முத்திரை பதிக்கும் சித்திரை மாத சிறப்புகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து முத்திரை பதிக்கும் சித்திரை மாத சிறப்புகள் பற்றிய பதிவுகள் :
   
தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். பகவான் கீதையில்,

ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமமாகவும், சந்தஸ்களில் நான் காயத்ரியாகவும், மாதங்களில் நான் மார்கழியாகவும், பருவங்களில் நான் இளவேனில் எனப்படும் வசந்த கால மாகவும் இருக்கிறேன் என்கிறான்.

வசந்த ருது வருஷத்தில் முதல் ருது. அதில் முதல் மாதம் சித்திரை மாதம் என்பதால் இதற்குத் தனிச் சிறப்பு உண்டு. இராமபிரான் பட்டாபிஷேகம் செய்த மாதம் இந்த சித்திரை மாதம். இந்தச் சித்திரை மாதத்திற்கு அதிதேவதை
விஷ்ணு என்றால் கரந்து எங்கும் பரந்து உளன் என்பதுபோல் எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளவன் என்று பொருள். 

நிறைந்த ஒளியை உடையவன் என்று பொருள். “அண்டமாம் எண் திசைக்கும் ஆதியாய் நீதியான பண்டமாம் பரமஜோதி நின்னையே பரவுகின்றேன்” என்று இந்த சித்திரை ஒளியை திருமங்கை ஆழ்வார் பாடுகிறார்.

சித்திரை மாத அதிதேவதையான விஷ்ணுவின் நிறமானது தாமரைத் தண்டின் நிறம் போல தங்க நிறமாக தகதகவென்று ஜொலிக்கும். அவர் நான்கு கலப்பை ஆயுதம் தரித்து நம்முடைய துயரங்களைப் போக்குகிறார். இந்தச் சித்திரை மாதத்தில் சைவம், வைணவம் மட்டுமல்ல, ஜைனர்களுக்கும் கூட விழாக்கள் நிறைந்த மாதமாக இருக்கிறது.

இந்த சித்திரை மாதத்தில்தான் அத்வைத நெறியை, அனைத்துலகும் பரப்பிய, சிவனின் அவதாரமாக கருதப்படுகின்ற ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர் அவதரித்தார். (சித்திரை வளர்பிறை பஞ்சமி) இதே சித்திரை மாதத்தில்தான், (திருவாதிரை நட்சத்திரம்) அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மாமுனிவரான பகவத் ராமானுஜரும் அவதரித்தார். 

இதே சித்திரை மாதத்தில்தான் மத்வாச்சாரியார் ஜெயந்தியும் வருகின்றது. இதே சித்திரையில்தான் மதுரகவியாழ்வாரின் ஜெயந்தியும் வருகிறது. நம்மாழ்வாரின் தமிழ் பிரபந்தங்களை உலகம் முழுவதும் பரப்பியவர் மதுரகவியாழ்வார்.

சித்திரை மாதத்தின் முதல் நாளில், அனேகமாக சைவ, வைணவ வேற்றுமை இல்லாது, எல்லா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடக்கும். எல்லாக் கோயில்களிலும் அன்று பஞ்சாங்க படனம் என்று நடத்துவார்கள். அன்று பஞ்சாங்கம் படிப்பது என்பது மிகவும் சிறப்பு.

பஞ்சாங்கம் என்பது அன்றைய திதி, நட்சத்திரம், நாள் (வாரம்), யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களைப் படிப்பது. இதில் திதியைச் சொல்வதன் மூலமாக மகாலட்சுமியின் அருளும், நட்சத்திரத்தைச் சொல்வதன் மூலமாக பாவங்களிலிருந்து விடுதலையும், நாளைச் சொல்வதினால் ஆயுள் விருத்தியும், யோகத்தைச் சொல்வதினாலே நோயிலிருந்து விடுதலையும், கரணத்தைச் சொல்வதால் செய்கின்ற செயலில் வெற்றியும் கிடைக்கும்.

சித்திரை மாதம் நம்முடைய தமிழகத்தில் மட்டும் இல்லாமல், கேரளாவிலும் சைத்ர விஷூ என்று கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தின் கடைசி நாளில் அவர்கள் தங்கள் பூஜை அறையில், தங்கம், வெள்ளி, மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், பழங்கள், காய்கறிகள், புத்தாடைகள், கண்ணாடி, தானியங்கள், தேங்காய் முதலிய அத்தனை மங்கலப் பொருட்களையும் வைப்பார்கள்.  

சித்திரை முதல் நாள் காலையில் விடிந்ததும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு நேராக பூஜை அறைக்குச் சென்று இந்த மங்கலப் பொருட்களைத்தான் பார்ப்பார்கள். இதன்மூலமாக அந்த வருடம் முழுக்க தங்களுக்கு மங்கல நாட்களாக இருக்கும் என்கிற நம்பிக்கை. அன்று எல்லோருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை வழங்கும் வழக்கம் உண்டு. இதற்கு கை நீட்டம் என்று பெயர்.

சித்திரையில் தான் நான்முகன் உலகத்தை படைத்ததாகச் சொல்வார்கள். அதற்காக பகவான் மச்ச அவதாரம் எடுத்தார். 12 அவதாரங்களில் மச்ச அவதாரம், பரசுராம அவதாரம் சித்திரை மாதத்தில் நடந்தது. 

ஸ்ரீராம நவமியும் சித்திரையில் பெரும்பாலும் வரும். சில சமயங்களில் பங்குனியிலும் வரும். ராம நவமியை இரண்டு விதமாக கொண்டாடுகிறார்கள். எனவே இந்த வேறுபாடுகள் வரும். 

சில கோயில்களில் கர்ப்ப உற்சவமாகவும், சில கோயில்களில் ஜனன உற்சவமாகவும் வெவ்வேறு தினங்களில் கொண்டாடுகின்ற வழக்கம் உண்டு.
சித்திரை என்றாலே மதுரைதான் நினைவுக்கு வரும். அங்கே சைவமும் வைணவமும் இணைந்து கொண்டாடுகின்ற உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை விழா சித்திரை மாதத்தில் சித்திரை பௌர்ணமியை ஒட்டி நடக்கிறது. 

கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி, வைகை ஆற்றில் இறங்கும் காட்சி, உலகப் பிரசித்தி பெற்ற விழாக் காட்சியாகும். இதனை ஒட்டி மதுரை மீனாட்சி திருக்கோயிலில் 12 நாட்கள் விழாக்கள் நடக்கும். பிரமோற்சவ விழாவில் சித்திரைத்தேர் மிக அற்புதமாக நடக்கும். அந்தத் தேரை வடம் பற்றி இழுத்தால் எந்த வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கை உண்டு. 

மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் தரிசித்தவர்களுக்கு திருமணத் தடைகள் விலகிவிடும் என்பார்கள்.

சித்திரை மாதத்தில் சுக்கிலபட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, சித்திரை மாதத்தில் ஆங்காங்கே அம்மன் கோயில்களில் பால்குடம் எடுப்பது திருவிளக்கு பூஜைகள் நடப்பது சிறப்பாக இருக்கும். 

காமாட்சியம்மன் கோயிலில் தங்கத்தேர் அன்று வெளி வீதிகளிலும் வருகின்ற காட்சி மிக அற்புதமான காட்சியாக இருக்கும். சித்ரா பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமியில் தான் திருமகள் பூலோகத்திற்கு வந்ததாக ஒரு வரலாறு உண்டு. சித்திரை முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிப்பது மிக விசேஷமாக நடக்கும். அதைப்போலவே திருமலையிலும் கொலு வைத்து பஞ்சாங்கம் படிப்பது நடைபெறும். தினசரியும் பஞ்சாங்க படனம் உண்டு.

தில்லை திருச்சித்திர கூடத்தில் சித்திரை மாதப் பிறப்பு அன்று காலை, பெருமாள் கோயிலில், தேவாதி தேவனுக்கு உபய நாச்சியார் மற்றும் ஆண்டாளுடன் விசேஷமான அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும். அன்று பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் இரவு பிரகார புறப்பாடு கண்டருளுவார். 

அதைப்போலவே சித்திரைப் பௌர்ணமியன்று கஜேந்திர மோட்ஷம் நடைபெறும். அன்று தெய்வப் புள்ளான பெரிய கருடவாகனத்தில் சித்திரகூடத்துள்ளான் பெயர் தாங்கிய உற்சவ மூர்த்தி, நான்கு வீதிகளிலும் புறப்பாடு கண்டருளுவார். இவரை எட்டாம் நூற்றாண்டிலே திருமங்கையாழ்வார் “தெய்வ புள்ளேறி வருவான் சித்திர கூடத்து உள்ளானே” என்று மங்களாசாசனம் செய்துள்ளார். 

கஜேந்திர மோட்ச விழாவானது ஸ்ரீரங்கத்திலும் மிகச் சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதத்தில் மிக விசேஷமான ஒரு திதி வளர்பிறையில் வரும் திரு தியை. இந்தத் திருதியை திதியில் தான் பெருமான் மச்ச அவதாரம் எடுத்தார்.

சோமுகாசுரன் என்கிற குதிரை முகம் கொண்ட அசுரனை அழித்து வேதங்களை மீட்டெடுத்தார். எனவே பெருமாளுக்கு மிகவும் உரிய இந்த அக்ஷய திருதியை நாளில் துவங்கப்படும் எந்தக் காரியங்களும் வளர்பிறை போல் வளர்ந்து நிறைவான பலனைக் கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. 

அன்றைய தினம் நாம் பொருள் வாங்கினால் அது பன்மடங்கு வளரும் என்கிற நம்பிக்கையில், தங்கம், வெள்ளி, போன்ற பொருள்களை வாங்குகின்றோம். இது தவறல்ல, ஆனால் இதனால் நம்முடைய ஆத்மாவிற்கு பெரிய அளவு பலன் இல்லை. அதைவிட எது வளர்ந்தால் நமக்கு எல்லா சௌபாக்கியங்களும் கிடைக்குமோ அது வளர வேண்டும்.

அட்சய திருதியை அன்று நாம் பித்ரு தர்ப்பணம் செய்து, தானங்களைச் செய்ய வேண்டும். அன்று தயிர் சாதத்தை தானம் செய்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும். இனிப்பு தானம் செய்தால் திருமணத் தடைகள் அகலும். கால்நடைகளுக்கு தீவனம் போட்டால் வாழ்வு வளம் பெறும். 

அன்று எந்த தானத்தையும் முழுமனதோடு செய்யலாம். அந்த தானம் அதனுடைய பலனை ஆயிரம் மடங்குகளாக வளர்ப்பதுதான் அட்சய திருதியை. எப்படி ஒரு சின்ன விதையானது இலை களும் கிளைகளும் உடைய பெரிய விருட்சமாக வளர்ந்து, எல்லோருக்கும் பயன் தருகிறதோ, அதேபோல உலக நன்மைக்காகவும், தனக்குரிய நன்மைக்காகவும், அன்றைக்கு செய்யப்படுகின்ற தானமானது பன்மடங்கு பெருகி இந்த உலகத்தை மிகுந்த
செழிப்போடு வாழ வைக்கும்.

அட்சய திருதியை அன்று கும்பகோணம் வீதிகளில் 12 கருடசேவை மிகவும் சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரம் நடராஜருக்கு விசேஷமானது. வருடத்தில் நடைபெறும் ஆறு அபிஷேகங்களில் மிக முக்கியமான அபிஷேகம் சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் நடக்கும் அபிஷேகமாகும். 

சித்திரை மாதத்து பரணி நட்சத்திரத்தில் பைரவ விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைக்கு ஒரு நேரம் மட்டும் உணவருந்தி, விரதம் இருந்து, காலபைரவரை வழிபடுவதன் மூலமாக, பற்பல நன்மைகள் உண்டாகும். அன்று சிவன் கோயில்களில் திருமுறைகள் பாராயணம் பண்ணுவது சிறப்பு. 

சித்திரை முதல் நாள் திருச்செந்தூரில் மிக விசேஷமான வழிபாடுகள் நடைபெறும். அன்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இரவிலே உற்சவர் திருவீதி வலம் வருவார்.
சித்திரை மூலம் அன்று லட்சுமி நாராயண விரதம் இருந்து வழிபட்டால் செல்வங்கள் பெருகும். ஜாதக தோஷங்கள் விலகும்.

சித்திரை முதல் நாள் திருநெல்வேலி மாவட்டத்திலே மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல் நாளில் எல்லா நதிகளும் தங்கள் பாவங்களை தீர்த்துக் கொள்வதற்காக தாமிரபரணியில் நீராடி தூய்மை பெற்றன.

பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் செய்துகொண்ட பார்வதி பரமேஸ்வரர்கள் அகத்தியருக்குத் தரிசனம் தருவதற்காக பொதிகை மலைக்குச் சென்றது சித்திரை மாதம் முதல் நாள். எனவே, அன்று தாமிரபரணி தீர்த்தத்தில் நீராடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபநாசம் திருக்கோயிலில் பார்வதி பரமேஸ்வரர்களை வணங்குகின்றார்கள்.

இந்த பாபநாசம் திருக்கோயில் 51 சக்தி பீடங்களில் விமலை சக்தி பீடம் ஆகும். சூரிய கைலாசம் என வழங்கப்படும் இத்தலத்தில் அகத்தியருக்கு தந்த திருமண காட்சி கருவறைக்கு பின்புறம் காணலாம். ரிஷப வாகனத்தில் கல்யாண சுந்தரராக சிவபெருமான் காட்சிதர அருகே அகத்தியரும் அவர் மனைவி லோபா முத்திரையும் வணங்கிய கோலத்தில் காட்சி தருகின்றனர். 

சித்திரை மாதத்திலே கொண்டாடப்படும் நாயன்மார்கள் விறல் மீண்ட நாயனார், உமாபதி சிவாச்சாரியார், இசைஞானியார், திருக்குறிப்புத் தொண்டநாயனார், அப்பர் சுவாமிகள், சிறுத்தொண்ட நாயனார், மங்கையர்க்கரசியார். 

அதைப்போலவே சித்திரை மாதத்தில் புகழ்பெற்ற வைணவ வழி குரவர்கள் உற்சவங்கள் நடைபெறுகின்றன. மதுரகவியாழ்வார், ராமானுஜர், நடாதூர் அம்மாள், அனந்தாழ்வார், வடுக நம்பிகள், போன்ற ஆச்சாரிய பெருமக்கள் சித்திரையில் அவதரித்து இருக்கின்றனர். 

ஸ்ரீரங்கத்தில் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. ரேவதி ஸ்ரீரங்கம் பெருமாளின் நட்சத்திரம். இப்படி மாதங்களிலேயே சித்திரை மாதம் பல சமய விழாக்கள் கொண்டாடும்படி முத்திரையைப் பதிக்கும் மாதமாக விளங்குகின்றது.

இந்த மாதத்தின் இன்னொரு மிகப் பெரிய சிறப்பு சித்ரா பௌர்ணமியில் கொண்டாடப் படுகின்ற சித்திரகுப்த ஜெயந்தி விழா. இந்த சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகில் நெல்லுக்கார வீதியில் ஒரு ஆலயம் இருக்கிறது. அந்த ஆலயத்தில் சித்ரகுப்தருக்கு விசேஷமான பூஜைகள் நடந்து வருகின்றன.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கி பட்டி எமதர்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. கோவை அருகே உள்ள சிங்காநல்லூர் எமதர்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெறுகிறது. 

சித்ர குப்தன் தோன்றியது குறித்து பல கதைகள் உண்டு. காலதேவன் எமன், தன்னால் இந்த ஜீவராசிகளில் பாவ புண்ணிய கணக்குகளையும், ஆயுள் கணக்குகளையும் பார்க்க முடியவில்லை என்று சங்கடப்பட்டு சிவனை நோக்கி தவம் இருந்தான். உடனே அவருக்கு ஒரு உதவியாளரைத் தருவதற்காக சிவன் ஒரு தங்கப் பலகையில் சித்திரம் வரைந்தார். அந்த சித்திரத்திற்கு உயிர் கிடைத்ததால் அவருக்கு சித்திரகுப்தன் என்று பெயர் வைத்தார்கள்.

நீலாதேவி கர்னிகாதேவி என இரண்டு துணைவியாருடன் காட்சி அளிக்கக் கூடிய சித்திரகுப்தன் நம் வாழ்நாளில் நாம் செய்கின்ற பாவ புண்ணியக் கணக்குகளை தவறாது எழுதி அதனை கால தேவனுக்குச் சமர்ப்பிக்கும் வேலையைச் செய்கின்றார். அவரை நினைப்பதன் மூலமும் வழிபடுவதன் மூலமும் நாம் பாவங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. ஆனால், நம்மை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற அச்சம் ஏற்பட்டு தொடர்ந்து பாவம் செய்யாமல் இருப்போம். 

இதனை சமய உலகில் வேறுமாதிரியாகச் சொல்கிறார்கள். அதாவது அவரை வணங்கி பூஜை செய்தால் நாம் செய்கின்ற பாவங்களை எல்லாம் அவர் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார். கண்டும் காணாமல் போய் விடுவார் என்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு விளக்கம் இடர்களை தந்து, மேலும், நம்மை தவறான பாதையில்தான் செலுத்துமே தவிர, சரியான பாதையில் செலுத்தாது.

விழாக்களில் உண்மையான அர்த்தங்களை நாம் தெரிந்துகொள்வது நம்முடைய ஒழுக்கத்தை மேம்படுத்திக் கொள்ளவே தவிர, நாம் பாவங்களில் இருந்து தப்பிப்பதற்காக அல்ல. அந்தப் பாவங்களில், தண்டனை என்பது ஒவ்வொருவரும் அடைந்தே தீர வேண்டியது. இதைப் புரிந்து கொண்டு நாம் நல்லபடியாக ஒழுக்கத்தோடும் மன நிறைவோடும் வாழ்ந்தால் நம்முடைய வாழ்க்கை உன்னதமான நிலையில் இருக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top