அனுமன் ஜெயந்தி 2024

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அனுமன் ஜெயந்தி பற்றிய பதிவுகள் :

கலியுகத்திலும் ராம நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் ஓடிச் சென்று, அடக்கமாக அமர்ந்து ராம நாமத்தை கேட்டு மகிழ்வதுடன், ராமனை வணங்குபவர்களுக்கும், ராம நாமத்தை சொல்லுபவர்களுக்கும் உடனடியாக அருளக் கூடியவர். 

நித்திய பிரம்மசாரியான அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால் வெண்ணெய் உருகுவது போல் நம்முடைய கஷ்டங்களும் உடனடியாக உருகி காணாமல் போய் விடும் என்பது நம்பிக்கை.

ராமாயணத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர் அனுமன். ராம பக்தன், வாயு புத்திரன், சிரஞ்ஜீவி, மாருதி, ஆஞ்சநேயர் என பலவிதமான பெயர்களால் அழைக்கப்படும் அனுமன் சிவபெருமானின் ருத்ர அம்சமாக கருதப்படுகிறார். மகாவிஷ்ணு, ராம அவதாரம் எடுக்கப் போகிறார் என்றதும் அவருக்கு சேவை செய்வதில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள அனைத்து தெய்வங்களும் முன் வந்தன. 

அப்படி ராமனுக்கு சேவை செய்வதற்காக சிவபெருமான் எடுத்த அவதாரம் தான் அனுமன். அதனால் தான் அனுமனை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் வணங்கிய பலன் கிடைக்கும் என சொல்வதுண்டு.

அனுமன் வழிபாடு :

வானர குலத்தை சேர்ந்த அஞ்சனைக்கும், கேசரிக்கும் மகனாக அவதரித்தவர் அனுமன். இவர் மார்கழி மாதம் அமாவாசை திதியில், மூல நட்சத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் தமிழகத்தில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 

அதே சமயம் இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் வடமாநிலங்களில் சித்திரை மாதத்திலேயே அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆந்திராவின் சில பகுதிகளில் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.

அனுமன் ஜெயந்தி 2024 :

தமிழகத்தில் மார்கழி மாத அமாவாசை தினமாக ஜனவரி 11, 2024 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 10ம் தேதி இரவு 08.05 மணி துவங்கி, ஜனவரி 11ம் தேதி மாலை 06.31 வரை அமாவாசை திதி உள்ளது. 

அனுமனை வழிபடும் முறை :

அனுமன் ஜெயந்தி அன்று ராமர் கோவில், பெருமாள் கோவில் அல்லது அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். முடிந்தவர்கள் வடைமாலை சாற்றி வழிபடலாம். 

இந்த நாளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் நினைத்த காரியல்களில் வெற்றி கிடைக்கும். ஸ்ரீராம ஜெயம் எழுதியும் மாலை கட்டி போடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள அனுமன் படத்தை மஞ்சள் நிற பூக்களால் அலங்கரித்து, துளசி சாற்றி வழிபடலாம். 

நைவேத்தியமாக அவல், பொரி, கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை படைத்து வழிபடலாம்.

அனுமன் வழிபாட்டு பலன்கள் :

அனுமன் ஜெயந்தி அன்று ஸ்ரீராம ஜெயம் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரிக்கலாம். ஸ்ரீராம ஜெயம் எழுதுவதும், சுந்தர காண்டம் படிப்பதும் மிக நல்ல பலனை கொடுக்கும். அனுமனுக்குரிய மந்திரங்கள், அனுமன் சாலிசா படிப்பது மிகவும் சிறப்பானது. 

அனுமன் ஜெயந்தி அன்று இது போல் அனுமனை வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். நன்மைகள் பெருகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் பெருகும். மன பயங்கள் நீங்கி, தைரியம் பிறக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top