திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவபெருமான் குறித்த பாடல்களை யாழில் பண்ணிசைத்துப் பாடியவர். பிற்காலத்தில் திருஞான சம்பந்த நாயனார் பாடல்களை யாழில் பண்ணிசைத்தவர்.
இவருடைய மனைவியார் பெயர் மதங்க சூளாமணி அம்மையார். தன் கணவரைப் போலவே சிவப்பெருமானின் மீது பெரிதும் ஈடுபாடு கொண்ட இவரும் தம்முடைய வாய்ப்பாட்டினால் சிவபெருமானைப் போற்றிப் பாடியவர்.
திருஞான சம்பந்த நாயனாரின் திருமணத்தின் போது தோன்றிய அருட்சோதியுள் தன்னுடைய மனைவியுடன் சிவனடியைப் பெற்ற பெருமையுடையவர் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் பண்டைய நடுநாட்டில் திருஎருக்கத்தம் புலியூர் என்னும் ஊரில் பாணர் குலத்தில் தோன்றியவர்.
பொதுவாக பாணர்கள் இசைக் கருவிகளை இசைப்பதிலும், வாய்ப்பாட்டிலும் திறமை மிக்கவர்கள். அக்காலத்தில் பாணர்கள் திருக்கோவிலுக்குள் உட்சென்று வழிபடுவதற்கு தடை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாணர் வழித்தோன்றலான திருநீலகண்டர் சிவபெருமானின் மீது பெரும்பக்தி கொண்டு, அவரது புகழ் குறித்த பாடல்களை தம்முடைய யாழில் பண்ணிசைத்து பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அவ்வாறு இருக்கையில் அவர் தம் மனைவியுடன் சோழநாட்டு சிவாலயங்களுக்கு வெளியே நின்று, தம்முடைய யாழில் பண்ணிசைத்துப் பாடி வழிபட்டு பின்னர் மதுரையை வந்தடைந்தார்.
திருஆலவாய் திருக்கோவிலின் வெளியே நின்று திருநீலகண்டர் யாழில் பண்ணிசைக்க, மதங்க சூளாமணியார் வாய்ப்பாட்டினால் சிவபெருமானின் புகழினைப் பாடினார்.
அவர்களின் இசைக்கலையையும், இறைவனின் மீதான அவர்களின் பக்தியையும் கண்ட மதுரை மக்கள் அதிசயித்தனர்.
சொக்கநாதரும் திருநீலகண்டர் மற்றும் மதங்கசூளாமணியின் இசைக்கு மயங்கினார். அவர் மதுரை அடியவர்களின் கனவில் தோன்றி திருநீலகண்டரையும் அவர்தம் மனைவியாரையும் திருக்கோவிலுக்குள் அழைத்து வருமாறு பணித்தார்.
அதே சமயம் திருநீலகண்டரின் கனவில் தோன்றிய இறைவர் அடியவர்கள் வந்தழைக்கும்போது திருக்கோவிலுக்குள் வந்து பண்ணிசைக்குமாறு கூறினார்.
இறைவனின் திருவுள்ளத்தை அறிந்த திநீலகண்டர் மிக்க மகிழ்ச்சி கொண்டார்.
மறுநாள் திருநீலகண்டர் தம்முடைய மனைவியுடன் திருக்கோவிலின் வெளியில் பண்ணிசைத்துக் கொண்டிருந்தபோது அடியவர்கள் இறையாணையைக் கூறி அவரையும் அவர்தம் மனைவியையும் திருக்கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
திருக்கோவிலுக்குள் சென்றதும் தரையில் அமர்ந்து இறைவன் புகழ் பற்றி யாழில் பண்ணிசைத்தார் திருநீலகண்டர். தரை ஈரமாக இருந்ததைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.
ஆனால் இறைவனார் அசீரியாக, ‘தரையில் குளுமையால் யாழ் நெகிழ்ந்து அதனுடைய சுருதி குறைந்துவிடும். ஆதலால் திருநீலகண்டருக்கு பொற்பலகை இடுக’ என்று ஆணை பிறப்பித்தார்.
அங்கிருந்தோர் இறைஆணையின்படி உடனே பொற்பலகையை பாணருக்கு வழங்க, பாணரும் பலகையில் அமர்ந்து சொக்கேசரைக் மனம் குளிர வழிபட்டு அவரைப் பற்றிய பாடல்களை யாழில் பண்ணிசைத்து மகிழ்ந்தார்.
மதுரையில் சிலகாலம் தங்கியிருந்து ஆலவாய் அண்ணலை போற்றி பண்ணிசைத்து வழிபட்ட பின்னர் சோழ நாட்டு தலங்களை வழிபட தலயாத்திரை மேற்கொண்டு திருவாரூரை வந்தடைந்தார்.
திருக்கோவிலுக்குள் செல்ல அக்காலத்தில் அவருக்கு தடை இருந்ததால் திருவாரூர் திருக்கோவிலின் முன்நின்று யாழிசைத்து பாடினார் திருநீலகண்டர்.
அவரின் பண்ணிசைக்கு மயங்கிய தியாகேசர் திருவாரூர் அடியவர்களுக்கு, ‘திருக்கோவிலின் வடபுறத்தில் வாயிலமைத்து திருநீலகண்டரை அழைத்து வருமாறு’ ஆணையிட்டார்.
திருவாரூர் அடியவர்களும் திருக்கோவிலின் வடபுறத்தில் வாயிலமைத்து திருநீலகண்டரை ஆலயத்துள் அழைத்துச் சென்றனர்.
வீதிவிடங்கரையும், தியாகேசரையும் பண்ணிசைத்து மனமார வழிபட்ட திருநீலகண்டர்.
தம்முடைய திருப்பாடல்களால் சைவத்தையும் தமிழையும் வளர்த்து வந்த திருஞான சம்பந்தரைப் பற்றி அறிந்த திருநீலகண்டர் தம்முடைய மனைவியாருடன் சம்பந்தரைக் காண சீர்காழி விரைந்தார்.
சீர்காழியில் திருநீலகண்டரை வரவேற்ற சம்பந்தர் தம்முடைய வீட்டின் அருகே திருநீலகண்டர்க்கும் மதங்க சூளாமணியாருக்கும் தங்குவதற்கு இல்லத்தை அமைத்துக் கொடுத்தார்.
அதுமுதல் திருஞான சம்பந்தருடன் இருந்து வந்த திருநீலகண்டர் சம்பந்தர் பெருமான் பாடிய பதிகங்களை தம்முடைய யாழில் பண்ணிசைத்து மகிழ்விக்கும் நற்பேற்றினைப் பெற்றார்.
திருஞான சம்பந்தரின் திருமணத்திற்குச் சென்ற திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மற்றும் மதங்க சூளாமணியார் ஆகியோர் திருமணத்தின்போது தோன்றிய அருட்சோதியினுள் புகுந்து இறைபதம் பெற்றனர்.
தம்முடைய யாழில் சிவபெருமானின் பாடல்களை பண்ணிசைத்துப் பாடிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராக வைத்துப் போற்றப்படுகிறார்.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘திருநீல கண்டத்து பாணனார்க்கு அடியேன்’ என்று போற்றுகிறார்.