1. திருநீலநக்க நாயனார்
2. திருநீலகண்ட யாழ்ப்பாணர்
3. முருக நாயனார்
நாளை (26 May, 2024), வைகாசி மூல நட்சத்திரத் திருநாள். பெருமைமிக்க இந்த நாளில் சிவனின் புகழ்பாடி சீலம் கொண்ட நாயன்மார்கள் நால்வரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது.
ஈசனின் பிள்ளையாகவே வளர்ந்த ஞானக் குழந்தையாம் திருஞான சம்பந்தர், திருநீலநக்க நாயனார், இசையால் ஈசனை வசமாக்கிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்புகலூர் முருக நாயனார் ஆகிய நால்வரின் குருபூஜை தினம்.
இவர்கள் நால்வருமே ஒரே நாளில், ஒரே ஊரில், ஜோதியில் கலந்தது அதிசயிக்கத்தக்க நிகழ்வு. மேலும் இந்தநாள், திருஞானசம்பந்தரின் திருமண நாளாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
• திருஞானசம்பந்தமூர்த்தி :
தேவார மூவரில் முதன்மையானவர். ஈசனின் அருளையும் அம்பிகையின் அருட்பாலையும் பெற்ற ஞானக்குழந்தை. பேசத் தொடங்கிய காலத்திலேயே ஈசனைப் பற்றி பாடத் தொடங்கியது.
'தோடுடைய செவியன்' என்று பாடத் தொடங்கி தலம்தோறும் சென்று சைவ சமயத்தின் புகழைப் பரப்பினார். செல்லும் இடமெங்கும் ஈசனின் பெயரால் பல அற்புதங்களைச் செய்த அருளாளர் ஞானசம்பந்தப் பெருமான்.
• திருநீலநக்க நாயனார் :
சாத்தமங்கை என்ற திருத்தலத்தில் பிறந்த இந்த நாயனார், ஈசனையே எல்லாமுமாக எண்ணி வாழ்ந்தவர். ஒருமுறை சாத்தமங்கை அயவந்தீஸ்வரரின் திருக்கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று செல்ல, அதைக் கண்ட நீலநக்கரின் மனைவி விரைவாகத் தனது வாயால் ஊதி அந்த சிலந்தியை விரட்டினார்.
இதனால் பதறிப்போன நீலநக்க நாயனார், ஈசனை எச்சில் வாயால் ஊதி அவமதித்ததாகக் கூறி அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார். அன்றிரவே நாயனாரின் கனவில் தோன்றிய ஈசன், 'நாயனாரின் மனைவி வாயால் ஊதிய இடம் தவிர மற்ற எல்லா இடங்களும் கொப்புளங்களால் வெம்மை பெற்றிருப்பதாகவும், தன்பால் கொண்டிருந்த அன்பின் காரணமாக அப்படிச் செய்த மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறும்' கட்டளையிட்டார். இப்படி ஈசனிடம் மட்டற்ற பக்தியும் கனிவும் கொண்டவர் திருநீலநக்க நாயனார்.
• திருநீலகண்ட யாழ்ப்பாணர் :
திருஎருக்கத்தம்புலியூரில் பாணர் குலத்தில் பிறந்தவர். இசையால் ஈசனை மகிழ்விக்கும் திருப்பணியை செய்துவந்தவர். மதங்கசூளாமணி எனும் தனது மனைவியுடன் இணைந்து தலம்தோறும் சென்று இறைவனை இசையால் அர்ச்சித்து வந்தார். இவரது இசைக்கு மயங்கிய ஆலவாய் அண்ணல் சொக்கநாதர், இவரை கோயிலுக்குள் அழைத்து பொற்பலகையிட்டு இசைக்க வைத்தார்.
'தரையில் இருந்து இசைத்தால் அவரது இசைக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தப் பொற்பலகையைக் கொடுத்தோம்' என்று அசரீரியாகத் தனது பக்தர்களுக்கும் எடுத்துச் சொல்லி, பாணரின் இசைத் திறமையை புகழ்ந்தார் ஈசன். சீர்காழியில் திருஞானசம்பந்தரைக் கண்டு வணங்கி, அவருடைய பாடல்களை இசைத்து இறைவனை வழிபட்டு வந்தார்.
• முருக நாயனார் :
சோழ நாட்டின் திருப்புகலூரில் அவதரித்த நாயனார் இவர். திருப்புகலூர் வர்த்தமானீச்சுரத் திருக்கோயில் நந்தவனத்தைப் பராமரித்து, அங்கு மலர்ந்த பூக்களைக் கொய்து, மலர் மாலைகளாக்கி ஈசனுக்கு அணிவித்து சேவை செய்து வந்தார் முருகனார்.
கோயிலின் திருமடத்தில் தங்கி சேவை செய்து வந்த இவரைக் காண திருநாவுக்கரசர் பெருமானும், திருஞானசம்பந்தரும், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒருசேர வந்திருந்தார்கள். அவர்களைக் காண திருநீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய நாயன்மாரும் வந்து மடத்தில் தங்கி இருந்தார்கள். அவர்களோடு அன்பால் இணைந்த முருக நாயனார் பெரிதும் மகிழ்ந்தார்.
இந்த நிலையில், பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணத்துக்கு சம்மதித்தார் ஞானசம்பந்தப் பெருமான். திருநல்லூர் பெருமணம் திருத்தலத்தில் ஞானசம்பந்தருக்குப் பெண் அழைப்பு நடைபெற்றது. இதில் சம்பந்தரின் உறவினர்களோடு முருக நாயனார், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் கலந்துகொண்டார்கள்.
அப்போது தனது அவதார நோக்கம் முடிவடைந்ததை உணர்ந்துகொண்ட சம்பந்தப் பெருமான், சிவலோகத் தியாகேசர் திருக்கோயிலில் நெக்குருகி 'நமசிவாயத் திருப்பதிகம்' எனும் பாடல்களைப் பாடினார்.
``காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே'
என்று தொடங்கிய பதிகத்தின் முடிவில், பெரும் ஜோதிப் பிழம்பொன்று தோன்றியது. உடனே சம்பந்தரும் அவரோடு வந்த கூட்டத்தாரும் சிவனின் கருணையை எண்ணி வியந்து, பஞ்சாட்சரம் ஓதியவாறு ஜோதியில் கலந்தனர். அந்த நாள் வைகாசி மூலத்திருநாள்.
சம்பந்தருடன் இணைந்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நாயன்மார்கள் தனது குடும்பத்தாரோடு ஒரே நாளில், ஒரே இடத்தில் ஈசனின் திருவடியை அடைந்தார்கள். அதனால் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயத்தில் திருஞானசம்பந்தரின் திருமண திருவிழா இந்த நாளில் நடைபெறுகிறது.
'இந்த திருமணத்துக்கு வந்திருந்து ஆசீர்வதித்து அம்பிகை திருநீறு அளித்தார்' என்ற ஐதீகத்தால் இன்றும் இந்த ஆலயத்தில் திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதியில் குங்குமத்துக்குப் பதிலாக திருநீறே அளிக்கப்படுகிறது.
இயன்றவர்கள் நாளை இந்த ஆலயத்துக்குச் சென்று இந்த நான்கு நாயன்மார்களோடு சிவசக்தி தம்பதியையும் தரிசித்து வாருங்கள். மங்கள வாழ்வும், முக்திக்கான வழியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.