முருகப் பெருமானுக்கு முதலில் உருவான திருநாமம் கார்த்திகேயன். 6 கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என பெயர் வந்தது. கார்த்திகை பெண்களை சிறப்பு செய்வதற்காக சிவ பெருமானால் உருவாக்கப்பட்ட விரதம் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம்.
முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை விரதத்தை தொடர்ந்து இருக்க நினைப்பவர்கள் ஆடி கிருத்திகையில் விரதத்தை துவங்கி, தொடர்ந்து 6 மாதங்கள் கிருத்திகை விரதம் கடைபிடிக்க வேண்டும். தை மாத கிருத்திகையில் விரதத்தை நிறைவு செய்யலாம்.
கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்குரியது என்றாலும் வருடத்தில் 3 மாதங்களில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மிக உயர்வாக போற்றப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் திருக்கார்த்திகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மற்றும் தை கிருத்திகை ஆகியன முக்கிய விரத நாட்களாக அனுஷ்டிக்கப்படுகின்றன. கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து முருகனை வழிபடுபவர்களுக்கு சகல நலன்களும் கிடைக்கும் என சிவ பெருமானே அருளிய சிறப்பான நட்சத்திரம் கிருத்திகை.
கிருத்திகையன்று முருகப் பெருமானுக்கு ஆறு வகையான நைவேத்தியம் படைத்து, ஆறு வகையான மலர்களால் அர்ச்சனை செய்து, ஆறு வகையான பூஜைகள் செய்ய வேண்டும். முடியாதவர்கள் சர்க்கரை பொங்கல் மட்டும் நைவேத்தியமாக படைத்து, வழிபடலாம்.
முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி விட்டு, முழு நம்பிக்கையுடன் கிருத்திகை விரதத்தை(கார்த்திகை விரதம்) துவங்க வேண்டும். வேல் இருந்தால் வேல் வைத்து வழிபட்டு கிருத்திகையன்று விரதத்தை துவங்கலாம்.
முருகன் படத்திற்கு மலர்கள் சாத்தி, விளக்கேற்றி, முருகனுக்குரிய பாடல்களை பாராயணம் செய்து வழிபடலாம். முடிந்தவர்கள் உபவாசமாக இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம், கஞ்சி ஆகியவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
கிருத்திகையன்று மாலையில் விளக்கேற்றிய பிறகு, முருகனுக்குரிய நைவேத்தியங்கள் படைத்து, பூஜை, அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும்.
கிருத்திகை விரதம் (கார்த்திகை விரதம்) இருந்து முருகனை வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை, மண், மனை, சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், சகோதர பிரச்சனைகள் தீரும், சகல விதமான பிரச்சனைகள் தீரும், உயர் பதவி கிடைக்கும். செல்வம் பெரும், நினைத்தது நிறைவேறும்.
திருமணத்தடை உள்ளவர்கள், செவ்வாய் மற்றும் குரு திசையால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கிருத்திகை விரதம் இருக்கலாம். உயர் பதவி கிடைக்க விரும்புவோர் இந்த விரதத்தை இருக்கலாம்.
மற்ற விரதங்களை அவற்றிற்குரிய திதியில் மட்டுமே துவங்க வேண்டும். ஆனால் கிருத்திகை விரதம் கிருத்திகைக்கு முன்பு வரும் பரணி நட்சத்திரத்திலேயே துவங்க விட வேண்டும். பரணி நட்சத்திரத்தன்று பகல் உணவுடன் உணவு அருந்துவதை நிறுத்தி விட்டு, விரதத்தை துவக்க வேண்டும். கிருத்திகையன்று மாலையில் பூஜை செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.