சித்திரை சதயம் திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை நாள்.
காலமெல்லாம் அடியார்கள் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்கள், இறைவனின் துணைகொண்டு அவனுக்கே பணிசெய்து அருள் பெறுகிறார்கள். எதிர்வரும் இடர்களைத் தகர்த்து அற்புதம் நிகழ்த்துகிறார்கள். அப்படி, அற்புதங்கள் நிகழ்த்தி, ஆலயங்களைத் திருத்தி, உழவாரப் பணிசெய்து, சிவனாரின் புகழை உலகெங்கும் பரப்பி சிவத்தொண்டாற்றியவர், அப்பர் திருநாவுக்கரசர்!!
என்னைக் கொல்லக்கூட முடியும்; ஆனால் மாற்ற முடியாது! என்ற தீவிர வைராக்கியம் கொண்டவர்களே உலக வரலாற்றை மாற்றி உள்ளார்கள். அந்த வகையில் சைவ சமயச் சூரியனாகத் தோன்றி, தென்னகம் முழுமையும் சிவ வழிபாட்டைச் செழிப்பாக மலரச் செய்தவர் அப்பர் பெருமான்.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார், ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர். இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.
திருமுனைப்பாடி நாட்டில் - திருவாமூர் எனும் ஊரில் வேளாண் மரபில் - குறுக்கையர் குடியில், புகழனார் மாதினியார் தம்பதியின் திருமகனாக ‘மருள்நீக்கியார்’ என்ற திருநாமம் கொண்டு அவதரித்தவர் அப்பர். கல்வி கற்க திருப்பாதிரிப்புலியூர் சென்றபோது அவர் ‘தருமசேனர்’ என்ற பெயரில் சமண சமய அறிஞரானார்.
நாவுக்கரசரின் தமக்கையார், திலகவதியார். மருள்நீக்கியார், சமணத்தைத் தழுவத் தொடங்கினார். சமண சமய நூல்களைக் கற்று, பலரையும் வாதில் வென்றதால், சமணர்கள் நாவுக்கரசருக்கு தருமசேனர் எனப் பெயர் சூட்டினர். இதுகுறித்து வருந்திய திலகவதியார் இறைவனிடத்தில் வேண்டினார். வீரட்டானேஸ்வரர் திலகவதியாரின் கனவில் தோன்றி 'வருந்த வேண்டாம். அவரை ஆட்கொள்வோம்' என அருளினார். அப்போது, தருமசேனருக்கு சூளை நோய் உண்டானது. சமணர்கள் எவ்வளவோ முயன்றும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை. நாவுக்கரசர் திலகவதியாரைத் தேடிவந்தார்.
திருநீறே நோய் தீர்க்கும் அருமருந்து என்று தமக்கை கூற, திருநீற்றைப் பெற்று மேனியில் தரித்துக்கொண்டார் தருமசேனர். அடுத்த நொடி அவர் நோய் நீங்கியது. உடனே, வீரட்டானேஸ்வரர் சந்நிதியில் அருள்பெற்று 'கூற்றாயினவாறு விலக்ககலீர்' பதிகம் பாடினார். உடனே, அந்தப் பதிகத்தால் மகிழ்ந்த ஈசன், அசரீரியாய் ‘இனி நாவுக்கரசர் என அழைக்கப்பெறுவாய்’ என்று புதிய நாமகரணம் செய்வித்தார்.
தமக்கை திலகவதியாரால் மீண்டும் சைவ நெறி சேர்ந்து ஈசனைப் புகழ்ந்து முதல் பாடல் பாடியபோதே இவர் ‘வாகீசர்’ என்ற திருநாமம் கொண்டார். திருஞான சம்பந்தரால் 'அப்பர்’ என்றும், எட்டு வகை திருத்தாண்டகப் பாடல் எழுதியதால் ‘தாண்டகவேந்தர்’ என்றும் இவர் பெயர் பெற்றார். ஒப்பிலா உழவாரத் திருப்பணியால் ‘உழவாரத் தொண்டர்’ என்றும் சிறப்பு பெற்றார்.
அப்பர் செய்த அற்புதங்கள்
✓ சமணர்களாலே, 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும், வேகாது உயிர் பிழைத்தார்.
✓ சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும், சாகாது உயிர் பிழைத்தார்.
✓ சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது.
✓ சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும், அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
✓ சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது
✓ வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
✓ விஷத்தினால் இறந்த மூத்த திருநாவுக்கரசை உயிர்ப்பித்தது.
✓ காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே (மானசரோவர்) மூழ்கி, திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கயிலை காட்சி பெற்றது.
சமணர்கள், மகேந்திர பல்லவ மன்னனிடம் சென்று நாவுக்கரசரைக் குறித்துக் குறைகூறி, அவரைத் தண்டிக்கக் வேண்டினர். மன்னனும் நாவுக்கரசரைத் தண்டிக்க உத்தரவிட்டான். சுண்ணாம்புக் காளவாசலில் அடைத்தது, நஞ்சு கலந்த பால் அமுதைத் தந்தது யானையை விட்டுக் கொல்ல முயன்றது, கல்லில் கட்டி கடலில் எறிந்தது என்று அவர்கள் எடுத்த எல்லா முயற்சிகளிலும் ஈசனின் கருணையால் உயிர்பிழைத்தார் நாவுக்கரசர். இதைக் கண்ட மன்னரும் மக்களும் ஆச்சர்யமடைந்தனர். இறுதியில், சமண மன்னனும் நாவுக்கரசரை வணங்கி சைவத்தில் இணைந்து சிவ வழிபாட்டில் கலந்தார்.
நாவுக்கரசர் திருவரத்துறை, திருமுதுகுன்று, திருவேட்களம், திருக்கழிப்பாலை தொடங்கி சிதம்பரம், திருவாரூர் வரை பல சிவாலயங்களிலும் தங்கிப் பதிகங்கள் பாடி, இறை மனம் குளிரச்செய்தார். சென்ற தலங்களெங்கும் உழவாரப் பணிக்கு முக்கியத்துவம் அளித்தார். இறைவன் குடியிருக்கும் ஆலயம் அசுத்தம் நீங்கி, குறைகள் களைந்து அழகுறத் திகழ வேண்டும் என்பதே அப்பெருமகனாரின் விருப்பம். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
திருஞானசம்பந்த பெருமானின் பெருமையறிந்த நாவுக்கரசர், அந்த ஞானச்செல்வத்தை சந்திக்க விழைந்தார். அடியார்கள் சூழ்ந்திருக்க சீர்காழிக்கு அருகே இருவரும் சந்தித்து மகிழ்ந்தனர். வயதில் மூத்தவர் என்பதால், 'அப்பரே' என்று சம்பந்தர் விளிக்க, 'அடியேன்' என்று அப்பர் பெருமான் அகமகிழ்ந்தார். தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார்.
திருநாவுக்கரசர் சென்ற தலங்களில் எல்லாம் இருந்த இறைவனைப் பாடி பக்தி நெறியை வளர்த்தார். ஒருமுறை வேதாரண்யேஸ்வரர் தலத்திற்கு வந்த சம்பந்தரும் நாவுக்கரசரும் திருக்கதவுகள் திறக்கப் பதிகம் பாட எண்ணினர். நாவுக்கரசர் 'பண்ணினேர் மொழியாள்' என்று பதிகம் பாடி கதவு திறக்காததால், 'இரக்கமொன்றிலீர்' என்ற திருக்கடைக்காப்பு பாடியதும் கதவு திறந்துகொண்டது. அனைவரும் வணங்கி ஆரவாரித்தனர். மீண்டும், சம்பந்த பெருமான் முதல் பதிகம் பாடவும் கதவு தாழிட்டுக்கொண்டது.
பெருமைகள் பல பெற்ற சிவநெறிச் செல்வரான திருநாவுக்கரசர் அடைந்த துன்பங்களைப் போல வேறு எந்த அடியாரும் அடைந்திருக்கவே முடியாது எனலாம். எனினும், 'எச்சூழலிலும் சைவ நெறியை விட்டு விலகவே மாட்டேன்’ என்ற அவரது வைராக்கியம் வென்றது; அதன்மூலம் தென்னகத்தில் சைவம் செழித்தது.
தமிழ்நாட்டுத் திருக்கோயில் சிறப்புகளை அதிக அளவில் பாடியவர் அப்பர் ஒருவரே. 49,000 தேவாரப் பதிகங்கள் (கிடைத்தது 3066 மட்டுமே) பாடிய ஒப்பிலா அடியார் இவர். இவற்றில் சில பதிகங்கள், தாள அமைப்பினைச் சேர்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள்.
திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. அப்பரின் பாடல்கள் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை. திருநாவுக்கரசர், இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது. இவருடைய பாடல்களில், கீழ்க்காணும் பத்து பண்கள் காணப்படுகின்றன. கொல்லி, காந்தாரம், பியந்தைக்காந்தாரம், சாதாரி, காந்தார பஞ்சமம், பழந்தக்கராகம், பழம் பஞ்சுரம், இந்தளம், சீகாமரம், மற்றும் குறிஞ்சி.
அப்பர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் மேலக்கடம்பூர், அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இங்கு அவர் என் கடன் பணி செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் எனப் போற்றப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும்.
அற்புதங்கள், மகிமைகள், தொண்டுகள் எனச் செல்லும் வழியெங்கும் சமயத் தொண்டு புரிந்து சிவபெருமையை நிலைநாட்டிய திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் 'எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனா' என்ற பதிகம்தோறும் 'உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே' எனப் பாடி சித்திரை சதய நட்சத்திர நாளில் இறை நீழலில் சரணாகதியடைந்தார்.
தமிழும் சைவமும் தழைத்தோங்க இவர் ஆற்றிய பணிகளை நாம் நினைவுகூரும் நாள் இது. இந்த ஆண்டு, நாவுக்கரசர் சுவாமிகளின் குருபூஜை, இன்று சித்திரை சதய நட்சத்திரம் நாளில் நாவுக்கரசரை எண்ணி வீட்டிலேயே அவரது பாடல்களைப் பாடி ஈசனைத் தொழுவோம். அதுவே இம்மைக்கும் மறுமைக்கும் இன்பமளிக்கும் செயல்!!
திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்!!
நன்றி. மோகனசுந்தரம் ராஜேந்திரன்.