கார்த்திகை தீபம், விளக்கு ஏற்றும் முறை, பிரசாதம் மற்றும் வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கார்த்திகை தீபம், விளக்கு ஏற்றும் முறை, பிரசாதம் மற்றும் வழிபாடு பற்றிய பதிவுகள் :

திருக்கார்த்திகை தீபத்திருநாள்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் காலம் காலமாக கொண்டாடப்படும் ஒரு பழமையான பண்டிகையாகும். சங்க இலக்கியங்களிலும், புராணக்கதைகளிலும் கூட திருக்கார்த்திகை திருநாள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பஞ்சப்பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னரே நாம் அனைவரும் நம் வீட்டில் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்நாளில் சிவபெருமானின் நாம் ஏற்றும் ஜோதி வடிவத்தில் காட்சி தருகிறார்!
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை திருத்தலம்.

காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் தான் இந்த திருவண்ணாமலை! பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் இந்த திருக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும். இக்கோயிலைப் பற்றிய சிறப்புகள் ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் இருக்கின்றன. இந்நாளில் திருவண்ணாமலை ஏற்றப்படும் மகாதீபம் திருவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதை தவறவிடாதீர்கள்.

பழமையான திருக்கார்த்திகை திருவிழா
நம் மனித வாழ்வில் தீபம் என்ற ஒன்று இன்றியமையாததாக இருந்து வருகிறது. விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூட புராணங்களில் சொல்லப் பட்டிருக்கிறது. தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள அனைவராலும் அனுசரிக்கப்படும் தீபத் திருவிழாவான இது தமிழ் நாட்காட்டியின்படி கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த விழா எப்போது ஆரம்பித்தது என்பதற்கான சரியான தகவல்கள் இல்லை. அந்த அளவிற்கு இந்த திருவிழா பழமையானதாம்!

திருக்கார்த்திகை திருவிழா 2023

கார்த்திகை மாதம் தொடங்கிய முதல் நாளில் இந்தாண்டு கார்த்திகை தீபத்திருநாள் கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வெள்ளி கற்பக விருக்ஷம், வெள்ளி ரதம், ரிஷப வாகனம் என கோலாகலமாக தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்கு மலை மேல் பிரமாண்டமாக மகா தீபம் ஏற்றப்படும்.

விளக்கு ஏற்றும் முறை

அடிவாசலில் வைக்கப்படும் இரு விளக்குகள் மட்டும் புதியதாக இருந்தால் போதும். நீங்கள் ஏற்கனவே முந்தைய கார்த்திகை தீபத்திற்கு உபயோகப்படுத்திய பழைய விளக்குகளையே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஏற்றவேண்டிய விளக்குகள் அனைத்தையும் முந்தைய நாளே சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். துடைத்து, மஞ்சள், குங்குமமிட்டு பூ வைத்து திரி போட்டு, எண்ணெய் ஊற்றி தயார் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். விளக்கு ஏற்றும் போது, அதற்கு விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். மீதி எண்ணெய்களில் விளக்கு ஏற்றக்கூடாது. அதனால் எந்த நன்மையும் பயக்காது.

விளக்கு ஏற்றுவதால் வரும் நன்மைகள்

திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். இந்த 27 விளக்குகள், 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது. 27 விளக்குகள் ஏற்ற முடியாதவர்கள், குறைந்தது 9 தீபங்களை ஏற்றலாம். முக்கியமாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்கை ஏற்றுவது சிறப்பு. வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பிரசாதம் மற்றும் வழிபாடு

உங்களால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து வைத்து சுவாமி வழிபாடு செய்யலாம். சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், கொழுக்கட்டை, சுண்டல் அல்லது சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பொறி உருண்டை செய்து வைத்து படைக்கலாம். இதற்காகவே கடைகளில் அன்றைய தினத்தில் கார்த்திகை பொறி விற்கப்படும். அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, மலர்களால் பூஜை செய்து, திருவாசசம் அல்லது சிவபுராணம் படியுங்கள். மறக்காமல் தீபத்திருநாளன்று வீட்டில், அலுவலங்களில், கடைகளில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். எண்ணிய காரியம் கைகூடும். 

ஓம் நமசிவாய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top