தோஷத்தை போக்கும் லிங்க வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தோஷத்தை போக்கும் லிங்க வழிபாடு பற்றிய பதிவுகள் :

சைவசமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை வழிபட்டால் எத்தகைய தோஷங்களாக இருந்தாலும் விலகும். 

இருப்பினும், குறிப்பிட்ட சில தலங்களில் உள்ள சிவலிங்கத்தினை வழிபடுவதன் மூலம் நமது பிரச்சனைகளுக்கான தீர்வை பெறலாம். 

அந்த வகையில் எந்த வகை தோஷங்களுக்கு எந்த தலத்தில் உள்ள சிவபெருமானை வழிபடலாம் என அறிந்து கொள்வோம்.

திருச்சுழி திருமேனிநாதர் கோவில் :

விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி என்னும் ஊரில் திருச்சுழி திருமேனிநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நிலத்தில் ஏற்படும் விளைச்சல் பிரச்சனைகள், நாம் தங்கி இருக்கும் மனையில் ஏற்படும் ஏதாவது பிரச்சனைகள் என நிலம் மற்றும் மனை சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் போக்க வழிபடலாம்.

பிரச்சனை உள்ள நிலத்திலோ அல்லது மனையிலோ இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக்கொண்டு வந்து இந்த கோவிலில் வைத்து, அந்த மண்ணில் உள்ள பிரச்சனைகளையும் தீர்த்து வைக்குமாறு இறைவனிடம் வேண்டிக்கொண்டு பின் அந்த மண்ணை மீண்டும் நம் நிலத்தில் கலந்துவிட்டால் அந்த நிலத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கையாகும்.

குடவாசல் கோநேசர் :

கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குடவாசல் என்னும் ஊர். இங்குள்ள குடவாசல் கோநேசர் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் உடலில் ஏற்பட்ட பிணிகளும், மன கஷ்டங்களும் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.

புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் :

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுராந்தகத்தில் இருந்து சூணாம்பேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் கோவில். பல சிறப்புகள் மிகுந்த இந்த கோவிலிற்கு தொடர்ந்து ஆறு பிரதோஷ தினத்தன்று வந்து சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட்டால் புத்திர தோஷங்கள் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

கீழத் திருவேங்கடநாதபுரம் கயிலாசநாதர் கோவில் :

திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்னத்தூர் என்னும் இடம். இங்கு அமைந்துள்ள கயிலாசநாதர் ஆலயத்திற்குச் சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்தால் திருமணத் தடை, ராகு தோஷம், குழந்தைப் பேறு பெறுவதில் ஏற்படும் தடை போன்ற தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாகும்.

திருச்சேறை ருணவிமோசனர் :

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருச்சேறை என்னும் ஊரில் அமைந்துள்ளது திருச்சேறை ருணவிமோசனர் கோவில். இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டால் இம்மை, மறுமைக்கான கடன்களும், பல நாட்களாக தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கையாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top