ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும். இம்மாதங்களில் அம்மன் கோவில்களில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாகும். செவ்வாய் பகவானுக்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு உகந்த இந்நாளில் முருகனை வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். அதிலும் ஆடி செவ்வாய் என்றால் அம்மனுக்கும், முருகனுக்கும் ஏற்ற நாளாகும்.
ஆடி செவ்வாயில் முருகனையும், அம்பாளையும் தீபம் ஏற்றி மனமுருகி வேண்டினால் வீட்டில் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும். இதுகுறித்து நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
ஒளவையார் விரதம்
சுமங்கலி பெண்களும், திருமணமாகாத பெண்களும் ஒன்று சேர்ந்து கடைபிடிக்கும் விரதம் ஒளவையார் விரதமாகும். இவ்விரதம் ஆடி, தை மற்றும் மாசி மாத செவ்வாய்க்கிழமைகளில் கடைபிடிக்கப்படுகிறது.
இவ்விரதம் அசந்தா ஆடியிலும், தப்புனா தையிலும், மறந்தா மாசியிலும் என்ற சொல்லாடலுடன் குறிப்பிடப்படுகிறது. அதாவது, தை மாதம் கடைபிடிக்க வேண்டிய இந்த விரதத்தை மறந்துவிட்டால் மாசி மாதத்திலும், மாசியிலும் மறந்து அசந்துவிட்டால் ஆடியிலும் கடைபிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
ஒளவையார் விரதமுறை
இவ்விரதத்தின்போது இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடுவார்கள். மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் ஒளவையார் விரதத்தை தொடங்குவார்கள்.
இவ்விரதத்தின் நிவேதனமாக பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொலுக்கட்டை தயாரிப்பார்கள். வழிபாட்டில் பயன்படுத்தப்படும் கொழுக்கட்டையை ஒளவையார் கொழுக்கட்டை எனச் சொல்வார்கள். அன்றைய தினம் செய்யும் நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.
ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். அதன்பின் ஒளவையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை கேட்பார்கள். இறுதியாக பெண்களே விரத நிவேதனங்கள் அனைத்தையும் உண்பார்கள்.
இவ்விரதத்தில் ஆண்களை கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை.
ஆடி செவ்வாயின் சிறப்பு
பெண்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகின்றனர்.
செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கள கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது.
பத்ரகாளி ராகுவாக அவதாரம் செய்தாள் என்பர். செவ்வாய் தோஷத்தாலும், நாக தோஷத்தாலும் திருமணம் தடைபட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலப் பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் கடைபிடிப்பது நல்லது.