2024 தமிழர் திருநாளான தை பொங்கல்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 2024 தமிழர் திருநாளான தை பொங்கல் பற்றிய பதிவுகள் :

புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வரும். தை மாதத்தில் பொங்கும் பொங்கல் போல நாள் முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

சூரியனின் பயணம்: 

தை மாதம் முதல் சூரியன் மகர ராசியில் நுழைகிறார். சூரியன் தனது பயணத்தை வடதிசை நோக்கி தொடங்குகிறார். சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. தை முதல்நாள் உத்தரயணத்தின் துவக்கம் ஆனி மாதம் முடியும் வரை உத்தராயணம். ஆடி மாதம் முதல் மார்கழி முடிய தட்சிணாயணம்.

சூரிய வழிபாடு: 

உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. ஜீவராசிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான ஜீவனை தரும் சூரியனை போற்றும் விதமாகவும், விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அறுவடை திருநாள்: 

பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. போகி தொடங்கி காணும் பொங்கல் வரைக்கும் கிராமங்களில் உற்சாகம் பொங்கி வழியும். எத்தனையோ திருவிழாக்கள் வந்தாலும் பொங்கல் திருவிழா என்பது அனைவராலும் மகிழ்ச்சி பொங்க இன்றைக்கும் கிராமங்களில் சிறப்பாக வீடுகளில் கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது.

களை கட்டும் கொண்டாட்டம்: 

அறுவடைத்திருநாளான பொங்கல் திருநாளுக்காக 10 நாட்களுக்கு முன்பே வீடுகளுக்கு வெள்ளையடித்து தயாராவது தமிழர் மரபு. வீடுகளை அலங்கரித்து மாவிலை தோரணங்கள் கட்டி, சிறுபீழைப்பூக்கள், கம்பு, ஆவாரம்பூ, வேப்பிலை வைத்து காப்பு கட்டி பொங்கலை வரவேற்பார்கள்.

போகி பண்டிகை: 

இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகை துவங்கி, ஜனவரி 17 ம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது இந்திர விழா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. விவசாயம் செழிக்க மழை வளத்தை தரும் இந்திரனுக்கு விழா எடுப்பதே போகி பண்டிகை.

தை பொங்கல் எப்போது: 

உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தை பொங்கல் மிக முக்கியமான நாள். பொங்கல் பண்டிகை வழக்கமாக ஜனவரி 14ஆம் தேதிதான் கொண்டாப்படும். பல வருடங்களுக்கு ஒருமுறை ஜனவரி 15 கொண்டாடப்படும். அது போல இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் மகர சங்கராந்தியாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் வைக்க நல்ல நேரம் : 

ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை தை முதல் நாள் வீட்டு வாசலில் பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை பொங்கல் வைக்கலாம். தைப் பொங்கல் நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புது ஆடைகள் அணிந்து சூரியபகவானை வழிபடுவார்கள். கிராமப்புறங்களில் மக்கள் இந்த தை பொங்கலை திறந்த வெளியில் அல்லது தங்கள் வீட்டின் முற்றத்தில் கிழக்கு நோக்கி பொங்கல் வைப்பார்கள். கரும்பு, காய்கறிகள், பழங்கள், கிழங்குகள் படைத்து சூரியனை வழிபடுவார்கள். இயற்கையை வழிபடுவதன் மூலம் செல்வ வளம் பெருகும் வாழ்வும் செழிக்கும் என்பது நம்பிக்கை.

மாட்டுப்பொங்கல்

உழவர்களின் தோழனாக விவசாயம் செழிக்க உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தை 02ஆம் தேதி மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. கால்நடைகள் வசிக்கும் மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து கோலமிட்டு சாம்பிராணி புகை போட்டு கால்நடைகளை அலங்கரிக்க வேண்டும். பகல் 11.00 முதல் 12.00 வரை மாட்டு தொழுவத்தில் பொங்கலிடலாம். மாலை 05.16 முதல் 06.16 வரை பொங்கல் வைக்க நல்ல நேரமாகும்.

உறவுகளுடன் கொண்டாட்டம்: 

காணும் பொங்கல் நாளில் உறவுகளுடன் சேர்ந்து உற்சாகமாக பொங்கல் கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை நாளில் மகிழ்ச்சி பொங்க சகோதர சகோதரிகளுடன் இணைந்து கொண்டாட்டங்கள் களைகட்டும். கிராமங்களில் விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டிகள் என நான்கு நாட்களும் திருவிழா கோலமாக காட்சியளிக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top