விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம்.
உண்ணாவிரதம் இருந்தும் நம் கோரிக்கைகளை இறைவனிடம் எடுத்துரைப்பதற்கு பெயர் உபவாசம் என்பதாகும்.
நாம் எந்த தெய்வத்தின் அருளைப் பெற விரும்புகிறோமோ, அந்த தெய்வத்திற்கு உகந்த திருநாளில், விரதம் இருந்து பால், பழம் மட்டும் சாப்பிட்டு மற்ற ஆகாரங்கள் எதுவும் உண்ணாமல் கோவிலுக்குச் சென்றோ அல்லது வீட்டில் இருந்தோ பிரார்த்தனை செய்வதன் மூலம், நம் வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும்.
விநாயகப்பெருமானுக்கு சதுர்த்தியில் விரதமும், முருகப்பெருமானுக்கு சஷ்டியில் விரதமும், சிவபெருமானுக்கு சிவராத்திரியில் விரதமும், அம்பிகைக்கு நவராத்திரியில் விரதமும், பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி விரதமும், நமது பாவபுண்ணியத்தை பதிந்து வைக்கும் சித்திரகுப்தனுக்கு சித்ரா பௌர்ணமி விரதமும், அனுமனுக்கு அனுமன் ஜெயந்தி விரதமும் நாம் மேற்கொள்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறோம்.
அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும், நம் கோரிக்கைகளை சொல்வதற்கு உகந்த நாட்களாக சில நாட்களை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள்.
தெய்வங்களிடமும் குறிப்பிட்ட நாட்களில் நம் கோரிக்கைகளை வைத்தால், உடனடியாக அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பேறு இல்லாத தம்பதியர்கள், வேலை கிடைக்காத ஆண்கள், விரும்பிய தொழில் அமைய நினைப்பவர்கள், போதிய பொருளாதாரம் வேண்டுபவர்கள், பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்க நினைப்பவர்கள், அத்தனை பேருக்கும் வியக்கும் விதத்தில் வாழ்வை அமைத்து தருவதில் முதன்மையானது விரதங்கள்தான்.
விரதம் இருக்கும் நாளில், வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு, பூஜையறையில் பஞ்சமுக விளக்கேற்றி, நைவேத்திய பொருட்கள் வைத்து பகல் முழுவதும் விரதம் இருந்து காலையிலும், மாலையிலும் பக்தி பாடல்களை பாடி அதன் பிறகு நமது கோரிக்கைகளை இறைவனிடம் வைத்தால், இல்லத்தில் சுபச்செயல்கள் நடைபெறும்.
சஷ்டி விரதம் :
கந்த சஷ்டியில் ஆறு நாட்களும் விரதமிருப்பவர்கள், அறுபடை வீடு கொண்ட அழகனின் அருளுக்கு பாத்திரமாகலாம். சஷ்டியில் விரதமிருந்தால், போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும்.
தேய்பிறை அஷ்டமி :
தேய்பிறை அஷ்டமியில் விரதமிருந்து சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், பணமழையில் நனையும் வாய்ப்பு கிடைக்கும்.
பிரதோஷம் :
பிரதோஷத்தன்று விரதமிருந்து நந்தீஸ்வரரை வழிபட்டால், பெருமைமிக்க வாழ்வையும், ராம நவமியில் ராமரை நினைத்து வழிபட்டால் இல்வாழ்க்கை சிறப்பாகவும் அமையும்.
விநாயகர் சதுர்த்தி :
ஆவணி மாதம் வருகிற வளர்பிறையில் சதுர்த்தி திதி வரும்போது விநாயகர் சதுர்த்தி என்று சிறப்பாகக் கூறுவர். சதுரம் என்றால் நான்கு பக்கங்களிலும் பூர்த்தியானது. எனவே, வாழ்க்கையில் நமது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக மாதந்தோறும் வரும் சதுர்த்தியில் கூட விநாயகப் பெருமானுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால், மங்கல வாழ்வு அமையும்.