ஆண்டவனுக்கு உரிய ஆராதனைகளுள் பதினாறு வகை உபச்சாரங்கள் முக்கியமானவை என்கின்றன ஆகமங்கள். அவற்றுள் அபிஷேகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆற்றல் மிக்கதாகவும் கூறப்பட்டுள்ளது.
இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிபலன் உண்டு.
• பால் - நீண்ட வாழ்வையும்,
• தயிர் - புத்திர விருத்தியையும்,
• நெய் - மோட்சத்தையும்,
• பஞ்ச கவ்யம் - ஆன்ம விருத்தியையும் தரும்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் அபிஷேகம் செய்வதற்கு உகந்த தினத்தை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர் அதன்படி,
ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் மற்றும் நவகிரகங்களுக்கு அபிஷேகம் செய்யலாம்.
விநாயகருக்கு அபிஷேகம் செய்வதால் இல்லத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சி பொங்கும். வசந்தமான வாழ்க்கை அமையும்.
திங்கட்கிழமை சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம்.
சிவலிங்கம் பிரபஞ்ச ஆற்றலை கொண்டிருக்கும். அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய, செய்ய நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். எனவே அபிஷேகம் நடத்தப்படும்போது பிரகாரத்தை வலம் வரக்கூடாது.
செவ்வாய்க்கிழமை முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம்.
பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது தனிச்சிறப்பு. பசுவின் மடியில் ஏழு சமுத்திரங்கள் வாசம் செய்வதால், பால் அபிஷேகம் செய்வது ஏழு சமுத்திரங்களைக் கொண்டு இறைவனை அபிஷேகம் செய்வதாக கருதப்படும்.
புதன்கிழமை பெருமாளுக்கு அபிஷேகம் செய்யலாம்.
வைணவத்தலங்களில் ஆஞ்சநேயருக்கு நடத்தப்படும் பால் அபிஷேகம் ஏராளமான பலன்களை வாரி வழங்கக்கூடியதாகும்.
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்யலாம்.
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தால் உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.
வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அபிஷேகம் செய்யலாம்.
சுத்தமான குளிர்ந்த நீராலும், கங்கை முதலான புண்ணிய நதிகளின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்பவர் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகி அனைத்து வினைகளும் அழிந்து இவ்வுலக நலன்கள் அனைத்தையும் பெறுவர்.
சனிக்கிழமை கண்ணனுக்கு அபிஷேகம் செய்யலாம்.
கண்ணனுக்கு அபிஷேகம் செய்வதால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி இலாபம் பெருகும்.
தெய்வத்திற்கு செய்யும் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டாலும், சிறிது பருகினாலும் பிரபஞ்ச சக்திகளை நாம் பெற முடியும். அது நம் உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஆண்டவனின் அருளாற்றலை அதிகரிக்கச் செய்யக்கூடிய அற்புதமான செயல் அபிஷேகம். உங்களால் இயன்றபோதெல்லாம் அபிஷேக நேரத்தில் கோவில்களுக்குச் செல்லுங்கள்.
நீங்கள் நேரடியாக அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும் என்பது இல்லை. கோவிலுக்குள் இருந்தாலே போதும் உங்கள் வாழ்வில் கோடிகோடி நன்மைகள் சேரும். மனமும் உடலும் தூய்மை பெறும்.