திருமாலின் வாகனங்களில் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுபவர், கருட பகவான். இவரே திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார். அனைத்து ஆலயங்களிலும் பெருமாளுக்கு எதிரே கருடனின் சிலை இருப்பதைக் காணலாம். அந்த கருட பகவானைப் பற்றிய சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
* கருட பகவான், திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே ‘கருட சேவை’ எனப்படும். அப்போது பெருமாள், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடைப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.
* ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.
* கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.
* கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.
* கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.