எந்த ஒரு விஷேசம் என்றாலும் முதன்மை கடவுளாக விநாயகரை தான் வழிபடுவோம். இதனால் தானோ என்னவோ பலருக்கும் விநாயகர் மிகவும் விருப்பமான கடவுளாக விளங்குகிறார். மேலும், அனைத்து தெருக்களிலும் விநாயகர் சிலையை வைத்து வணங்குவார்கள்.
முழு முதற் கடவுளான விநாயகரின் மனதை குளிர வைக்க ஏராளமான அபிஷேகங்கள் உள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அரச மரத்தடியில் மேற்கு நோக்கி இருக்கும் விநாயகரை பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் தொழிலில் லாபம் பெருகும்.
வேப்ப மரத்தடியில் கிழக்கு திசை நோக்கி இருக்கும் விநாயகரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் மனதிற்கு விரும்பியபடி திருமணம் நடைபெறும்.
புன்னை மரத்தடி விநாயகரை ஆயில்ய நட்சத்திரத்தன்று இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும்.
மகிழ மரத்தடி விநாயகருக்கு அனுஷம் நட்சத்திரத்தன்று மாதுளம் பழ அபிஷேகம் செய்து வழிபட்டால் பில்லி, சூனியம், திருஷ்டி என அனைத்தும் நீங்கும்.
ஆல மரத்தடியில் வடக்கு நோக்கி இருக்கும் விநாயகருக்கு மகம் நட்சத்திரத்தன்று அபிஷேகம் செய்து வழிபட்டால் நோய்கள் நீங்கும்.
மாமரத்தடி விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்.
வன்னி மரத்தடியில் உள்ள விநாயகருக்கு அவிட்ட நட்சத்திரத்தன்று நெல் பொரி கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைபட்ட திருமணங்கள் கைகூடும். மேலும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
பொதுவாக உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
பரணி, ரோகிணி, புனர்பூசம், அஸ்தம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மை உண்டாகும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகருக்கு தேன் அபிஷேகம் செய்வது நல்லது.
மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் நல்லது நடக்கும்.
தர்மசிந்தனையிலே கடலைப் போன்றவர், அண்ட சராசரங்களை படைக்கின்றவர் தான் இறைவன். அனைத்து தெய்வங்களும் சக்தி வாய்ந்தவைதான்.
அதேசமயம் முதலில் பிள்ளையார் சுழி போட்டுதான் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவது மரபு. எனவே அனைத்து தெய்வங்களின் சக்திகளும் ஒன்றுசேர்ந்த அம்சமாக விளங்குகின்றவர் விநாயகர். அவரை சரணடைந்தால் பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடலாம்.
விநாயகர் துதி :
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.