சபரிமலை கோவிலில் உள்ள பிற சன்னதிகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சபரிமலை கோவிலில் உள்ள பிற சன்னதிகள் பற்றிய பதிவுகள் :

சுவாமி ஐயப்பன் இருக்கும் சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். 

மகிஷியை வதம் செய்த பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என கூறப்படுகிறது. 

மஞ்சமாதா :

மஞ்சள் மாதா சன்னதி ஐயப்பன் சன்னதிக்கு பின்புறம் உள்ளது. இந்த தேவியை மாளிகாபுரத்தம்மன் என்றும் அழைப்பது உண்டு.

மகிஷியின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி, ஐயப்பன் முன் மண்டியிட, அவளுக்கு மாளிகாபுரத்தம்மன் என்று ஐயன் பெயர் சூட்டி அருளினார். மேலும், ஐயப்பனை திருமணம் செய்யக் காத்திருக்கும் கன்னித் தெய்வமாகவும் திகழ்கிறாள்.

இங்கு மஞ்சள்பொடி தூவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி, பூஜை செய்ய வேண்டும். இந்த மாளிகாபுரத்தம்மன் சன்னதியில் வேண்டிக்கொண்டால், திருமண பாக்கியம் கைகூடும்.

இந்தச் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட துணியை, திருமணமாகாத கன்னிப் பெண்கள் தைத்து, அணிந்துகொண்டால், உடனடியாக திருமணம் கைகூடும். ஜாதக ரீதியாக சனிதோஷம் உள்ளவர்கள் கொடுகொட்டி கலைஞர்களை பாடச்செய்து மஞ்சமாதாவை வணங்கி வருவர்.

நவகிரக சன்னதி :

மஞ்சள் மாதா சன்னதிக்கு பின்புறம் நவகிரக சன்னதி உள்ளது. இங்குள்ள நவகிரகங்கள், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை.

கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். தோஷம் உள்ளவர்கள், இந்தச் சன்னதியில் கொடிகொட்டிப் பாடல் பாடி வழிபடுவது வழக்கம்.

மணிமண்டபம் :

மஞ்சள் மாதா சன்னதியின் பின்புறத்தில் மணிமண்டபம் உள்ளது. இந்த இடத்தில்தான், ஆதிகாலத்தில் அகத்தியர் லலிதா சாஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்தார்.

இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் அல்லது ஸ்லோகம் சொன்னால், நாம் வேண்டியது நடக்கும். 

சபரிமலைக்கு மணி கட்டுவது என்று சொல்லுவது உண்டு. பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நினைத்துக் கொண்டு இங்கே மணி கட்ட வேண்டும். இந்த மணியிலிருந்து எழும் ஓசையானது, ஐயப்பனிடத்தில் நமது வேண்டுதல்களை எடுத்துச் செல்லும் ஓசையாக இருக்கும்.

அதனால் குறைகள் தீர்ந்து வேண்டுதல்கள் யாவும் உடனுக்குடன் நடைபெறுவதாக நம்பிக்கை. சபரிமலையில் பிற இடங்களில் மணி கட்டுவதை விட, இந்த மணி மண்டபத்தில் கட்டுவதே சிறப்பு.

ஜோதி தரிசனம் :

எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகரசங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்று மட்டும், தியானத்திலிருந்து சாஸ்தா கண் திறப்பதாக ஐதீகம். 

அதன் தொடர் நிகழ்வாக, வானில் ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் ஒளிரும், அப்படி ஒளிரும் நட்சத்திரமே சாஸ்தாவாக நம்பப்படுகிறது. 

அத்துடன் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் சன்னிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சிதருவார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top