ஆஞ்சநேயர் கோவில், ராமர் கோவில், பெருமாள் என பல கோவில்களில் அனுமனில் பல்வேறு ரூபங்களை நாம் தரிசித்திருப்போம். பெரும்பாலான கோவில்களில் அபயஹஸ்தம் காட்டிய நிலையிலேயே காட்சி அளிப்பார். ஆனால் சில இடங்களில் பக்த ஆஞ்சநேயர் என்ற பெயரில் மிக அடக்கமாக கைகளை கூப்பி, வணங்கியபடி அமர்ந்திருப்பார்.
அனுமன் கைகளை கூப்பியபடி அமர்ந்திருக்கும் காட்சியை ராமருக்கு அருகில் பார்த்திருப்போம். ஆனால் ராமர் இல்லாமல் தனியாக இருக்கும் போதும், எதிரே இருக்கும் பக்தர்களை வணங்கியபடி காட்சி அளிப்பார்.
ஆஞ்சநேயரின் திருக்கோலம் :
பொதுவாக கோவில்களுக்கு சென்றால் அனைத்து தெய்வங்களும், தனக்கு எதிரில் வந்து நின்று வணங்கும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் கோலத்தில் அபயஹஸ்தம் காட்சி தான் காட்சி அளிப்பார்கள். ஆனால் பக்த ஆஞ்சநேயர் மட்டும் தன்னை வணங்க வரும் பக்தர்களை நோக்கி, மிக அடக்கமாக மண்டியிட்டு, கைகளை கூப்பியபடி காட்சி தருவார். இந்த கோலத்திற்கு மிக முக்கியமான காரணம் உள்ளது. இது ராமர் மீது அவர் கொண்ட அளவு கடந்த பக்தியின் வழிபாடாகும்.
அனுமனை கைகளை கூப்பி இருக்க காரணம் :
அதாவது, அனுமன் கோவிலுக்கு சென்றதும் யாராலும் ஸ்ரீராமரை நினைக்காமல் இருக்க முடியாது. அனுமன் எதிரில் போய் நின்றதும் நம்முடைய மனதில் தானாக ஸ்ரீராமரை பற்றிய எண்ணம் வந்து விடும். அதே போல் அனுமனை கண்டதும் அவருக்குரிய மந்திரங்களை ஜபித்து வணங்கி, வழிபடுகிறோமோ இல்லையோ.
ஆனால் கண்டிப்பாக நம்மையும் அறியாமல் நம்முடைய மனமும், வாயும் "ஜெய் ஸ்ரீராம்", "ஸ்ரீராம ஜெயம்" ஆகிய மந்திரங்களை உச்சரித்து விடும். நாம் ராமரை நினைத்து, ராம நாமத்தை உச்சரித்ததும் நமக்குள் ராமர் வந்து விடுகிறார். எதிரே நிற்கும் பக்தனின் மனதில் தோன்றும் ராம பிரானையும், ராம நாமத்தையும் வணங்குவதற்காகவே பக்த ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார்.
பக்த ஆஞ்சநேயர் என்றால் ராம பக்தன் அனுமன் என்பத மட்டும் பொருள் கிடையாது. ராமரை நினைக்கும், அவரை வணங்கும் பக்தனுக்கும் பக்தனாக இருக்க கூடியவர் என்றும் பொருள்.
கண்ணீர் வடித்த அனுமன் :
ராமாயணத்தில் ராவண வதம் முடிந்து, சீதையை மீட்டு இலங்கையில் இருந்த அயோத்திக்கு திரும்பிய ராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அளவில்லாத மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
ஆடி, பாடி உற்சாகத்தில் கூத்தாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அனுமன் மட்டும் ராமரின் பட்டாபிஷேக கோலத்தை கண்டு தரிசித்தபடி, கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் விட்டபடி ஓரமாக ஒதுங்கி நின்றார்.
ராமனிடம் அனுமன் கேட்ட வரம் :
அனுமனை கவனித்த ராமர் அருகில் அழைத்து, "அனைவரும் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருக்கும் போது நீ மட்டும் ஏன் இவ்வாறு ஓரமாக ஒதுங்கி நிற்கிறாய்? ராமாயணம் உருவாவதற்கும், இவ்வளவு பெரிய வெற்றி எனக்கு கிடைத்ததற்கும் ஆணி வேராக இருந்தவனே நீ தான்? உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றார்.
தான் வணங்கும் ராம பிரானே இவ்வாறு கேட்டதும் அவர் முன் மண்டியிட்டு அமர்ந்த அனுமன், " சுவாமி, எப்போதும் உங்கள் அருகிலேயே இருந்து, உங்களை வணங்கி, போற்றி பாடி, ராம சேவை புரிய வேண்டும். இந்த வரத்தை மட்டும் எனக்கு தந்தருள வேண்டும்" என கேட்டார். அன்ற அளித்த வரத்தின் பேரிலேயே பக்த ஆஞ்சநேயராக ராமரை வணங்கிய கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார்.