இந்த வருட கிருஷ்ணர் ஜெயந்தியின் சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இந்த வருட கிருஷ்ணர் ஜெயந்தியின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தியாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். ஆவணி மாத தேய்பிறையின் எட்டாவது நாளான அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில், ரிஷப லக்னத்தில், புதன்கிழமை நள்ளிரவில் மதுராவில் உள்ள சிறையில் கிருஷ்ணர் அவதரித்ததாக ஸ்ரீமத் பகவத் புராணம் சொல்கிறது. அதனால் பகவான் கிருஷ்ணரின் அருளை பெறுவதற்காக அவர் அவதரித்த நாளில் மக்கள் பலர் விரதம் இருப்பது வழக்கம்.

உலகில் மிக சிறப்பாக, கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான்கிருஷ்ண ஜெயந்தி. கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த பண்டிகை திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை போற்றும் விழாவாகும்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணரை குழந்தையாக பாவித்து வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சி, செல்வ வளம், நிறைவான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு மகாலட்சுமியின் பரிபூரணமான அருள் கிடைக்கும்.

குறிப்பாக பல காலமாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து, குழந்தை கிருஷ்ணரை வழிபட்டால், அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள் கிருஷ்ணரே வீட்டில் குழந்தையாக வந்து பிறப்பார் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் இந்த வருடத்தின் கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்று காலை 09.02 மணிக்கு அஷ்டமி திதியும், இரவு 09.41 மணிக்கு ரோகிணி நட்சத்திரமும் துவங்குகின்றன.

ஆகஸ்ட் 26ம் தேதி பகல் முழுவதும் கிருத்திகை நட்சத்திரமே உள்ளது. ஆனால் வேத பஞ்சாங்கங்களின் அடிப்படையில் கிருஷ்ணர் அவதரித்தது நள்ளிரவில் தான் என்பதால், இரவு 12.01 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி பூஜைகளை துவங்கி, அதிகாலை 12.45 மணிக்கு நிறைவு செய்யலாம் என சொல்லப்படுகிறது.

நள்ளிரவில் செய்யப்படும் இந்த பூஜைக்கு நிஷித கால பூஜை என்று பெயர். ஆகஸ்ட் 27ம் தேதி காலை 05.57 மணிக்கு பிறகு பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

மேலும் நெய் சேர்த்து சமைத்த இனிப்பு வகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் வைத்து பூஜை செய்தால் கிருஷ்ணரின் அருள் கிடைக்கும் என்று ஆன்மீக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top