பங்குனி மாத சிறப்புகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பங்குனி மாத சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

சூரிய பகவான் மீன ராசியில் பயணம் செய்யும் மாதம் பங்குனி மாதமாகும். இது மங்களகாரகனான குரு பகவானுக்குரிய ராசி என்பதால் திருமணங்கள், வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்ற மாதமாக பங்குனி மாதம் சொல்லப்படுகிறது.

தமிழ் வருடத்தின் கடைசி மாதம் பங்குனி மாதம் ஆகும். பங்குனி மாதம் பிறந்தவுடன் விசேஷங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கிவிடும். பங்குனி மாத சிறப்புகள் விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை உள்ளடக்கியது. 

பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி போன்ற விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி, போன்ற வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குருபூஜையும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன. 

இம்மாதத்தில் தெய்வங்களின் திருமணங்களோடு மனிதர்களின் திருமணமும் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பினைப் பெறுகிறது. 

இம்மாதத்தில்தான் தாவரங்களில் உதிர்ந்த இலைகள் தளிர்க்க ஆரம்பிப்பதால் இம்மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாக உள்ளது. 

பங்குனி மாத சிறப்புகள் :

மங்கலங்கள் நிறைந்த மாதம் என்று பங்குனி மாதத்தைப் போற்றுவார்கள். புராணத்தில் குறிப்பிட்டிருக்கும் சகல மங்கல காரியங்களும் பங்குனி மாதத்தில்தான் பெரும்பாலும் அரங்கேறியிருக்கின்றன.

தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். மலைமகள் உமையவளை சிவபெருமான் மணம் புரிந்த மாதம் பங்குனி என்கிறது புராணம். 

இந்த மாதத்தில் நாம் செய்கிற சின்னச் சின்ன தானங்கள் கூட மிகுந்த பலன்களைத் தரும் என்றும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைத் தருகிற மாதம் இது.

பங்குனி மாதத்தில் முறையே நாம் தெய்வ வழிபாடுகளைச் செய்து வந்தால், தடைகளெல்லாம் நீங்கும். வெற்றி தேடி வரும் என்பது ஐதீகம்!

அரங்கனை விபீஷணர் பெற்றுக்கொண்ட மாதமும் பங்குனி என்கிறது புராணம். அதுமட்டுமா? அரங்கன் அமர்ந்துகொண்டு, காவிரிக்கும் கொள்ளிடத்துக்குமான இடத்தை திருவரங்கம் என அமைத்து திருத்தலமாக்கியதும் இந்த பங்குனியில்தான் என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்ரீரங்க மன்னார் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள். 

அதேபோல் அரங்கனைப் போற்றுகின்ற மாதமாகவும் திகழ்கிறது பங்குனி மாதம். பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் மிகவும் விசேஷமானது. தமிழ் மாதங்களில் 12வது மாதம் பங்குனி. 

27 நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம் என்று கொண்டாடப்படுகிறது. எனவே பங்குனி மாத உத்திரத்திற்கு சிறப்புகள் அதிகம்.

வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜுனன் தோன்றியதும் பங்குனி உத்திர நந்நாளில் தான். திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தெய்வானை, வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர். 

தசரத மைந்தர்கள் ஸ்ரீ ராமன் - சீதை, லட்சுமணன் - ஊர்மிளை, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் -  ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது.

அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான். 

பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் 
பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 

இந்நாளிலே சிவன் – பார்வதி, முருகன் – தெய்வயானை, ராமர் – சீதை, ஆண்டாள் – ரங்கமன்னார் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. 

மேலும் சாஸ்தா, மகாலட்சுமி, அர்ஜூனன் போன்றோர்களின் அவதார தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. பங்குனியில் அவதரித்ததால்தான் வில்வித்தை வீரனான அர்ஜூனன் பால்குணன் என்ற பெயரினைப் பெற்றான்
 
பெரும்பாலோனோர் தங்களின் குலதெய்வ வழிபாட்டினையும் பங்குனி உத்திர நாளில் மேற்கொள்கின்றனர். தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாதலால் இந்நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் கல்யாண விரதம் என்றழைக்கப்படுகிறது.

நல்ல திருமண வாழ்க்கை வேண்டி மணமாகாதோரும், திருமண வாழ்வானது வளமாகத் தொடர மணமானோரும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர். 

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தேர்திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த நாளில்தான் முருகப்பெருமானை விரதம் இருந்து தரிசிப்பார்கள் பக்தர்கள். அதேபோல், காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியும் எண்ணற்ற பக்தர்கள் வழிபடுவார்கள்.

பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகக் கடவுளைத் தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எண்ணிக்கையற்ற பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். 

உத்திர நட்சத்திர நாயகன் அதாவது அதிபதி சூரியன். அதே நாளில் நிறை நிலவும் பொருந்தும் போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமானை கல்யாண சுந்தரமூர்த்தியாக பாவித்து  அனுஷ்டிக்கும் விரதம் இது.

சிவபெருமான், பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். மீனாட்சியைத் திருமணம் செய்துக் கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். 

சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். பர்வதராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த  பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே. லோபமுத்திரை அகத்திய முனிவரை மணந்து கொண்டதும் பங்குனி உத்திர நாளில்தான்.  

பங்குனி உத்திர நாளில்தான் பூரணா, பூஷ்கலா சாஸ்தாவையும், ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது. தேவேந்திரன் இந்திராணி, நான்முகன் கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.

பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும் இந்த நாளில் தான். இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது. காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது, இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது, மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்தது, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தது சிறப்பு மிகுந்த பங்குனி உத்திர நாளில் தான்..

இந்த நந்நாளில் கோயில்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் :

✓ பழனியில் காவடி உற்சவம். 
✓ மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம். 
✓ சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் 
வள்ளி கல்யாணம். 
✓ காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம்.
✓ மதுரையில் மீனாட்சி திருமணம். 

பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். 

பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில்  திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் விரைவில் கல்யாண வைபோகம் நடக்கும் என்பது ஐதீகம்.

உலக அன்னையாம் பராசக்தியை விரதமுறைகளை மேற்கொண்டு வழிபாடு செய்யக்கூடிய நாட்களே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. 

சாரதா நவராத்திரி, ஆசாட நவராத்திரி, சியமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி என ஆண்டில் நான்கு நவராத்திரி விழாக்கள் அன்னையை வழிபட மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நவராத்திரிகளில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் மிக முக்கியமானவை.

வசந்த நவராத்திரி பங்குனி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை பிரதமை முதல் வளர்பிறை நவமி வரை ஒன்பது நாட்களாகவும், பங்குனி வளர்பிறை பிரதமை முதல் அடுத்த பௌர்ணமி வரை பதினைந்து நாட்களாகவும், பங்குனி வளர்பிறை பிரதமை முதல் சித்ரா பௌர்ணமி வரை நாற்பத்தைந்து நாட்களாவும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவில் சில கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. இவ்வழிபாட்டினை மேற்கொள்ள யோகத்தை அன்னை நமக்கு அருளுவாள்.   

பங்குனி மாத பிறப்பு அன்று கொண்டாடப்படும்
காரடையான் நோன்பு. காரடையான் நோன்பு கார் காலத்தில் விளைந்த நெல்லைக் கொண்டு அடை செய்து கவுரி ஆகிய காமாட்சி அம்மனை சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது. 

சாவித்திரி என்ற‌ பெண் இவ்வழிபாட்டினை மேற்கொண்டு யமனிடமிருந்து தன்னுடைய கணவனின் உயிரினை மீட்டதால் இவ்விரதம் சாவித்திரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்விரத முறையானது மாசி மாதக் கடைசி நாள் தொடங்கப்பட்டு பங்குனி முதல் நாள் நிறைவு பெறுகிறது. 

இவ்வழிபாட்டில் இடம் பெறும் நோன்புக் கயிறானது வழிபாடு முடிந்ததும் பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத் தக்கது. 

இவ்விரத முறையினை திருமணமான பெண்கள் மேற்கொள்வதால் தங்கள் கணவனின் ஆயுள் நீடிப்பதோடு, அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வினை அம்மன் வழங்குவதாகவும் கருதுகின்றனர்.

பங்குனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஆமலகீ ஏகாதசி என்று பெயர். ஆமலகீ ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து திருமாலை வழிபட கோ (பசு) தானம் செய்த பலன் கிடைக்கும். இவ்விரதத்தை மேற்கொண்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.

அதேபோல், பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். 

எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். 

‘இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது?’ என்று ஸ்ரீராமர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீராமர், சீதையை மீட்டு வந்தார் என விஜயா ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.

விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும். 

இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தம்பதி இடையே விட்டுக்கொடுத்தலும் புரிந்து கொள்ளுதலும் அதிகமாகும். பிரிந்த தம்பதிகள் கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

மறு நாள் துவாதசி அன்று, யாருக்கேனும் உணவு வழங்கினால், மகா புண்ணியம் என்றும் பூஜை செய்த கலசம் மற்றும் தானியங்களை ஆச்சார்யருக்கு வழங்கி நமஸ்கரித்தால், சகல ஐஸ்வரியங்களையும் கிடைக்கப் பெறலாம்.

சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையாரின் குருபூஜை பங்குனி சுவாதியில் மேற்கொள்ளப்படுகிறது. 

அதேபோல், பங்குனி மாதத்தில், குருவாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமைகளில், சிவ வழிபாடு மேற்கொள்வதும் சிவகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்!

பங்குனி உத்திரத் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். பங்குனி உத்திரத் திருநாளில் திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். 

பங்குனி மாத உத்திரத்தில் ஏற்றுகின்ற தீபத்தில் சிவனும் பார்வதியும் சிவசக்தி ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்குப் பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top