ஆனி அமாவாசை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆனி அமாவாசை பற்றிய சிறப்பு பதிவுகள் :

மாதந்தோறும் வருகிற அமாவாசையில், தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து, முன்னோர்களை ஆராதித்து, அவர்களை வணங்கினால் நாமும், நம் சந்ததியினரும் வளமுடன் வாழ்வோம் என்பது உறுதி. 

இந்த வருட ஆனி அமாவாசையானது வெள்ளிக்கிழமையுடன் வருவதால் சிறப்பு வாய்ந்த நாளாக அமைகிறது.

வெள்ளிக்கிழமை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது மகாலட்சுமி தான். நம் வாழ்வில் செல்வங்களை அள்ளித்தரும் மகாலட்சுமியை அனைத்து தினத்திலும் வணங்கலாம். ஆனால் வெள்ளிக்கிழமையில் வணங்குவது இன்னும் சிறப்பானது.

அதன்படி, வெள்ளிக்கிழமையான இன்று மகாலட்சுமியை வணங்கினால் நம்மையும், நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள்.

அமாவாசை திதி மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையான இன்று வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனால் முன்னோர்களின் ஆசியுடன், மகாலட்சுமியின் பூரண அருளையும் பெறலாம்.

அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாடு செய்வதும், அவர்களுக்குப் படையலிடுவதும் நம் குலத்தைக் காக்கும். குடும்பத்தை மேம்படுத்தும். சந்ததியைச் சிறக்கச் செய்யும்.

முன்னோர் வழிபாடு என்பதும், குலதெய்வ வழிபாடு என்பதும் மிக மிக முக்கியம். முன்னோர்களுக்கு ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலங்கள், திதி, புரட்டாசி மகாளய பட்சத்தின் பதினைந்து நாட்கள் என 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

அந்த வகையில் ஆனி மாத அமாவாசை நாளன்று, முன்னோர்களுக்கு ஆராதனை, தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்தால் பித்ருக்களின் ஆசியைப் பெறலாம்.

ஆனி மாத அமாவாசை தினத்தில், முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, அலங்கரித்து, நமஸ்கரித்து, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து எள்ளும், தண்ணீரும் விட வேண்டும்.

அமாவாசை நாளில் திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

அமாவாசை நாளில், நம் முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அமாவாசை நாளில், மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்து காகத்துக்கு உணவிட்டு முன்னோர்களின் ஆசியை பெறுவோம்.

அதேபோல், மாலையில் வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வப் படத்துக்கு பூக்கள் வைத்து அலங்கரித்து, குலதெய்வத்துக்கு பொங்கலிட்டு வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இதுவரை தடைப்பட்டிருந்த மங்கள காரியங்கள் இனிதே நடந்தேறும். இல்லத்தில் ஒற்றுமையும், சந்தோஷமும் குடிகொள்ளும்.

அமாவாசை நாளில் ஏழைகள், இல்லாதோர் அல்லது இயலாதோர்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்ய, நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top