தமிழ் வருட பிறப்பு மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பு பலன்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தமிழ் வருட பிறப்பு மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பு பலன்கள் பற்றிய பதிவுகள் :

சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் 0 டிகிரி புள்ளியில் இணைவதைத் தான் ஜோதிடத்தில் ‘யுகம்’ என்று குறிக்கின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் அதே ஆரம்ப இடத்தில் இணையும். 

ஆனால் சூரிய, சந்திர சுழற்சி நாட்காட்டியைப் பயன்படுத்துபவர்கள் முறையே சூரியன், சந்திரன் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் அந்த 0 டிகிரியைத் தொடும் தினங்களை அவரவர் வருடப் பிறப்பாகக் கொண்டாடுவர். 

பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினது கால அளவாகும். சூரியன் மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. 

ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. 

தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகக் கருதப்படுகிறது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. 

ஏன், என்றால், இம்மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசி சக்கரத்தில் மேஷ இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். 

சூரியன் மேஷ இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.

பஞ்சாங்கம் வாசிப்பது புத்தாண்டின் முக்கிய அம்சமாகும். பஞ்சாங்கம் வாசிப்பதில் வல்லுநர்கள் புது வருடத்திற்கான பஞ்சாங்கத்தை வாசித்து பலன் கூறுவார்கள். 12 ராசிகளுக்கான பலன்களும், லாப நஷ்ட கணக்கும் படிப்பார்கள். புது வருடத்தின் நிகழ்வுகள் கணித்துச் சொல்லப்படும். 

முந்தைய காலத்தில் தினந்தோறும், பஞ்சாங்கம் படிக்கச் செய்து கேட்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. தினமும் படிக்க முடியாவிடினும், வருடப் பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படிக்கும் இடத்துக்குப் போய், வரவிருக்கும் வருடத்தின் பலாபலன்களைக் கேட்க வேண்டும். இதைப் பஞ்சாங்க படனம் எனச் சொல்வார்கள். 

வருடப் பிறப்பன்று புதுப் பஞ்சாங்கத்தைப் பூஜையில் வைத்து, மாலை நேரத்தில் அதைப் படிக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு. வீட்டிலுள்ள அனைவரும் கூடி அதைக் கேட்பார்கள்.

காலையில் எழுந்தவுடன் பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கம் பல ஊர்களிலும் பல இடங்களிலும் உண்டு. இன்றைக்கும் திருப்பதியிலும் கூட வெங்கடேஸ்வர ஸ்வாமி சன்னதியில் பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆகவே பஞ்சாங்கப் படலம் என்பது ஒரு நல்ல காரியம்.

இது வருஷத் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் எல்லோரும் கூடி அன்றைய தினம் படிப்பதுண்டு. புது வருஷ பிறப்பன்று எந்த சின்ன காரியம் செய்கிறோமா அது, நாள்தோறும் தொடர்ந்து நடைபெறுவதற்காகவும் செய்வதுண்டு. 

நாள்தோறும் செய்ய வேண்டும் என்பதற்காகவும், நினைவுக்காகவும் செய்வதுண்டு. இப்படி ஒவ்வொரு நாளும் புத்தாண்டு அன்று போலவே பஞ்சாங்கப் படலம் செய்வது இன்றியமையாதது.

பஞ்சாங்கத்தின் அத்தியாவசியம்

ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஐந்து விஷயங்களைத் தெரிந்துகொண்டு செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி ஒரு காலண்டரைப் பார்த்து அன்றைய தேதியைத் தெரிந்துகொண்டு பல காரியங்களை நாம் செய்கிறோமோ, அதுபோல் பழங்காலம் முதல் இருந்து கொண்டிருக்கிற ஒரு பழக்கம். 

திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் என ஐந்து விதமான விஷயங்களையும் அறிந்து கொண்டு காரியங்களைச் செய்வது பழக்கமாயிருந்து வருகிறது. பஞ்ச அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். 

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்தவுடன், இன்று என்ன திதி என்று அறிவதால் செல்வம் பெருகும். கிழமையை அறிவதால் ஆயுஸ் வளரும். இன்று என்ன நக்ஷத்ரம் என்பதை அறிவதால் பாபங்களில் சிறிது குறையும். இன்று என்ன யோகம் என்பதை அறிவதால் ரோகம் விலகும். கரணம் என்ன என்று அறிவதால் காரியம் சித்தியாகும்.

ஒவ்வொரு திதிக்கும் தேவதைகள் உண்டு. அந்தத் திதியை நினைத்துக் கொண்டு தேவதையை நினைத்துக் கொண்டு காரியங்களைச் செய்யும் பொழுது அந்த தேவதையினுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் என்று சொல்வார்கள்.

"திதியேஸ்ச ஸ்ரீப்ரதம் க்ரோக்தம்" திதியை நினைத்துக் கொண்டு செய்தால் ஐஸ்வரியம் கிடைக்கும், அருள் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். 

"ஆராதாயுஷ்யவர்தனம்" கிழமைகளை நினைத்துக்கொண்டு செய்தால் அதன் மூலம் அல்பாயுசு இல்லாமல் கிடைக்கக்கூடிய ஆயுசு பரிபூரணமாக இருந்து காரியங்களைச் செய்யமுடியும் என்று சொல்லுவார்கள்.

"நட்சத்திர தர்தே பாபம்" நட்சத்திர தேவதைகளைப் பிரார்த்தனை செய்து கொண்டு காரியங்களைச் செய்தால் நம்முடைய வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்யக்கூடிய பழக்கங்கள் கூட அகன்று விடும் என்று சொல்லுவார்கள். 

"யோகாதுரோக நிவாரணம்" யோக தியானத்தின் மூலம் காரியங்கள் செய்தால், இயற்கையினாலும், செயற்கையினாலும் வரக்கூடிய வியாதிகள் கூட குறையும் என்று சொல்லுவார்கள். 

"கரணா கார்ய சித்திஸ்ச" கரணத் தியானம் மூலம் காரியங்கள் செய்வதினால் எடுத்த காரியம் இடையூறு இன்றி நன்றாக முடியும் என்பார்கள். இப்படி ஐந்து அங்கங்களைக் கொண்டது தான் பஞ்ச காலம் என்று அழைக்கப்படுகிறது. 

நன்றி - சுந்தரராஜன் (ஜோதிடர்)

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top