புத்தர் ஞானம் பெற்ற நாளே புத்த பூர்ணிமாவாகவும் இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் வெசாக் நாள் எனவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
புத்தர் இவ்வுலகில் அவதரித்த திருநாளாகவும், அவர் ஞானம் பெற்ற நாளாகவும் இந்த புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இந்திய - நேபாள எல்லையான லும்பினியில் அவர் பிறந்தார். அன்றைய இந்துஸ்தானத்தில் கபிலவஸ்துவில் சாக்கிய குல மன்னர் சுத்தோதனர் - அரசி மாயாதேவிக்கு மகனாகப் பிறந்த புத்தருக்கு சித்தார்த்தன் என பெயர் சூட்டினர்.
ராஜவாழ்வை துறப்பார் என்ற அச்சம் காரணமாக, அரண்மனைக்குள்ளேயே வைத்து வளர்க்கப்பட்ட சித்தார்த்தன், மூப்பு, பிணி, இறப்பு எனும் மூவகை வாழ்வியல் நிதர்சனங்களை ஒருசேர பார்த்த நாளில், அரண்மனையிலிருந்து வெளியேறி சுமார் ஆறு ஆண்டுகாலம் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு தனது 35 வயதில் வடகிழக்கு பகுதியான புத்த கயாவில் ஞானத்தை அடைந்தார். பிறகுதான் அவர் புத்தர் (விழித்தெழுந்தவர்) என அழைக்கப்பட்டார்.
ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்பது புத்தரின் அடிப்படை கொள்கை. அதையே அவர் மக்களுக்கும் போதித்தார்.
புத்த பூர்ணிமா ஏன் கொண்டாடப்படுகிறது?
புத்த பூர்ணிமா என்பது வெறும் கொண்டாட்டத்தோடு நின்றுவிடாமல், அவரது போதனைகளை உலகம் முழுவதும் கொண்டுச் செல்லும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. புத்தர் எடுத்துச் சொன்ன மொழிகள் அனைத்தையும் அன்றைய நாளில் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் தினமாகவும் உள்ளது சிறப்புத்தானே.
ஆசிய நாடுகளில் மக்கள் கோயில்களுக்குச் சென்று புத்த பூர்ணிமா நாளில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, வீடுகளில் சிறப்பு வழிபாடு நடத்துவது போன்றவற்றை மேற்கொள்கிறார்கள்.
இலங்கையில் பௌத்த சிங்களவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் வெசாக் நாளும் ஒன்று. இப்பண்டிகை வெசாக், புத்த ஜெயந்தி, புத்த பூர்ணிமா, புத்த நாள் என தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் திபெத், மங்கோலியாவிலும் களைகட்டும்.
இந்தப் பண்டிகையானது பிறப்பு, இறப்பு, விழிப்பு ஆகியவற்றை மனிதர்களுக்கு விளக்கும் வகையில் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில், பிறந்த இளவரசர் சித்தார்த்தான், புத்தராக மாறி, புத்த மதத்தை தோற்றுவித்தவர். பண்டிகை என்னவோ ஒன்றுதான், ஆனால் கொண்டாடப்படும் நாள்கள் வேறுபடுகின்றன. இது வழக்கமாக மே மாதத்தில் வரும் முழு பௌர்ணமி நாளிலும், சில நாடுகளில் நான்காவது மாதத்தின் எட்டாவது நாளிலும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு புத்த பூர்ணிமா மே 23, 2024 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
கொரியா
தென்கொரியாவில் புத்த பூர்ணிமா நாளில் அரசு விடுமுறை விடப்படுகிறது. சியோலில் இது காகித லாந்தர் விளக்கு பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் காகிதத்தில் செய்யப்பட்ட லாந்தர் விளக்குகளை கையிலேந்தி ஊர்வலமாகச் செல்வார்கள். அவர்கள் காகிதத்தில் செய்யப்பட்ட தாமரைப் பூக்களையும் வைத்திருப்பார்கள். அதுபோலவே, சாலைகளும் கோயில்களும் கூட காகிதத்தால் செய்யப்பட்ட லாந்தர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
வடகொரியாவில் அரசு விடுமுறை இல்லாவிட்டாலும் 1988 முதல் பல்வேறு கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வட - தென் கொரிய புத்த பிட்சுகள் இணைந்து புத்த பூர்ணிமாவைக் கொண்டாடி வந்தனர். இருநாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டதால் அதுவும் நின்றுபோனது.
சீனம்
புத்தரின் குழந்தை உருவத்தை வைத்து, அவருக்கு நறுமணம் கலந்த தண்ணீர் தெளித்து புத்த பூர்ணிமாவை சீனர்கள் கொண்டாடுவார்கள். அந்த குழந்தையானது, ஒரு விரலை வானத்தை நோக்கியும் மற்ற விரல்கள் பூமியை நோக்கியும் வைத்திருக்கும். புராணத்தின்படி, புத்தர் பிறந்த சிறிது நேரத்திலேயே தனக்கு மறுபிறவி இல்லை என்று அறிவித்ததாகவும், ஞானம் பெற்றபோது, டிராகன்கள் அவரை புனித நீரால் ஸ்நானம் செய்ததாகவும் நம்பப்படுகிறது.
ஜப்பான்
ஜப்பானில், ஏப்ரல் 8, 2024 ஆம் தேதி புத்தர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. புத்தர் கோயில்களில் இது ஹனா மத்சூரி என்று அதாவது பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் கோயில்களில் வண்ண வண்ணப் பூக்களைக் கொண்டு அலங்கரித்து அதன் நடுவில் ஒரு தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் புத்தரின் குழந்தை உருவம் வைக்கப்படும். குழந்தையின் உருவத்தின் மீது பக்தர்கள் இனிப்பான தேநீரை விடுகிறார்கள்.
தெற்கு, தென்கிழக்கு ஆசியா
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் புத்தர் பிறந்தநாளை வைகாசி மாத முழு பௌர்ணமி நாளில் கொண்டாடுகிறார்கள். புத்த கயாவில் அமைந்திருக்கும் மகாபோதி கோயில் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். கோயிலில் உள்ள போதி மரத்துக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
இந்தியா மற்றும் நேபாளத்தில் இனிப்பு அரிசிக் கஞ்சி படைக்கப்படுகிறது. மலேசியா மற்றும் சீனத்தில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் விலங்குகளை மற்றும் பறவைகளை வாங்கி அவற்றை சுதந்திரமாக வெளியே விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இலங்கையில் இந்த நாளில் மூங்கில் லாந்தர்களைக் கொண்டு அலங்கரிக்கிறார்கள். தெய்வப் பாடல்களை இசைத்தும், பந்தல்கள் அமைத்தும் கொண்டாடுகிறார்கள். வியத்நாமில் புத்த பூர்ணிமா மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது.