சோமவார விரத மகிமை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சோமவார விரத மகிமை பற்றிய பதிவுகள் :

சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று பொருள். சோமன் என்றால் பார்வதியோடு சேர்ந்திருக்கும் சிவபெருமான் என்று அர்த்தம். 

சந்திரனுக்கு சோமன் என்ற ஒரு பெயர் உண்டு. இதை முதன் முதலில் சந்திரன் அனுஷ்டித்ததாகவும், அதன் காரணமாகவே இதற்கு சோமவார விரதம் என்று பெயர் வந்ததாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. அவற்றுள் ஒன்று சோம வார விரதம். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.

சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப் பிடிக்கலாம். இதைத் தவிர சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் முதல் திங்கட்கிழமையில் தொடங்கலாம்.

சோமவார விரதம் தோன்றிய வரலாறு:

ஒரு முறை தட்சனின் சாபத்தால் சந்திரன் கொடிய நோயால் துன்பப்பட்டான். தன் சாபம் நீங்கி நோய் குணமாக சிவனை வேண்டி சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட்கிழமைகளிலும் சிவபெருமானை நினைத்து விரதம் அனுஷ்டித்தான், அவனது விரதத்திற்கு மகிழந்த சிவபெருமான், அவனுக்கு தட்சனின் சாபத்திலிருந்து விமோசனம் அளித்தார். 

சிவபெருமானின் அருளால் நோய் நீங்கப் பெற்றதுடன் நவக்கிரகங்களில் ஒருவரானார். சந்திரன் பெயரால் தோன்றியதே சோமவாரம் (திங்கட்கிழமை) மற்றும் சந்திரன், சோம வார விரதத்தின் மகிமையால் எம்பெருமானின் சடாமுடியில் இளம் பிறையாக அமரும் பாக்கியமும் பெற்றான். 

இவ்வாறு சந்திரனை தனது முடியில் சூடி அருளிய சிவபெருமான் சந்திர சேகரர், சந்திர மௌலீஸ்வரர், சோம சுந்தரர், சோமநாதர், சசாங்க சேகரர், சசிதரர், சசி மௌலீஸ்வரர், சசிசேகரர் என்று வழிபடப்படுகிறார்.

‘சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும்’ என்று சந்திரன் வேண்டுதலுக்கு இணங்கி, சிவபெருமான் அவ்வாறே அருளினார்.

பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதம் என்ற இடத்தில் சந்திரன் சிவபெருமானுக்கு சோம வார விரதம் இருந்து, அவர் ஜடாமுடியில் இளம் பிறையாக அமர்ந்தான் என்பது ஐதீகம்.

சந்திரனின் நல்வாழ்வுக்காக மனைவி ரோகிணியும் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள்.

சோமவார விரதத்தின் முறை:

மாதத்தின் முதல் திங்கள்கிழமை தொடங்கி கடைசி திங்கள் அன்று இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஆண், பெண்கள் இருவரும் கடைப்பிடிக்கலாம். 

“திங்கள்கிழமை விடியற் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு, பெண்கள் வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கி, சிவபெருமானை வணங்கி, சர்க்கரை பொங்கல், பாயசம் போன்றவற்றை நைவேத்தியம் செய்து, சிவாஷ்டகம், சிவ புராணம் படிக்கலாம் மற்றும் சிவ அஷ்டோத்திரங்களை சொல்லலாம். 

பிறகு கோயிலுக்கு சென்று சிவனுக்கு வில்வத்திலும், சக்திக்கு குங்குமத்தாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். அத்துடன் கோயிலுக்கு வரும் அன்பர்களுக்கு உங்களால் முடிந்ததை பிரசாதமாக கொடுக்கலாம். 

கோயிலுக்கு வந்திருக்கும் ஒரு வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக தியானித்து மஞ்சள், குங்குமம் தாம்பூலம் கொடுத்து, அவர்களை வணங்கி ஆசி பெறலாம்.

இந்த விரதம் மேற்கொள்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பில்லாத உணவை சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் உண்ணலாம். 

பின்பு மாலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடலாம். இந்த நாளில் ஒரு வேளையேனும் உணவருந்தாமல் இருப்பது நன்மை பயக்கும்.

புராணத்தில் சோமவார விரதத்தின் பலன்கள்:

“வசிஷ்டருக்கு அருந்ததி வாய்த்ததும், சோம சர்மனுக்கு செல்வம் கிடைத்ததும், தன்மவீரியன் நற்கதி அடைந்ததும், கற்கருக்கு குழந்தைப் பேறு கிட்டியதும், கார்த்திகை சோம வார விரதத்தின் மகிமை என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. 

விரதத்தை முறையாக கடைப்பிடித்தால், அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல கோடியாண்டு இன்னல் இல்லாமல் வாழ்வார்கள்” என்கிறது கந்த புராணம்.

சோமவார விரதம் இருப்பதினால் பலன்கள்:

சோமவார விரதத்தை ஆண்களும், பெண்களும் அனுஷ்டிக்கலாம். இந்த விரதம் மேற்கொள்ளும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள். 

உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெறும். தாயாருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளும் நீங்கும். கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும். 

அன்றைய தினம் முழுவதும் “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை இடைவிடாது மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தால் வாழ்வில் அனைத்து நலங்களும் கிடைக்கும்.

நாமும் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து பார்வதி சமேத சிவபெருமானின் அருளைப் பெறுவோமாக.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top