ஆஷாட நவராத்திரி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆஷாட நவராத்திரி பற்றிய பதிவுகள் :

சாக்த வழிபாடு என்பது அம்பிகையை முதற்கடவுளாகக் கொண்டு வழிபடுவது. நம் நிலத்தின் ஆதி வழிபாட்டு முறையான தாய்த் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடையது. 

ஆதி அன்னையே சகல சக்தியாகவும் திகழ்ந்து சகல உலகங்களையும் காப்பவள் என்பதுதான் இதன் தாத்பர்யம். அன்னையை வழிபடும் விழாக்களில் நவராத்திரி மிகவும் முக்கியமானது. 

பொதுவாக நவராத்திரி என்றதும் நமக்கு புரட்டாசி மாதம் கொண்டாடும் ஆயுதபூஜைக் காலமான மகாநவராத்திரியே நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் காலத்தில் பன்னிரண்டு மாதங்களிலும் பன்னிரண்டு நவராத்திரிகளைக் கொண்டாடும் வழக்கத்தை நம் முன்னோர் கொண்டிருந்தனர். 

காலப் போக்கில் அந்த வழக்கம் குறைந்து முக்கியமான நான்கு நவராத்திரிகளைக் கொண்டாடும் வழக்கமே உள்ளது.

வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி என்னும் இந்த நான்கு நவராத்திரிகளில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. 

ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்ட மாதங்களில் ஒன்று. இந்த மாதம் ஆனிமாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும். 

ஆனிமாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி அடுத்த ஒன்பது நாள்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரிக்கு உரிய தேவி வாராஹி அம்மன்.

வாராஹி அம்மன் சப்த மாதர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். கிராமங்கள் தோறும் அனைத்துக் கோயில்களிலும் சப்த மாதர்களுக்கு என வழிபாட்டுமுறை இருக்கும். காரணம் சப்த மாதர்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அருள்பவர்கள் என்பது நம்பிக்கை. 

பொதுவாகவே ஆனி - ஆடி மாதங்கள் விவசாயத்துக்கு உகந்தவை. இந்த மாதங்களில்தான் புதிய மழை பெய்து நிலம் விதைப்புக்கு உகந்ததாக இருக்கும். எனவே இந்தக் காலத்தில் நாம் வழிபட வேண்டிய தெய்வம் வாராஹி அம்மன். 

அன்னை கைகளில் ஏர்க் கலப்பையும் உலக்கையும் கொண்டு காட்சி தருகிறாள். இதுவே இவள் உழவுத் தொழிலைக் காத்து அருள்பவள் என்பதன் அடையாளம். அதனால்தான் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பெரிய கோயிலில் அன்னைக்குத் தனிசந்நிதி கண்டு வழிபட்டான் ராஜராஜன். 

தஞ்சைப் பெரிய கோயிலில் இப்போதும் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு இந்த நாள்களில் நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்கும அலங்காரம் எனத் தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

பஞ்சமியில் அருளும் வாராஹி
வாராஹியை வழிபட உகந்த திதி பஞ்சமி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை என இருகாலங்களிலும் வாராஹியை வழிபட வேண்டும் என்றாலும் ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

வாராஹிக்குரிய அர்ச்சனை மந்திரங்களில், `ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ’ என்று ஒரு வரி வரும். ஆஷாட மாத பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் பிரியமுடன் ஏற்பவள் அன்னை என்பது இதன் பொருள். 

நவராத்திரியில் பஞ்சமி திதி நடு நாயகமான தினம். அதனாலேயே அவளுக்குப் பஞ்சமி வழிபாடும் ஏற்பட்டது. அன்னைக்கே பஞ்சமி என்ற திருநாமம் உண்டு. அதற்குப் பஞ்சமி திதிக்கு உரியவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள்கொள்ளலாம்.

வாராஹி தேவிக்கு தானியக் கோலமிட்டு வழிபடுவது சிறப்பு. வீட்டில் பஞ்சமி அன்று பூஜை அறையில் விளக்கேற்றி சிறு கோலமிட்டு அதை தானியங்கள் கொண்டு அலங்கரித்து அன்னை வாராஹியை வழிபட்டால் வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

`சதுரங்க சேனா நாயிகா’ என்றொரு திருநாமம் அன்னைக்கு உண்டு. அதாவது லலிதாம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்பது இதன் பொருள். எனவே அன்னையை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளால் உண்டாகும் பயங்களும் பிரச்னைகளும் இல்லாமல் போகும். 

`வாராஹிகாரனிடம் வாதாடாதே’ என்று ஒரு சொல்லாடலே முன்பு இருந்தது. காரணம் வாராஹியை வழிபடுபவர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

துன்பம் தீர்க்கும் துவாதச நாமங்கள்
பிரமாண்ட புராணம் வாராஹி தேவியின் மகிமைகளை விளக்குகிறது. பண்டாசுர வதத்துக்கு லலிதாம்பிகை புறப்படும்போது தேவி வாராஹியும் தன் கிரி சக்கரத்தில் எழுந்தருளினாள். 

அப்போது சுற்றியிருந்த தேவதைகள் வாராஹியை துவாதச நாமங்கள் சொல்லித் துதித்தனர். துவாதசம் என்றால் பன்னிரண்டு. இந்தப் பன்னிரண்டு நாமங்களைச் சொல்லித் துதித்து அன்னையை வழிபட்டால் சகல காரியங்களும் ஸித்தியடையும் என்கிறது பிரமாண்டபுராணம். 

1. பஞ்சமி,

2. தண்டநாதா,

3. சங்கேதா,

4. சமயேஸ்வரி,

5. சமய சங்கேதா,

6. வாராஹி,

7. போத்ரினி,

8. சிவா,

9. வார்த்தாளி,

10. மகா சேனா,

11. ஆக்ஞா சக்ரேஸ்வரி,

12. அரிக்ஞை என்பன அந்த நாமங்கள்.

இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி அன்றும் அன்னையின் சந்நிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க, தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். 

பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால் கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வாராஹி. அன்னையை பஞ்சமி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீவாராஹிதேவிக்கு சில நிவேதனங்கள் விசேஷம். பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, தயிர்சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் இவை அனைத்தும் அன்னைக்குப் பிரியமானவை. 

இவற்றில் ஏதேனும் ஒன்றையோ, இயன்றால் இவையனைத்தையுமோ படைத்து, மற்றவர்களுக்கும் விநியோகித்து வாராஹியை வழிபட்டால் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top