மாட்டுப் பொங்கல்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாட்டுப் பொங்கல் பற்றிய சிறப்பு பதிவுகள் :

தை மாதத்தின் முதல் நாளை நாம் பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம். இது தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக கருதப்படுகிறது. 

நம்முடைய நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடாகும். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் மழையும் பனியும் அதிகமாக இருக்கும் என்பதால் இவைகள் வயலில் விதை விதைப்பதற்கு உகந்த காலம் இல்லை என கருதப்படுகிறது. 

ஆனால் அடுத்து வரும் தை மாதத்தில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை துவக்குவதால் வெயில், குளிர் ஆகிய இரண்டும் கலந்த இதமான சீதோஷன நிலை காணப்படும். இது விதை விதைப்பதற்கான காலமாகும், ஏற்கனவே விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுகிறது. 

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவே தை மாதப்பிறப்பு பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் :

இயற்கையை தெய்வமாக வழிபடும் பழக்கம் நம்மிடம் காலம் காலமாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் உழவு தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தி, வழிபடும் நாளாக தை முதல் நாளை பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம். 

இயற்கைக்கு அடுத்த படியாக உழவு தொழிலுக்கு விவசாயிக்கு உற்ற துணையாக இருக்கும் மாடுகளுக்கும் நன்றி செலுத்தி, கெரளவிக்கும் நாளாக பொங்கல் பண்டிகையின் 2ம் நாளில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். 

நகரப் பகுதிகளில் பொங்கல் திருநாளன்று மட்டும் வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் கிராமப்புறங்களில் தற்போதும் பொங்கல், மாட்டுப் பொங்கல் இரண்டு நாட்களுமே பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. 

பொங்கலன்று வீட்டின் வாசலிலும், மாட்டுப் பொங்கலன்று மாட்டுத் தொழுவத்திலும் பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளது.

மாட்டுப் பொங்கல் சிறப்புகள் :

மாடு, மகாலட்சுமியின் அம்சமாக கருதுப்படுவதாலும், மாட்டின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக சொல்லப்படுவதாலும் மாட்டுப் பொங்கல் என்பது செல்வத்தை வரவேற்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. 

மாட்டுப் பொங்கல் அன்று காலையிலேயே மாடுகளை சுத்தமாக குளிக்க வைத்து, சந்தனம், குங்குமம் வைத்து, அதன் கொம்புகளுக்கும் வண்ணங்கள் தீட்டி அலங்கரிப்பதுண்டு. மாட்டின் கொம்பில் பரிவட்டம் போல் வேட்டி, துண்டுகளை கட்டி கெளரவிக்கும் வழக்கமும் சில பகுதிகளில் உண்டு.

பொங்கல் கொண்டாடும் முறை :

பொங்கல் அன்று வாசலில் மாவிலை தோரணங்கள், கரும்பு வைத்து கொண்டாடுவதைப் போல், மாட்டுப் பொங்கல் அன்று மாட்டுத் தொழுவத்தை கோலமிட்டு அலங்கரித்து, சாம்பிராணி காட்டி, மாடுகள் வசிக்கும் இடத்தை கோவிலாக பாவித்து, அங்கு பொங்கல் வைத்து, வாழை இலை பரப்பி முதலில் மாடுகளுக்கு சர்க்கரை பொங்கலை சாப்பிட படைப்பார்கள். சர்க்கரை பொங்கல், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து படைத்து, மாடுகளுக்கு கற்பூரம் காட்டி வழிபடுவதுண்டு.

2024 மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் :

மாட்டுப் பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. காலை 11 முதல் பகல் 01 வரை மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக பொங்கல் வைப்பத நல்ல நேரம் பார்த்து தான் வைக்க வேண்டும். 

ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும். மாட்டுப் பொங்கலான ஜனவரி 16ம் தேதி செவ்வாய்கிழமை அன்று பகல் 3 முதல் மாலை 04.30 மணி வரையிலான நேரமே ராகு காலம். 

அதே போல் எமகண்டமும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே உள்ளது. இதனால் 11 முதல் 01 வரையிலான நேரத்தை பயன்படுத்தி பொங்கல் வைத்து வழிபடலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top