திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது.
ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது.
தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்புகள் :
தோஷங்களில் பலவகையான தோஷங்கள் உள்ளன. அவற்றில் சந்திர தோஷமும் முக்கியமான ஒன்றாகும்.
ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்.
தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவதுடன், திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும்.
எல்லா மாதங்களிலும் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வேண்டி விரதம் இருந்தாலும் ஆவணி திருவோண விரதம் மிக முக்கியமானதாகும்.
திருவோண விரதம் இருக்கும் முறை :
ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று அதிகாலையில் தலைக்கு நீராடி, கடவுளைத் துதித்து, பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசிமாலை அணிவித்து, அல்லது வீட்டில் உள்ள பெருமாளின் படத்திற்கு துளசி கிடைத்தால் அதையோ அல்லது வேறு உகந்த புஷ்பத்தையோ அணிவித்து, மனமார வேண்டிக்கொள்ளவும்.
பின்னர், அன்று உண்ணப்போகும் உணவுப் பொருள் எதுவாக இருப்பினும், அதில் உப்பு சேர்க்காமல், உண்ண வேண்டும்.
ஒருவேளை அரிசி உணவும், மற்ற வேளைக்கு, சிற்றுண்டி, பால், பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால் வேண்டியது நிறைவேறும் என்பது திண்ணம்.
பலன்கள் :
காலை வழிபாடு - நோய் குணமாகும்.
நண்பகல் வழிபாடு - செல்வம் பெருகும்.
மாலை வழிபாடு - பாவம் நீங்கும்.
அர்த்தயாம வழிபாடு - முக்தி கிடைக்கும்.