திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார்.
மேலும், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில்தான். பிராட்டியை ஒப்பிலியப்பன் மணந்துகொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான்.
எனவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த நன்னாளில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பில்லா பேறுடன் வைகுந்தப் பதவியை அடைவார்கள். முக்கியமாக, குழந்தை இல்லாதவர்கள் விரைவில் குழந்தை வரம் பெறுவார்கள்.
மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு பெருமாளை வழிபட்டு வந்தால், ஏழு பிறவியிலும் பதினாறு வகையான செல்வங்களைப் பெற்று, நிறைவான வாழ்க்கை வாழலாம் என்பது ஐதீகம்!
திருவோண நாளில் காலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும்.
கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, விளக்கேற்றி வழிபடலாம்.
காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக்கொண்டு, பெருமாளைக் குறித்த பாடல்களைப் பாராயணம் செய்தல் வேண்டும்.
பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தைப் பருகி வேண்டிக்கொள்வது மிகவும் விசேஷமானது.
அன்றைய நாளில், மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு கற்கண்டு நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து, சந்திர தோஷம் நீங்கி சந்திரனின் அருளை முழுமையாக பெறலாம்.
இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.