ஆடி ஞாயிற்றுக்கிழமை, ஆடித் தபசு, ஹயக்ரீவர் ஜெயந்தி, ஆடி பௌர்ணமி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி ஞாயிற்றுக்கிழமை பற்றிய பதிவுகள் :

ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை என்றாலே அம்மனுக்கு கூழ்வார்த்தல் பண்டிகை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆடி மாதம் வரக்கூடிய எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா எல்லா கோவில்களிலும், வீடுகளிலும் பெரும்பாலும் விமர்சையாக நடத்தப்படும்.

வீடுகளில் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அம்மனை வழிபாடு செய்து அருளை பெறலாம். ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கு செய்யுங்கள்.

அம்மன் ஆடி வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது வீடுகளில் ஞாயிற்றுக்கிழமையன்றும் அம்மன் எழுந்தருளுகிறாள். ஆம், ஞாயிற்றுக்கிழமையன்று வீடுகளில் கூழ் காய்ச்சி வீதி முழுவதும் வசிக்கும் மக்களுக்கும், வீதியில் செல்பவருக்கும் கூழ்வார்த்து அம்மன் அருளை பெறுகிறார்கள்.

ஆடி ஞாயிற்றுக்கிழமையன்று கூழ் ஊற்றி அம்மனை வணங்குவதால் நோய்கள் நீங்கி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

ஆடித் தபசு

ஆடித் தபசு விழா, ஹரியும் (திருமால்), ஹரனும் (சிவபெருமான்) வேறு வேறு அல்ல இரண்டு தெய்வங்களும் ஒன்றுதான் என்பதை வலியுறுத்தவே கொண்டாடப்படுகிறது.

இந்த விழா, தமிழ்நாட்டில் உள்ள சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.

காசிப முனிவரின் மகன்களான சங்கன் மற்றும் பதுமன் ஆகியோரின் கதையுடன் இவ்விழா தொடர்புடையது. யார் உயர்ந்த இறைவன்? சிவபெருமானா? அல்லது திருமாலா? என்பது குறித்து விவாதத்தில் ஈடுபட்ட இவர்கள், பூமிக்கு வந்து தெய்வங்களிடம் ஆலோசனை பெற்றனர்.

இறுதியில், பொதிகை மலையில் தவம் செய்ய அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அங்கு தவம் செய்தபோது, சிவபெருமான் மற்றும் திருமால் இணைந்த உருவமான சங்கரநாராயணர் அவர்களுக்கு காட்சி தந்தார்.

இந்த தெய்வீக காட்சியை நினைவுகூறும் வகையில், ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று ஆடித் தபசு விழா கொண்டாடப்படுகிறது.

ஹயக்ரீவர் ஜெயந்தி

ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும். குழந்தைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும், ஞானமும் கிடைத்து சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம்.

ஆடி பௌர்ணமி

ஆடி மாத பௌர்ணமியான இன்று வீட்டின் பூஜையறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மேலும், அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பூக்களால் அர்ச்சனை செய்து சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது.

ஆடி பௌர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லது. பின்பு நைவேத்தியப் பிரசாதத்தை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு ஆடி பௌர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதால் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும். வியாபாரங்களில் எதிர்ப்புகள் நீங்கி லாபங்கள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

இன்று கிரிவலம் செல்ல விரும்புபவர்கள் பௌர்ணமி திதி முடியும் முன்பே அதாவது மாலை 04.51 மணிக்கு முன்பாக கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். ஏனெனில் மாலை 04.52 மணி முதல் பிரதமை திதி தொடங்குவதால் அதற்கு முன்பாக கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top