இராஜயோக பலன் தரும் பங்குனி உத்திர விரதங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இராஜயோக பலன் தரும் பங்குனி உத்திர விரதங்கள் பற்றிய பதிவுகள் :

பங்குனி உத்திரம் :

எல்லாப் பௌர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தவை. தமிழ் மாதங்கள் பன்னிரண்டிலும் ஒவ்வொரு மாதமும் முழுநிலவு நாள் குறிப்பிட்ட நட்சத்திரத்தை ஒட்டியே அமையும். பங்குனியில் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வருவதால் பங்குனி உத்திரம் எனப்படும். 

அன்று சூரியனது வெப்பம் அதிமாகவும் சந்திரனின் குளிர்ச்சியும் அதிகமாகவும் இருக்கும். சந்திரன் தன் 64 கலைகளையும் பொழிந்து காட்சியளிக்கும் நாள் பங்குனி உத்திரம். 

ஜோதிடரீதியாக ஆரோக்யகாரகனாகிய சூரியனும், மனோகாரகனான சந்திரனும் சம பலத்துடன் அமைவதால் உடலுக்கும் மனதிற்கும் அன்றைய தினம் வலிமை அளிக்கக்கூடிய நாள்.

பங்குனி உத்திரம் விரதம் :

அதிகாலை எழுந்து இஷ்ட தெய்வத்தை வணங்கி நீராடி நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு வீட்டில் உள்ள கடவுள்களின் படங்களுக்கு பூமாலை அல்லது மலர்கள் அணிவித்து அந்தந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை அல்லது துதியை அல்லது தெய்வத்தின் திருநாமத்தை மனதார உச்சரிக்க வேண்டும். 

பொதுவாக சிவ - பார்வதி, முருகன் - வள்ளி - தெய்வானை படத்தை வைத்து வழிபடவும். காலையில் பால் பழங்கள் சிறிதளவு உண்டு மதியம் எதுவும் உண்ணாமல் இருத்தல் நலம். 

உடல் நலம் இல்லாதவர்கள் பாலன்னம் சிரிதளவு உண்ணலாம். தயிர், மோர் சேர்த்தக் கூடாது. பின் கோவிலுக்குச் சென்று உற்சவங்கள் ஆராதனை அபிஷேகங்களில் பங்கேற்க வேண்டும். 

முடிந்த அளவு தானங்கள் செய்யவும். இரவு கோவில் பிரசாதத்தை உண்ணலாம். மறுநாள் மீண்டும் அதிகாலை எழுந்து நீராடி ஜபித்து இறைவனை வணங்கி வழிபட்டு வழக்கப் படியான உணவை உண்ண வேண்டும். 

இன்று அனுஷ்டிக்கப்படும் விரதத்தை திருமண விரதம் என்றும் சொல்வர், கோவில்களில் நடைபெறும் தெய்வத் திருவிழாவை தரிசித்து மனதார வேண்டினால் மனம் போல் மணப்பேறு கிட்டும். தம்பதியர்க்கு வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையுடன் வாழ அருள் கிட்டும். 

இந்த விரதத்தால் அடுத்த பிறவி தெய்வப்பிறவியாக அமையும். பங்குனி உத்திரம் விரதமிருந்துதான் மகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தாள். இந்த விரத மகிமையால்தான் பிரம்மன் சரஸ்வதி தன் நாவை விட்டு நீங்காமல் இருக்கச் செய்தது.

அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் அந்த வாரம் அசைவ உணவு அருந்தக்கூடாது. தொடர்ந்து விரதம் கடைபிடித்து வந்தால் பலன்கள் அதிகம். நல்ல கல்வி, தகுதிற்கேற்ப வேலை, நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல மக்கட் செல்வம் அனைத்தும் தவறாது தருவது பங்குனி உத்திர விரதம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top