ரத சப்தமி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ரத சப்தமி பற்றிய பதிவுகள் :

16-02-2024

சூரிய பகவானின் ரதச் சக்கரங்கள் திசைமாறும் நாள் என்று இதைச் சொல் கிறார்கள். பொதுவாக, மகர சங்கராந்தி அன்று உத்திராயனப் புண்ணிய காலம் தொடங்கி விட்டதாகச் சொல்வதுண்டு. 

உத்திராயனப் புண்ணியகாலத்தின் மிக முக்கியமான நாள் ரதசப்தமி. அன்றுதான் சூரிய பகவானின் ரதத்தின் திசை மாறும். அன்று முதல் தொடரும் நாள்கள் எல்லாம் மிகவும் புண்ணிய பலன்களைத் தருபவை.

அதனால் ரதசப்தமி நாளில் சூரிய பகவானை வழிபடுவது அவசியம். அன்று செய்யப்படும் வழிபாடுகள், சூரியக் கிரகண காலத்தில் கிடைக்கும் புண்ணிய பலன்களைப் போல் பன்மடங்கு பலன்களைத் தருபவை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நாளில்தான் பீஷ்மர் தன் உயிரைத் துறந்து மோட்சம் எய்தினார் என்கிறது மஹாபாரதம். 

அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மர் வேதனையால் தவித்தார். அப்போது, வியாசர் அர்க்க பத்திரங்களைக் (எருக்க இலை) கொண்டு வந்து பீஷ்மரின் உடலில் போர்த்தி பீஷ்மரின் வேதனையைத் தணித்தார்.

எருக்க இலை சூரிய பகவானுக்கு உரியது. எருக்க இலையைப் பயன்படுத்தினால் சூரியபகவான் மனம் மகிழ்ந்து அருள்வார்.

அதனால்தான் இன்றும் நாம் ரதசப்தமி அன்று எருக்க இலையைப் பயன்படுத்துகிறோம். ரதசப்தமி அன்று அதிகாலையில் நீராடும்முன்பு ஏழு எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு நீராட வேண்டும். 

இவ்வாறு செய்வதன் மூலம் சூரியபகவானின் அருள்பெற்று நோய்கள் நீங்கி நோயற்ற வாழ்வு வாழ இயலும் என்கிறார்கள் முன்னோர்கள்.

இந்த நாளில் தவறாமல் வீட்டில் பூஜை அறையில் சூரியக் கோலமிடுவது சிறப்பு. சூரிய நமஸ்காரம் செய்யும் வழக்கம் உள்ளவர்கள் இந்த நாளில் சூரிய நமஸ்காரம் செய்வதோடு ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்ய வேண்டும். 

சூரியனுக்குச் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுவதால், பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியங்கள் சேரும் என்பது நம்பிக்கை.

வீடுகளில் மட்டுமல்ல ஆலயங்களிலும் ரத சப்தமி சிறப்பாகக் கொண்டாடப்படும். குறிப்பாக திருப்பதியில் அன்று ஒருநாள் பிரம்மோற்சவம் நடைபெறும். 

வழக்கமாக பத்துநாள் பிரம்மோற்சவ காலத்தில், ஒவ்வொரு நாளும் மலையப்ப சாமி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருள்வார். ரதசப்தமி அன்று ஒரே நாளில் வரிசையாக அனைத்து வாகனங்களிலும் எழுந்தருளிக் காட்சிதருவார். திருப்பதியில் மட்டுமல்ல பல திவ்ய தேச தலங்களிலும் இந்த ஒருநாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படும்.

புனிதமான இந்த நாளில் சூரிய பகவனை வணங்கி, ‘ஓம் நமோ ஆதித்யாய: ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று அவரைப் பிரார்த்தித்து வழிபட்டு வரம்பெற்று மகிழ்வோம்.

ரத சப்தமி நாளில் நீராடும் முறையும் வழிபடும் முறையும்.

ரத சப்தமியன்று காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். 

ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். 

இந்த இலை அடுக்கைத் தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் எருக்கன் இலை வழியே ஈர்க்கப்பட்டு நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்கும் என்பது முன்னோர் வாக்கு.

இப்படிக் குளித்தபின் வீட்டில் சூரியஒளி படும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரதக் கோலமிட்டு, அதில் சூரிய- சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். 

முன்னதாகக் கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடையும் வைக்க வேண்டும். 

தொடர்ந்து, கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும். ஷோடச உபசாரத்துடன் இப்பூஜையைச் செய்தால் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன், பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பார்.

சூரிய வழிபாடு ஆதிகாலம் முதல் உள்ளது. சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை. எளிமையாக, ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று காலைச் சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்கி வரம் பெறலாம்.

ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைகளுக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் புனித நீராடுவதற்கான காலத்தில் அனைவரும் புனித நீராடி, சூரியனை வணங்கி அருள் பெறுவோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top