கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவியையும், அம்பிகை பலவிதமான ஆயுதங்களை பூஜை செய்து வழிபட்ட நாள் என்பதால் நாம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து ஆயுத பூஜையையும் கொண்டாடுகிறோம்.
மாணவர்கள் கல்வியில் சிறப்பதற்கு கண்டிப்பாக வழிபட வேண்டிய நாளாகவும் சரஸ்வதி பூஜை சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு எந்த தேதியில், எந்த நேரத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வழிபாட்டினை செய்வதற்கும், குழந்தைகள் கல்வியை துவக்கும் வித்யாரம்பம் செய்வதற்கும் நல்ல நேரம் எது என்பதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி வழிபாடு :
ஆடி மாதத்தை போல் அம்மனை வழிபட்டு, அவளின் அருளை பெறுவதற்கும் மிகவும் உகந்த காலம் நவராத்திரியாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையை பல்வேறு ரூபங்களில் வழிபட்டு, அவளின் அருளை பெறுவதற்குரிய காலமாகும்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட வேண்டும். முப்பெரும் தேவியரையும் வழிபட்டு, அருள் பெறுவதற்கான காலமாகும்.
சரஸ்வதி பூஜை, விஜய தசமி :
மகிஷன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக அன்னை பராசக்தி தவம் இருந்து, அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பலவிதமான சக்திகளையும், ஆயுதங்களையும் பெற்ற ஒன்பது நாட்களையும் நாம் நவராத்திரியாக கொண்டாடுகிறோம்.
நவராத்திரிக்கு பிறகு வரும் பத்தாவது நாளில் அன்னை மகிஷனுடன் போரிட்டு, வதம் செய்து, வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம். மகிஷனை அழிப்பதற்காக அம்பிகை எடுத்த சக்தி வாய்ந்த ரூபத்தையே மகிஷாசுரமர்த்தி ரூபம் ஆகும்.
இதனால் நவராத்திரியின் கடைசி நாளும், விஜயதசமி நாளும் அம்பிகையை வழிபடுபவர்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை அக்டோபர் 23 ம் தேதியும், விஜயதசமி அக்டோபர் 24 ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் எந்த நேரத்தில் பூஜை செய்து வழிபடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்ல நேரம் :
நவராத்திரியின் எட்டாவது நாளான அக்டோபர் 22 - ல் சிலர் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்து வழிபடும் வழக்கம் உண்டு. அன்றைய தினம் மாலை 06.10 முதல் 9 வரையிலான நேரத்தில் பூஜை செய்து வழிபடலாம்.
அக்டோபர் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாலை 04.30 முதல் 6 வரை ராகு காலம் உள்ளது. அன்று மாலை 05.36 வரை அஷ்டமி திதி உள்ளது. அதனால் மாலை 06.10 மணிக்கு பிறகே சரஸ்வதி பூஜை வழிபாட்டை செய்வது சிறப்பானதாகும்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபாட்டு நேரம் :
அக்டோபர் 23 ம் தேதி நவராத்திரியின் நிறைவு மற்றும் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை கொண்டாடுபவர்கள் காலை 4 முதல் 07.20 மணி வரை பூஜை செய்யலாம்.
அந்த நேரத்தில் முடியாதவர்கள் காலை 09.05 முதல் 10.25 மணி வரையிலான நேரத்திலோ அல்லது பகல் 12 முதல் 2 மணி வரையிலான நேரத்திலோ பூஜை செய்து வழிபடலாம்.
மாலையில் சரஸ்வதி பூஜை வழிபாடு செய்பவர்கள் 6 மணிக்கு பிறகு வழிபாட்டை மேற்கொள்ளலாம். சரஸ்வதி பூஜை அன்றே சிலர் தங்களின் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் வழக்கம் உண்டு. இவர்கள் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து மற்ற நேரத்தில் வித்யாரம்பம் செய்து வைக்கலாம்.