகுவிழா சமயங்களில் எப்போதுமே வலது காலை முன் வைத்து செல்வதையே பழக்கமாக்கிக்கொள்வது நல்லது.
கதவு, நிலை அலங்காரம் :
தலைவாசல் மற்றும் கதவுநிலைகள் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து, மஞ்சள் மற்றும் குங்குமம் கொண்டு பொட்டிட்டு, வாசனை மலர்களால் நன்றாக அலங்காரம் செய்ய வேண்டும். குறிப்பாக, நிலைகளுக்கு மேற்புறத்தில் மாவிலை தோரணம் மற்றும் பெரிய அளவிலான வாசனை மலர்களால் கட்டப்பட்ட மாலைகளை சூட்டுவது முக்கியம்.
வாசலில் கோலம் :
தலைவாசலுக்கு முன்புறம் அழகிய வண்ணங்களில் கோலங்கள் இடப்பட்டு, மலர்களால் அலங்கரித்து அதன் மத்தியில் அகல் விளக்கை ஏற்றி வைப்பது மங்களங்களை அளிக்கும்.
மங்களப் பொருட்கள் :
கிரகப்பிரவேச பூஜைகள் முற்றிலுமாக பூர்த்தி அடைவதற்கு முன்னதாக புது வீட்டுக்குள் பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வது கூடாது. கிரகப்பிரவேச நாளுக்கு முன் தினம் மாலை நேரத்தில் உப்பு, மஞ்சள், குடம் நிறைய தண்ணீர் ஆகியவற்றை புது வீட்டின் சமையலறையில் வைப்பது பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது.
திருஷ்டி சுற்றல் :
கிரகப்பிரவேசம் நடத்தும் தம்பதிகள் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் திருஷ்டி பரிகாரமாக பூசணிக்காய் அல்லது தேங்காய் சுற்றி அதை வெளிப்புற தெருமுனையில் உடைப்பது வழக்கமாகும்.