தைப்பூசத்திருநாள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தைப்பூசத்திருநாள் பற்றிய சிறப்பு பதிவுகள் :

தைப்பூசம் என்பது உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 

தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல சிறப்புகள் மிக்க தைப்பூச திருநாள் அன்று விரதம் இருப்பது விசேஷம்

தைப்பூசத்தன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மேலும் மனமுருகி விரதமிருந்து கந்தர் பதிகங்கள் பாராயணம் செய்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். முருகன், சிவபெருமான் , பராசக்தியை வழிபடுவது நல்லது.

தைப்பூச நாளில் முருகனை விரதமிருந்து காவடி எடுத்து வழிபட்டால் சகல செல்வமுடன் அஷ்ட ஐஸ்வர்யம், ஆனந்த வாழ்வு அருவார் முருகர். 

தைப்பூசத்தன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற்காரியங்களை செய்யலாம்.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் . சிதம்பரம் சித்ஸபையில் நடராஜர் நடனமாடிய நாள் தைபூசம்.

எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
எங்குஞ் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாயிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.

- திருமந்திரம்

பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் பெரும் தவம் செய்து வேண்டியதற்கு இணங்க, சிதம்பரத்தில் தை மாதம், பூச நட்சத்திரம், பெளர்ணமி, பகல் நேரம் கூடிய நன்னேரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் கொண்டருளினார்.

மூர்த்தி : ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.

தேவர்கள், ரிஷிகள், கணங்கள் வேண்டியதற்கு இணங்க, முன்னர் வரம் அளித்தபடி, சிவபெருமான் ஆனந்த நடனக் காட்சி நல்க பூலோகம் வரும் நேரம் வந்தது.

தை மாதம் - மகிழ்ச்சி பொங்கும் மாதம். சூரியன் தனது அயனத்தை (பாதையை) மாற்றும் மாதம். யோக குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு உரிய நக்ஷத்திரம் பூசம். ஆடுவதும் (dynamic) அவரே, அமைதியும் அவரே (static) என்றுணர்த்தவே, ஆட்டமாடி ஆட்டுவிக்க, ஆடாமல் ஆட்டுவிக்கும் யோக தக்ஷிணாமூர்த்திக்குரிய நாள், நக்ஷத்திரம், பகல் நேரம் என உத்தமமான வேளை வந்தது.

தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.

அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் ஆடியருளினார் 

இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.

தைப்பூச நன்னாளில் தில்லை சிவகங்கையில் நீராடி சிவபாதசேகரன், குலோத்துங்க சோழர்கள் பூச நாளில் அன்னப்பாவாடை மகா நிவேதனம் செய்தனர் என செப்பேடு கூறுகிறது, சிவ கங்கையில் நீராடி, ஆனந்த நடனமிடக் காரணமாகிய ஸ்ரீ மூலநாதரையும், பொன்னம்பலத்தில் விளங்கும் ஸ்ரீ நடராஜ ராஜரையும் தரிசித்து பேரின்பப் பயன்பெறுவோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top