நமது கலாசாரத்தில் பல விதமான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு சமயமும், பல வித பண்டிகைகள், பூஜைகள், விரதங்கள், திருவிழாக்கள் என பல சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில், தமிழ் புத்தாண்டு பிறந்தவுடன் வரும் ஒரு முக்கிய பண்டிகைதான் சித்ரா பௌர்ணமி.
இது சித்திரை மாதம் வரும் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகின்றது. எம லோகத்தில் மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்கான விழாவாகவும் இது கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் விரதமிருந்து அவரை வணங்கினால் அவர் நமது பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கை.
காலப்போக்கில் இந்த பண்டிகையை கொண்டாடும் விதம் மாறினாலும், கிராமப்புறங்களில் இந்த பண்டிகை இன்னும் அதே முக்கியத்துவத்துடன்தான் கொண்டாடப்படுகின்றது.
சித்ரா பௌர்ணமி அன்று வீட்டில் வழிபாடு செய்வதுடன் ஆலயங்களில் சென்று வழிபடுவதும் மிக அவசியம். இந்த நாளில் கோயில்களின் சக்தி அதிகரிப்பதாகவும் தெய்வங்களின் வீரியம் வீறுகொண்டு வெளிப்படுவதாகவும் ஐதீகம்.
இந்த நாளில் ஆலயம் சென்று வணங்கினால், நம் பிரார்த்தனைகள் கண்டிப்பாக நிறைவேறும் என கூறப்படுகின்றது. இந்த நாளில் கோயிலுக்குச் செல்லும் போது அங்குள்ள நல்ல அதிர்வலைகள் நம் மீது பட்டு, அதன் தாக்கத்தால் நம் வாழ்வின் நேர்மறை ஆற்றல் அதிகரித்து நமக்கு நல்வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டு பூஜை அறையையே கோவிலாக கருதி பிரார்த்தனை செய்யலாம். அதிகாலையில் குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி, தெய்வங்களின் படங்களுக்கு பூ சூட்டி, சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்ற கலந்த சாதங்களை நெய்வேத்தியம் செய்து வணங்க வேண்டும்.
மற்ற நாட்களைவிட, ஆக்கப்பூர்வமான அதிர்வலைகள் அதிகம் இருக்கும் சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பலமடங்கும் வீரியம் இருக்கும், இன்று செய்யப்படும் பூஜையின் பலனும் பன்மடங்காக இருக்கும்.