ஒவ்வொரு தசா புக்திகளுக்கான பரிகார ஸ்தலங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஒவ்வொரு தசா புக்திகளுக்கான பரிகார ஸ்தலங்கள் பற்றிய பதிவுகள் :

திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களின் பாய்ந்தோடும் தாமிர பரணி நதியின் கரைகளில் நவகைலாசம் என ஒன்பது சிவாலயங்கள் அமைந்துள்ளன. இவை நவகிரக பரிகார ஸ்தலங்களாக அமைந்துள்ளன. அவை 

1. பாபநாசம் – சூரியன்
2. சேரன் மகாதேவி – சந்திரன்
3. கோடக நல்லூர் – செவ்வாய்
4. குன்னத்தூர் – ராகு
5. முறப்ப நாடு – குரு
6. ஸ்ரீவைகுண்டம் – சனி
7. தென்திருப்பேரை – புதன் 
8. ராஜாபதி – கேது
9. சேர்ந்தபூமங்கலம் –சுக்கிரன் 

அகத்திய மாமுனிவரின் அறிவுரைப்படி அவரின் சீடர்களில் ஒருவர் தாமிர பரணி நதி உற்பத்தியாகுமிடத்தில் ஒன்பது மலர்களை விட்டார். அவர் மலர்களை விட்ட இடத்திற்கு சிந்துபூந்துறை என்று பெயர். அந்த இடமே தற்போதைய பாபநாசம் திருக்கோயிலாகும். 

பாபநாசம் திருக்கோயில் பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அகத்தியரின் சீடர் விட்ட ஒன்பது மலர்கள் தாமிரபரணி நதிக்கரையில் ஒன்பது இடங்களில் ஒதுங்கின. அந்த ஒன்பது இடங்களிலும் ஒன்பது கோயில்களை அகத்தியரின் சீடர் கட்டினார். 

அந்த ஒன்பது கோயில்களே நவகைலாசங்கள் என அழைக்கப்படுகின்றன. அகத்தியரின் சீடர் விட்ட மலர்களில் கடைசி மலர் சேர்ந்த இடமே சேர்ந்த பூமங்கலம் என அழைக்கப்படுகிறது. தாமிர பரணி நதி கடலில் கலக்குமிடத்திற்கு அருகே சேர்ந்தபூமங்கலம் அமைந்துள்ளது.

திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ள நவகைலாசங்களை சர்ப்ப ரூபம் என குறிப்பிடுகின்றனர். வளைந்து நெளிந்து செல்லும் நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருகோயில்களை கற்பனைக்கோடுகளால் இணைத்துப்பார்த்தால் அது சர்ப்ப ரூபமாகவே காட்சியளிக்கிறது. எனவே சர்ப்ப தோச நிவாரணத்திற்கு இந்த ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் பலன் கிடைக்கும்.

மேலும் இந்த கோயில்கள் அமைந்துள்ள வரிசை முறையை கவனித்து பார்த்தால் ஒரு சூட்சுமம் புலப்படுகிறது. அதாவது கிரகங்களின் விம்சோத்தரி தசா வரிசை முறை எப்படி அமைந்துள்ளதோ, அதே வரிசைமுறையில் இந்த கோயில்கள் அமைந்துள்ளன. 

விம்சோத்தரி தசையில் கிரக வரிசை கேதுவில் தொடங்கி கேது – சுக்கிரன் – சூரியன் – சந்திரன் - செவ்வாய் – ராகு – குரு – சனி – புதன் என அமையும். இந்த கோயில்கள் சூரியனில் தொடங்கி சூரியன் – சந்திரன் - செவ்வாய் – ராகு - குரு – சனி – புதன் - கேது – சுக்கிரன் என வரிசையாக அமைந்துள்ளன. 

கும்பகோணத்தை சுற்றி நவக்கிரக பரிகார ஸ்தலங்களாக ஒன்பது திருக்கோயில் அமைந்துள்ளன. அவைகளைப் பற்றிய விவரங்கள் கிட்டத்தட்ட எல்லா பஞ்சாங்கங்களிலும் கொடுத்திருக்கிறார்கள். கோட்சார கிரகங்களால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து விடுபட மட்டும் இந்த திருக்கோயிகளில் பரிகாரங்கள் செய்யலாம். 

தசா – புக்திகளால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து விடுபட திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ள நவகைலாசங்களிலேயே பரிகாரம் செய்யவேண்டும். இந்த ரகசியம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி ஒன்பது பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இவை நவ திருப்பதிகள் என அழைக்கப்படுகின்றன. இங்கும் நவக்கிரக தோசத்திற்கு பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

1. ஸ்ரீவைகுண்டம் – சூரியன்
2. நத்தம் – சந்திரன்
3. திருக்கோளூர் – செவ்வாய்
4. திருப்புளியங்குடி – புதன்
5. திருக்குருகூர் – குரு
6. தென்திருப்பேரை – சுக்கிரன்
7.பெருங்குளம் – சனி
8. திருதொலைவில்லி மங்கலம் வடக்கு – ராகு
9. திருதொலைவில்லி மங்கலம் தெற்கு – கேது 

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளை கருட ரூபம் என குறிப்பிடுகின்றனர். அதாவது இந்த ஒன்பது திருப்பதிகளையும் கற்பனைக்கோடுகளால் இணைத்துப்பார்த்தால் கருட ரூபம் கிடைக்கிறது. எனவேதான் இங்கு நடைபெறும் கருட சேவை விசேசமாக கருதப்படுகிறது. 

தன் தாய்க்காக அமிர்த கலசத்தை வின்னுலகிலிருந்து தூக்கி வந்தவர் கருட பகவான். மேலும் இவர் சர்ப்பங்களின் எதிரி. எனவே இந்த ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் சர்ப்ப தோசம் நீங்கும். தீராத வியாதிகள் அனைத்தும் தீரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top