துர்கா பூஜை வரலாறு, முக்கியத்துவம், விழாவைக் கொண்டாடும் முறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துர்கா பூஜை வரலாறு, முக்கியத்துவம், விழாவைக் கொண்டாடும் முறைகள் பற்றிய பதிவுகள் :

நமது கலாச்சாரத்தில் துர்கா பூஜை மிக முக்கியமான பண்டிகை. 9 நாட்கள் துர்கையை பூஜித்து கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவிற்கு ஆழமான வரலாறு இருக்கிறது. 

துர்கா பூஜை வரலாறு:

மகிசாசுரன் என்ற அரக்கணை துர்கை வதம் செய்தது தான் துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. மகிசாசுரனை துர்க்கை அன்னை வீழ்த்தியது தீயதை நல்லது வெல்லும் என்ற அறத்தை நிரூபிப்பதற்காகவே. 

நவராத்திரியின் 7வது நாளில் தான் துர்கை மகிசாசுரனுக்கு எதிரான போரை தொடங்கினார். இதை மகா சப்தமி என்று கூறுகிறோம். விஜய தசமி நாளில் அவர் மகிசாசுரனை வதம் செய்வார். துர்கை அன்னை சக்தியின் அவதாரமாக தரிசிக்கப்படுகிறார்.

துர்கா பூஜையின் முக்கியத்துவம்:

தீயனவற்றை அழிக்கும் அன்னையாக துர்கா அருள்பாலிக்கிறார். அவர் தனது பத்து கைகளிலும் அசுரனை வதம் செய்வதற்கான ஆயுதங்களை வைத்திருப்பார். சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பார். துர்கா தேவி நல்லவர்களின் பாதுகாவலராக இருக்கிறார். பவானி, அம்பா, சண்டிகா, கவுரி, பார்வதி, மகிசாசுரமர்த்தினி போன்ற பெயர்களால் அவர் அறியப்படுகிறார்.

துர்கா பூஜை கொண்டாட்டம் தொடங்கியது எப்போது?

துர்கா பூஜை என்பது வங்காளத்து நிலச்சுவாந்தார்களால் 1757 முதல் ஒருங்கிணைப்படுகிறது. ராஜா நபக்ருஷ்ண தேவ் தான் முதலில் இதனை முன்னெடுத்தார். இவர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். ஆனால் ஆரம்பகாலங்களில் அனைத்து மக்களும் பங்குகொள்ளும் வகையில் இந்த விழா இல்லை. பின்னர் 20ஆம் நூற்றாண்டில் தான் சாமான்யர்களும் கூட துர்கா பூஜா விழாவினைக் கொண்டாட அனுமதிக்கப்பட்டனர். 

துர்கா தேவி தீமையை வெல்லும் அன்னையாக மட்டும் அல்ல இந்திய சுதந்திரப் போரில் வெற்றி தரும் அன்னையாகவும் கருதப்பட்டார். ஜெய் காளி என்று சொல்லியே பலரும் துர்கா தேவியைக் கொண்டாடினர்.

நவராத்திரியின் போது செய்யக்கூடியது செய்யக்கூடாதது:

1. நாம் எப்போதும் பெண்களை அவமதிக்கக் கூடாது. நவராத்திரி விழா முழுவதும் உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களை போற்றி மகிழும்படி இருக்க வேண்டும்.

2. அமைதியான வீடு தான் மகிழ்ச்சியையும் வளத்தையும் வரவேற்கும் இல்லமாக இருக்கும். ஆகையால் குடும்பத்தினுள் சண்டை, சச்சரவுகள், போராட்டங்கள் இருந்தால் என்னதான் நவராத்திரி நாளில் விழுந்து விழுந்து பூஜைகள் செய்தாலும் கூட பலன் இருக்காது.

3. துர்கா நவராத்திரியின் போது அசைவம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. அகண்ட ஜோதி ஏற்றி வழிபடுபவர்கள் என்றால் 9 நாட்களிலும் எந்த ஒரு விதிமுறையையும் மீறாமல் கடைபிடியுங்கள்.

5. துர்கை அன்னைக்கு படையல் போட்ட பின்னர் முதலில் சிறு பெண் குழந்தைகள் உணவருந்திய பின்னர் மற்றவர்களுக்கு உணவளியுங்கள்.

6. நவராத்திரி பிரசாதங்களில் வெங்காயம், பூண்டு பயன்படுத்தக்கூடாது.

7. சிலர் நவராத்திரி காலத்தில் தலைமுடி வெட்டுவது, முகச்சவரம் செய்வதைத் தவிர்ப்பார்கள்.

8. நவராத்திரி நாட்களில் துர்கை சப்தசதி ஸ்லோகங்களை வாசித்தல் நல்லது.

9. நவராத்திரியின்போது மது அருந்துதல், புகையிலை சுவைத்தல் கூடாது.

10. நவராத்திரியில் முக்கியமான பூஜை வேளைகளில் தூங்கக் கூடாது.

துர்கா பூஜையை விரதத்தைக் கடைப்பிடித்து, நிறைவான பலன்களைப் பெறுவோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top