அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோவில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோவில் பற்றிய பதிவுகள் :

திருப்பதி என்றால் லட்டு, ஸ்ரீ ரங்கம் என்றால் புளியோதரை, இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்மர் என்றால் சுவையான மிளகு தோசை தான் நினைவுக்கு வரும். 

அப்படிப்பட்ட பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது பல்லவர் கால குடைவரைக் கோயிலாகும். 

பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில் பற்றிய நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. 

நரசிம்மர் கோவில்களில், நரசிம்மர் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் தரிசனம் தருவார். ஆனால் இக்கோவில் நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை. நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்ததால் 'பாடலாத்ரி' என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது.

12 ஆழ்வார்களும் இத்தலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர். இத்தல மூலவரான பாடலாத்ரி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இரு கரத்தில் சங்கும், சக்கரமும், வலது கரத்தில் அபயமும், இடது கரத்தை மடி மீது வைத்தபடியும் அருள்பாலிக்கிறார். 

இந்த மூலவருக்கு, சிவபெருமானைப் போல மூன்று கண்கள் இருப்பது அதிசயமான ஒன்றாகும். உற்சவர் பிரகலாதவரதன் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில், பிரணவகோடி விமானத்தின் கீழ் அருள்கின்றனர். 

மூலவர் குகைக் கோவிலில் வீற்றிருப்பதால், அவரை வலம் வர வேண்டுமானால், சிறிய குன்றினையும் சேர்த்தே வலம் வர முடியும். 

மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளிலும் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளிப்படுகிறது.

திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தினரும், ராகு திசை நடப்பவர்களும், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வழிபாடு செய்தால் நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. 

கோயிலின் பின்புறமுள்ள அழிஞ்சல் மரம் மிகவும் சக்தி வாய்ந்தது. திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் இம்மரத்தில் சந்தனம், குங்குமம் பூசி நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top